Tuesday, May 7, 2013

தாயுமானவர் பாடல் - இராவாணாகாரம்


தாயுமானவர் பாடல் - இராவாணாகாரம் 

தாயுமானவர் - மிகப் பெரிய ஞானி.

1452 பாடல்கள் எழுதி உள்ளார். மிக மிக எளிமையான பாடல்கள்.

வல்லாருக்கும், பாரதியாருக்கும் இவர் பாடல்கள் என்று கூறுவோரும் உண்டு. அத்துணை எளிமை.

வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வாழ்ந்து, இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தார்.

ஒரு பொருளின் மேல் முதலில் ஆசை வரும். அது கையில் கிடைத்துவிட்டால் ஆணவம் வரும். என்னை போல் இந்த உலகில் யார் உண்டு ? நினைத்ததை முடிப்பவன் நான் என்ற ஆணவம் வரும். கிடைக்க வில்லையென்றால் ஆங்காரம் வரும். அந்த ஆங்காரம், ஆணவத்தை விட மோசமானது.

அறிவை மயக்கும் நாடு நிலை தவற வைக்கும். எதை எடுத்தாலும் அதுவாய் மாறிடும். வாயில் வந்த படி பேசும். மும்மூர்த்திகளும் நான் தான் என்று சொல்லும்.....

இப்படி சொல்லிக் கொண்டே தாயுமானவர் இந்த பட்டியலுக்கு முடிவு வேண்டுமே என்று முடிவில் இராவணாகாரமாகி விடும் என்றார்

அது என்ன இராவணாகாரம் ?

வீரத்திலும், பக்தியிலும் சிறந்தவன் இராவணன்.

சீதை மேல்  ஆசைப் பட்டான். புத்தி வேலை செய்வது நின்றது. வீரம் போய் குறுக்கு புத்தி வந்தது. கள்ளமாய் அவளை கவர்ந்து வந்தான். இராமனோடு சண்டை போட்டான். தன் சொந்த மகனை போரில் இழந்தான்.

இத்தனைக்கும் காரணம் அந்த சீதை தானே, அவளை கொன்று விடுகிறேன் என்று புறபட்டான்.

அவள் வேண்டும் என்று தானே தூக்கி வந்தான். அவளுக்காகத்தானே இத்தனை  போர். மகனையும் இழந்தான். இப்போது அவளை கொல்லுவேன் என்கிறான். தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆங்காரம்.

பாடல்

ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
       ஆணவத் தினும்வலிதுகாண்
    அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
       யாதொன்று தொடினும் அதுவாய்த்
தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
       தம்மொடு சமானமென்னுந்
    தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
       தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
       திராவணா காரமாகி
    இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
       திருக்கும்இத னொடெந்நேரமும்
வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ
       மௌனோப தேசகுருவே
    மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
       மரபில்வரு மௌன குருவே.


பொருள்:




ஆங்கார மானகுல வேடவெம் பேய் = ஆங்காரமான, வேடர்களை போல் எப்போதும் கொலை தொழில் செய்யும் அந்த வெம்மையான பேய்

பாழ்த்த = பாழ் படுத்த

ஆணவத்தினும் வலிது காண் = ஆணவத்தை விட வலிமையானது

அறிவினை மயக்கிடும் = அறிவினை மயக்கிடும்


நடுவறிய வொட்டாது = நாடு நிலைமை அறிய விடாது (எது சரி எது தவறு என்று அறிய விடாது )

யாதொன்று தொடினும் = எதை தொட்டாலும்

அதுவாய்த் = அதுவாய் மாறிவிடும்

தாங்காது மொழிபேசும் = பொறுக்க முடியாமல் மொழி பேசும்


 அரிகரப் பிரமாதி = அரி , அரன் , பிரம்மா

தம்மொடு சமானமென்னுந் = அவர்களுக்கு நிகர் என்று பேசும்

தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே = தடை இல்லாமல் செல்லும் தேருக்கு அச்சாணி போல

தன்னிலசை யாதுநிற்கும் = எல்லாம் அசைந்தாலும் தான் மட்டும் அசையாமல் நிற்கும்

ஈங்காரெ னக்குநிகர் = ஈங்கு யார் எனக்கு நிகர்

என்ன ப்ர தாபித் = என்று பிரதாபித்து

திராவணா காரமாகி = இராவணாகாரமாகி


இதயவெளி யெங்கணுந் = இதய வெளி எங்கும்

தன்னரசு நாடு செய்திருக்கும் = நாட்டாமை செய்து கொண்டிருக்கும்

இத னொடெந்நேரமும் = இதனோடு எந்நேரமும்

வாங்கா நிலாஅடிமை போராட முடியுமோ = விலகி நில்லாமால் போராட முடியுமோ

மௌனோப தேச குருவே = மௌன உபதேச குருவே

மந்த்ர குருவே = மந்திர குருவே

யோக தந்த்ர குருவே = யோகா தந்திர குருவே

மூலன் மரபில் வரு மௌன குருவே.= மூல மரபில் வரும் மௌன குருவே

மௌன குரு என்பவர் தாயுமானவரின் குரு.


1 comment:

  1. உரை இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது.

    கம்ப ராமாயணம் எவ்வளவு வார்த்தை அழகும், பொருட் செறிவும் கொண்டிருக்கிறது! இந்த மாதிரி "கடா முடா" என்று இல்லை.

    ReplyDelete