Monday, May 20, 2013

தேவாரம் - நின் திருக்கருணை இருந்தவாறே

தேவாரம் - நின் திருக்கருணை இருந்தவாறே 


திருநாவுக்கரசர் இறைவனிடம் உருகுகிறார்.

நான் என்ன செய்துவிட்டேன் என்று நீ என் தவறுகளை எல்லாம் பொறுத்து, மன்னித்து, என்னை உன்னோடு அரவணைத்து, என்னை ஆட்கொண்டாய்...உன் கருணையை, ஐயோ, நான் என்னவென்று சொல்லுவேன் 

பாடல்

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.

சீர் பிரித்த பின்

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் 
அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் 
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய் 

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொருத்தாய் அன்றே 
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ 
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே 

பொருள் 





அத்தா = தந்தையே

உன் அடியேனை = உன்னுடைய அடியேனாகிய என்னை

அன்பால் ஆர்த்தாய் = அன்புடன் அணைத்துக்  கொண்டாய். ஆர்த்தல் = புனைதல்
 
அருள் நோக்கில் = உன்னுடைய அருள் தரும் பார்வையால்

தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய் = தீர்த்தமாகிய நீரால் என் பாவங்களை கழுவி என்னை ஆட் கொண்டாய்.

எத்தனையும் அரியை = அரியது என்றால் அபூர்வமானது. எவ்வளவு அபூர்வமானவன் நீ.

 நீ எளியை ஆனாய் = எனக்காக எளியவன் ஆனாய்

எனை ஆண்டு கொண்டு = என்னை ஆட் கொண்டு

இரங்கி ஏன்று கொண்டாய் = என் மேல் இரக்கம் கொண்டு என்னை ஏற்றுக் கொண்டாய்


பித்தனேன் = ஒரு வழி நில்லாதவன்

பேதையேன் = எது சரி எது தவறு என்று அறியாதவன்

பேயேன் = பேய் போல் திரிபவன்

நாயேன் = இழிந்தவன்

பிழைத்தனகள் = என் பிழைகள் 

எத்தனையும் பொருத்தாய் அன்றே = அத்தனையும் பொருத்தாய் 
 
இத்தனையும் எம்பரமோ = இத்தனையும் எனக்காகவா ?

ஐய ஐயோ = ஐய ஐயோ 

எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே = உன் திருக்கருணையின்  தன்மை இப்படியே இருக்கிறது 


No comments:

Post a Comment