Sunday, May 5, 2013

திருவாசகம் - சிறைபடா நீர் போல்


திருவாசகம் - சிறைபடா நீர்  போல் 


இறை அருளை பெற என்ன செய்ய வேண்டும் ?

ஒன்றும் செய்ய வேண்டாம் !

ஒண்ணும் செய்ய வேண்டாமா ? அப்புறம் இந்த பக்தி, பூஜை, புனஸ்காரம் எல்லாம் எதுக்கு ? அது எல்லாம் வேண்டாமா ?

வேண்டாம்.

இது என்ன புது கதையா இருக்கு. ஒண்ணும் புரியலையே.

சொல்லுவது நான் அல்ல. மாணிக்க வாசகர்.

மலையில் இருந்து கீழே வரும் வெள்ளம். அதை சிறை படுத்தி வைக்க முடியாது. அணை கட்டி வைத்தாலும் ஆவியாகப் போய் விடும். எப்படி தடுத்தாலும் நீர் கசிந்து கசிந்து கீழ் நோக்கி பாய்வதை தடுப்பதை கடினம்.

இறை அருள் என்ற வெள்ளம் உங்கள் மனம் என்ற இடம் நோக்கி பாய்ந்து வரும். நீங்கள் அதை காலியாக வைத்து இருங்கள்.

அந்த வெள்ளம் நம்மிடம் வர முடியாமல், நாம் அதில் குப்பைகளை போட்டு நிரப்பி வைத்திருக்கிறோம். பள்ளம் இருந்தால் தானே அதில் நீர் வந்து பாய முடியும்?

அத்தனை ஆசை, கோபம், காமம், லோபம், வேற்றுமை உணர்வுகள், அச்சம், பொறாமை என்ற குப்பைகள்.

இந்த குப்பைகளை எடுத்து எறிந்து விட்டு, மனதை சுத்தமாய் வைத்திருங்கள். அருள் வெள்ளம் உங்கள் உள்ளத்தை தானே நிரப்பும்

ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்றார் திருமூலர்

பாடல்


குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
    ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
    மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
    திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
    இனியுன்னை யென்னிரக் கேனே.  


பொருள்






குறைவிலா நிறைவே = குறையே இல்லாத நிறைவு. அது என்ன குறை இல்லாத நிறைவு ? நிறைவு என்றாலே குறை இல்லாதது என்று தானே அர்த்தம் ? உலகில் உள்ள பொருள் எல்லாம் முதலில் குறை போல் இருக்கும், அதை அடைந்தவுடன் நிறைவு வந்தது போல் இருக்கும், பின் சிறிது காலம் கழித்து அது போதாது என்ற குறை உணர்வு வரும்.

எவ்வளவு பணம் வந்தால் நிறையும் ? எவ்வளவு உணவு உண்டால் நிறையும் ? இந்த நிறைகள் எல்லாம் குறைவை தன்னுள்ளே கொண்டவை. இறை அப்படி அல்ல. இறை அருள் வரும்போது குறைவே கிடையாது.

கோதிலா அமுதே = கோது என்றால் குற்றம், குறை. குறையே இல்லாத அமுதம். உலகில் நாம் எதை எடுத்துக் கொண்டால் அததுக்கு ஒரு பக்க விழைவு இருக்கும். ஒவ்வொரு நல்லதுக்கு பின்னாலும் ஒரு கெடுதல் இருக்கும். Side  effect என்று சொல்லுவார்கள். குறை எல்லாத நிறை இருக்கிறதா ? இறைவன் குறையே இல்லாத அமுதம் போன்றவன்.


ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே = முடிவே இல்லாத, எல்லை இல்லாத மலை போன்ற பேரொளி கொண்ட சுடர். உலகில் உள்ள சுடர் எல்லாம் ஒரு நாள் இல்லாவிட்டால் அணைந்து விடும். இறை என்னும் தீபம், ஜோதி அணையா விளக்கு. ஈறில்லா சுடர். 


மறையுமாய் மறையின் பொருளுமாய் = வேதமும், அதன் பொருளுமாய். நிறைய பேர் நிறைய படிப்பார்கள். அதன் பொருள் தெரியாது. கவி உள்ளம் தெரியாது. அறிவு இருக்கும். அனுபவம் இருக்காது. அவன் வேதம், அதன் பொருளும் அவன். சொல்லும் பொருளும் என நடமாடும் என்பார் அபிராமி பட்டர்.

வந்தென் மனத்திடை மன்னிய மன்னே = அவனே வந்து நம் உள்ளத்திற்குள் வருகிறான். நாம் அவனை பிடித்து இழுத்துக் கொண்டு வர முடியாது. அவன் எப்படி இருப்பான் என்று தெரிந்தால் அல்லவா அவனை கொண்டு வர முடியும்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. மன் என்றால் இரகசியம், நிரந்தரம் என்று இரண்டு பொருள். என் மனதில் வந்து நிரந்தரமாய் நிறைந்த மறை பொருளே.


சிறைபெறா நீர்போல் = எதற்கும் கட்டுப் படாத நீர் போல்

சிந்தைவாய்ப் பாயுந் = என் சிந்தனை வசம் பாயும்.

திருப்பெருந் துறையுறை சிவனே = திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறையும் சிவனே

இறைவனே = இறைவனே


நீயென் உடலிடங் கொண்டாய் = நீ என் உடலில் வந்து குடி கொண்டாய்

இனியுன்னை யென்னிரக் கேனே. = இனிமேல் உன்னை நான் எப்படி வணங்குவேன் ? என்ன வேண்டுவேன் ? நீயும் நானும் ஒன்றான பின் யார் யாரை வேண்டுவது ? தேடிய பொருள் கிடைத்து விட்டால் அப்புறம் தேடல் நிற்க வேண்டியதுதானே.





2 comments:

  1. என்ன ஒரு அருமையான பாடல் அதற்க்கு அவ்வளவு அருமையான விளக்கம். superb.

    ReplyDelete
  2. சும்மா இதே பாடலைப் படித்தால், நீ காட்டியிருக்கும் அத்தனை அர்த்தங்களையும் உணர முடியாது. இனிமையான, ஆழமான விளக்கங்கள் தந்ததற்கு நன்றி.

    திருமூலர் பாடல்கள் திருவாசகம் போலே உருக்கவில்லை, அனால் உள்ளர்த்தம் நிறைந்தவை போலே இருக்கின்றன (இதுவரை உன் blog-இல் படித்ததை வைத்துச் சொல்கிறேன்).

    தமிழ் இன்பத்தை இவ்வளவு சுவைக்கும் வாய்ப்பு இந்த blog மூலம் பெறக் கொடுத்து வைத்திருக்கிறேன்.

    ReplyDelete