Wednesday, May 8, 2013

இராமாயணம் - வாலியின் வாலின் வலிமை


இராமாயணம் - வாலியின் வாலின் வலிமை 


மிக வேகமாக செல்லக் கூடியது என்றால் காற்று. அந்த காற்று கூட ஓட்டப் பந்தயம் வைத்தால் வாலியிடம் தோற்றுவிடும். வாயுவால் வாலியை முந்த முடியாது. அவ்வளவு வேகமாக செல்லக் கூடியவன் வாலி.

முருகன் கிரௌஞ்ச மலையை தன் வேலால் துளைத்தவன். மலையை துளைத்த அந்த வேல் கூட வாலியின் மார்பை துளைக்காது.  வேலை எறிந்தவன் முருகனாக இருந்தால் கூட. அவ்வளவு வலிமை மிக்க மார்பு.

ஒரு ஊருக்கு இராவணன் போகிறான் என்றால் முதலில் அங்கு உள்ளவர்களை "இங்கு வாலி வந்தானா" என்று கேட்பான்.

"வாலி இங்கு வரவில்லை, ஆனால் அவன் பக்கத்து ஊருக்கு வந்தான், அப்படி வந்த போது அவன் வால் இந்த ஊர் பக்கம் வந்து சென்றது " என்று சொன்னால் போதும், இராவணன் அந்த ஊருக்குள் போக மாட்டான். வாலியின் வாலுக்கு அப்படி பயப்படுவான் இராவணன்.

வாலி எவ்வளவு பெரிய வலிமையானவன் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்

பாடல்


கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது, இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ


பொருள்






கால் செலாது அவன் முன்னர் = கால் என்றால் காற்று. ஜன்னலுக்கு தூய தமிழ் பெயர் காலதர். கால் + அதர் = காற்று வரும் வழி. வாலிக்கு முன்னால் காற்று கூட செல்ல முடியாது. அவ்வளவு வேகமாக செல்வான்

கந்த வேள் வேல் செலாது அவன் மார்பில் = அவனுடைய மார்பில் முருகனின் வேல் செல்லாது


வென்றியான் = வெற்றி பெற்றவனின் (எல்லோரையும்)

வால் செலாத வாய் அலது = வாய் என்றால் வழி. அவன் வால் சென்ற இடங்களில் (செல்லாத, அலது இரண்டு எதிர்மறை சொற்கள்) 

இராவணன் கோல் செலாது = இராவணனின் செங்கோல் செல்லாது (அவன் அதிகாரம் செல்லாது)


அவன் குடை செலாது அரோ = அவனுடைய வெண் கொற்ற குடை செல்லாது

இது போதுமா ? வாலியின் பலம் பற்றி அறிய இன்னும் வேண்டுமா ?



6 comments:

  1. முருகன் அம்பு துளைக்காது, ஆனால் இராமன் அம்பு துளைத்து விட்டது. எனவே, இராமன் முருகனைவிடச் சிறந்தவன்! சரியா?

    ReplyDelete
    Replies
    1. இராமன் அம்பு துளைத்ததா ?

      Delete
    2. ராமனை விட வில் ஆற்ற லில் சிறந்தவன் சம்பூகன்
      நீர் இதை ஏற்பீரா?

      Delete
  2. ஒளிந்து நின்றுகொண்டல்லவா வில்லெறிந்தான் வாலியை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் அவனிடம் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. Arumai, inga Ramana'vida Raavanane better. Avanachum nerukuner ninru thotru Ponaan.

      Delete
  3. என்ன அறிமுகம்!!!

    ReplyDelete