Thursday, May 30, 2013

இரணியன் வதம் - இரணியன் போருக்கு புறப்படுதல்

இரணியன் வதம்  - இரணியன் போருக்கு புறப்படுதல் 


அவ்வளவு பெரிய நரசிங்கத்தை கண்டு இரணியன் கொஞ்சம் கூட பயப்படவில்லை.

காரணம் - அவன் பெற்ற வரங்கள். அவன் வலிமை.

நரசிங்கத்தை சண்டைக்கு அழைக்கிறான். அதுவும் ஏக வசனத்தில்....

பிரகலாதன் சொன்ன அரி நீதானா ? கடலில் ஒழிந்தது போதாது என்று இந்த தூணிலும் வந்து ஒளிந்து கொண்டாயா ? சண்டைக்கு வருகிறாயா ? வா...வா...என்று கிளம்பினான் தன் புகழ் எங்கும் தடையின்றி செல்லும் தன்மை கொண்ட இரணியன்...அவன் எழுந்து புறப்பட்ட போது இந்த உலகம் எல்லாம் பெயர்ந்தது....

கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்....ஒரு புறம் ககன முட்டை கிழிய சிவந்த கண்களை கொண்ட சிங்கம்.....வானுக்கும் மண்ணுக்கும் நிற்கிறது....இன்னொரு புறம் மிக வலிமை வாய்ந்த இரணியன்....சண்டை ஆரம்பாகப்  போகிறது....


பாடல்

 "ஆர் அடா சிரித்தாய் ? சொன்ன அரிகொலோ ? அஞ்சிப் புக்க
நீர், அடா ? போதாது என்று, நெடுந் தறி நேடினாயோ ?
போர் அடா ? பொருதிஆயின், புறப்படு ! புறப்படு !" என்றான் -
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் பேர்வான்.


பொருள் 



 "ஆர் அடா சிரித்தாய் ? = யார்ரா நீ சிரிகிறது ?


சொன்ன அரிகொலோ ? = இவன் சொன்ன அரி நீ தானா ?

அஞ்சிப் புக்க = அச்சப் பட்டு ஒளிந்து கொள்ள

நீர், அடா ? போதாது என்று = கடல் போதாது என்று (சும்மா ஒரு அடா போட்டு பேசுகிறான். தலைக்கனம், இறுமாப்பு )

நெடுந் தறி நேடினாயோ ? = இந்த தூணை நாடி வந்தாய ஒளிந்து கொள்ள

போர் அடா ? = போரிடலமா ?

பொருதிஆயின், புறப்படு ! புறப்படு !" என்றான் = சண்டை போடா வேண்டும் என்றால், வாட வா

பேர் அடாநின்ற = அவனுடைய பேர் எங்கும் தடை பட்டு நிற்காத

தாளோடு = கால்களோடு 

உலகு எலாம் பெயரப் பேர்வான் = உலகமே பெயர்ந்து விழும்படி நடந்து போனான்

இலக்கியத்தில் கடினமான பகுதி ஒரு யுத்தத்தை சுவாரசியமாக விளக்குவது. காதலை, கண்ணீரை, அன்பை, வெறுப்பை, பகையை சொல்லி விடலாம். சண்டையை  அழகாக சொல்லுவது கடினம்.

ஆங்கில இலக்கியத்தில் பெரிதாகப் பேசப் படும் ஷேக்ஸ்பியர் கூட தன் எந்த நாடகத்திலும் யுத்தம் பற்றி நிறைய சொல்ல வில்லை.

அனுபவமும்ல் கற்பனையும் வேண்டும்.

கம்பன் அதிலும் தான் வல்லவன் என்று காட்டுகிறான்.

மிக கோரமான யுத்தத்தை அப்படியே நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறான்.

படிக்கும்போது மெய் சிலிர்க்கும், இரத்தம் தெறிக்கும், புகை வாடை மூக்கில் ஏறும், ஓலம் செவியை துளைக்கும்....

படித்துவிட்டு சொல்லுகிறேன். இனி வரும் பாடல்களைப் பாருங்கள்.


2 comments:

  1. நிசமாகவே ஒரு போரைப் பார்ப்பது போல இருக்கிறது!

    ReplyDelete
  2. திச்சலித்து மாதாயன் தின்னக்கால் கண்டு அவைகண்டு வாழ்,
    இச்சரவையகம் வஞ்சக்கை கள்வன் சலித்தாள் ஊன்வினை,
    அறியமா உணர்வுறு திருப்பையூர் அன்புமற் வைத்து உயிர்காத்த,
    நீறிய ஒன்பதுவல்வாய்த் செஞ்சோலை மாயக் வன்னாகழுக்கள்,
    கவிகோள் தோல்விபைக்கு கவியாய் தலைப்படும் வந்து தன்,
    தவிநெஞ்சுமின் வான்பற்றி முயிரு மறை முள் துதித்து,
    துலந்து நெஞ்சே நின்றார் வண்ணம் என் நெஞ்சு சொல்லிடின்,
    கலந்த முயிரும் தானே யாகி நின்றாயே…….!!! யாருக்கவது இதன் பொருள் தெரியுமா?

    ReplyDelete