Tuesday, May 21, 2013

வாலி வாதம் - விடை இல்லாத வினாக்கள்

வாலி வாதம் - விடை இல்லாத வினாக்கள் 


இராமன் அம்பை எய்து விட்டான் என்று போன ப்ளாகில் பார்த்தோம்.

விடை இல்லாத வினாக்கள் பல தொக்கி நிற்கின்றன.

1. இராமன் ஏன் வாலியை கொல்ல நினைத்தான் ? வாலி அவன் தம்பியான சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்பது ஒன்றுதான் ஒரே குற்றச் சாட்டு. வாலி அப்படி செய்தானா ?

2. சுக்ரீவனின் மனைவியின் பெயர் ரூமி. வால்மீகியோ, கம்பனோ அவளை ஒரு இடத்திலும் பேச வைக்க வில்லை. ஏன் ?

3. வாலி இறந்த பின், அவன் மேல் விழுந்து புலம்பும் தாரை, அதை பற்றி ஒண்ணுமே சொல்லவில்லை. இராவணன் இறந்த பின் புலம்பும் மண்டோதரி, இராவணின் காதல் பற்றி பேசுகிறாள். "கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்" என்று பேசுகிறாள். பாதிக்கப்பட்ட தாரை ஏன் அப்படி ஏன் எதுவும் சொல்லவில்லை ?

4. வாலி இறந்த பின், வாலியின் மனைவியான தாரையை சுக்ரீவன் மனைவியாக கொண்டான் என்று வால்மீகி சொகிறார். கம்பன் அப்படி சொல்லவில்லை. தாயாக நினைக்க வேண்டிய அண்ணனின் மனைவியை தாரமாக கொண்டது சரியா ? அதற்க்கு இராமனும் உடந்தை ? வாலிக்கு ஒரு நீதி , சுக்ரீவனுக்கு ஒரு நீதியா ?

5. வாலி, சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று எப்படி தெரியும் ? சுக்ரீவன் சொல்கிறான். சுக்ரீவன் சொற்கள் அவ்வளவு நம்பும்படியானவை  அல்ல. மாயாவி பற்றி அவன் இராமனிடம் சொன்னவை சரியானவை அல்ல. அவன், தன் மனைவியை விட்டு விட்டு ஓடி இருக்கலாம். இராமனின் துணை வேண்டி , வாலி தன் மனைவியை கவர்ந்து கொண்டதாக பொய் சொல்லி இருக்கலாம் அல்லவா ?

6. அனுமனும், சுக்ரீவன் சொன்னதையே சொல்கிறான். அனுமன் பொய் சொல்ல வேண்டிய  அவசியம் இல்லை. ஆனால், அனுமனுக்கு எப்படி தெரியும் ? சுக்ரீவன் சொல்லித்தான் அனுமனுக்கு தெரிந்திருக்கும். அனுமன் சுக்ரீவனிடம்  மிகுந்த பற்று கொண்டவன் அல்ல. வாலி இறந்த பின், அனுமன் இராமனிடம் தான் இராமன் கூடவே இருந்து விடுவதாக சொல்கிறான். ஒரு அமைச்சனாக  அவன் தன்னை நினைக்கவில்லை. எனவே, அனுமனுக்கும் சுக்ரீவனுக்கும் உள்ள  உறவு அவ்வளவு ஆழமானது அல்ல. இருவரும் ரிஷ்ய முக  பர்வதத்தில் சந்தித்து இருக்கலாம். சுக்ரீவன் கொஞ்சம் build  up  பண்ணி அனுமனை தன் அமைச்சனாக ஆக்கி இருக்கலாம்.

7. இராவண வதைக்குப் பின்னால், அனுமன் மீண்டும் சுக்ரீவனிடம் போக வில்லை. எனவே, அனுமன், இராமனிடம் சொன்னது எல்லாம், அவனுக்கு சுக்ரீவன் சொன்னதாகத் தான்  இருக்க வேண்டும் என்று நினைக்க இடம் இருக்கிறது.

8. வாலி தவறு செய்தவனா ? வாலி இறந்தபின், இராமன் , அனுமனிடம் சொல்கிறான் "ஒரு சிறந்த அரசன் இறந்த பின் புதிதாக வரும் அரசன் மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டி வரும்...எனவே நீ அவன் கூட இரு " என்று சொல்கிறான். இது இராமன் வாலிக்கு தந்த சான்றிதழ்.

9. இராமன் சுக்ரீவனை ஆராயாமல் நட்பு கொண்டானா ? இராமனை கண்டவுடன் , சுக்ரீவன் ஓடி ஒளிகிறான். இராமனும் இலக்குவனும் வாலியின் அடியாட்கள்  என்று நினைத்துக் கொண்டு. அப்படி பட்ட அறிவு உள்ளவன் சுக்ரீவன். அதை தெரிந்தும் அவனுடன் நட்பு கொள்கிறான் இராமன். ஏன் ?

10. சரி வாலி தவறு செய்தான் என்றே வைத்துக் கொள்வோம். ஏன் மறைந்து இருந்து கொல்ல  வேண்டும் ?

11. ஏன் என்றால், நேரில் வந்தால் வாலியும் சரணாகதி அடைந்து விடுவான், அதை தவிர்க்க  மறைந்து நின்று கொன்றான் என்கிறான் இலக்குவன். இது என்ன வாதம் ? அன்ன தானம் என்று அறிவித்து விட்டு, எல்லோரும் வந்தால் உணவு பத்தாதே என்று கதவை அடைப்பது மாதிரி.

12. வாலி சரணாகதி அடைந்தால் என்ன ? விபீஷணன் சரணாகதி அடையவ வரும்போது, விபீஷணன் என்ன அந்த இராவணனே வந்தாலும் அவனுக்கு அடைக்கலம் அளிப்பேன் என்கிறான் இராமன். மனைவியை கவர்ந்து சென்றவனுக்கே  அடைக்கலம் தருவேன் என்றால், வாலிக்கு தந்தால் என்ன ?

13. இராவணனிடம் இரண்டு முறை தூது விட்டான் இராமன். ஏன் வாலியிடம் தூது விடவில்லை ? இராமன் மேல் அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவன்  வாலி. இராமன் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் வாலி இராமன் சொன்ன படி  செய்து இருப்பானே. ஏன் அவனை கொல்ல வேண்டும் ?

14. வாலி முன்னால் போய் நின்றால் தன் பலத்தில் பாதி அவனுக்கு போய் விடும் என்ற பயமா ? அப்படி ஒரு வரம் கொஞ்சம் மிகை படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. அது உண்மை என்றால் , வாலி மாயவியுடன் 25 மாதங்களுக்கு மேலாக சண்டை போட்டானே , அது எப்படி ?

15. வாலிக்கு ஒரு வரம் இருப்பதைப் போல், இராமனுக்கும் ஒரு வரம் இருக்கிறது. இராமனின் அம்பு இலக்கை ஒரு போதும் தப்பாது. அப்படி என்றால் , இராமன் நேரில் நின்று அம்பு எய்தாலும் வாலி இறந்து இருப்பான். பின் ஏன் , மறைந்து இருந்து அம்பு எய்தான் ?

16. வாலியிடம் நட்பு கொள்ளாமல், ஏன் சுக்ரீவனிடம் நட்பு கொண்டான் ? சபரி கூறினாள்  சுக்ரீவனிடம் நட்பு கொள்ளச் சொல்லி . அது அவ்வளவு சரியாக இல்லை ஏன் என்றால் , ஆதியோடு அந்தமாக சுக்ரீவனின் கதையை இராமன் கேட்கிறான் அவனிடமே. சபரி சொல்லி இருந்தால், மீண்டும் அதை கேட்க்க வேண்டிய அவசியம் என்ன ?


17. சுக்ரீவனின் ஒரு பக்க கதையை மட்டும் கேட்டு விட்டு இராமன் முடிவு எடுக்கிறான்...."தலைமையும் தாரமும் உனக்கு தருவேன் " என்று. வாலியிடம் கேட்க்க வேண்டாமா ?  ஆராயாமல் முடிவு எடுப்பது நல்ல அரசனுக்கு அழகா ?

18. தாரம் - சரி. தலைமை ஏன் ? வாலி தானே மூத்தவன் ? அவன் உயிரோடு இருக்கும் போது சுக்ரீவன் எப்படி அரசு ஆள  முடியும் ?


19. வாலியின் அத்தனை கேள்விகளுக்கும் இராமன் பதில் சொல்லவில்லை. இலக்குவனே பதில்  சொல்கிறான் . ஏன் ?



20. இராமனே தான் தவறு செய்ததாக ஒப்பு கொள்கிறான். " நீ இதை பொறுத்தி என்றான் " என்று வாலியின் மகன் அங்கதனிடம் சொல்கிறான்.. அப்படி சொன்னவுடன்   வானவர்கள் இராமனை வாழ்த்தினார்கள். தவறு செய்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் செய்தான் ?

வால்மீகியோ கம்பனோ விடை தரவில்லை.

நாம் யோசிப்போம்


2 comments:

  1. கஷ்டமான கேள்விகள். இந்த அளவு ரூம் போட்டு நான் படித்ததில்லை, யோசித்ததில்லை! நன்றி.

    ReplyDelete
  2. அருமையான கேள்விகள்.

    ReplyDelete