Saturday, June 22, 2013

நளவெண்பா - கற்பின் தாழ் வீழ்த்த கதவு

நளவெண்பா - கற்பின் தாழ் வீழ்த்த கதவு 


தமயந்தி, நளனை காண்கிறாள்.

ஒரு புறம் காதல். மறு புறம் ஆசை. இரண்டுக்கும் நடுவில் நாணமும் கற்பும்.

பெண் பாவம்தான். எவ்வளவு சிக்கல்.

தாமரை போன்ற தமயந்தியின் முகம். நீலோற்பலம் போன்ற நளனின் கண்கள் சென்று தீண்டியதுதான் தாமதம் ... ஆசையை மனத்தில் அடக்கி, கற்பு என்ற தாழ் போட்டு பூட்டி வைத்திருந்த கதவு, அவள் கொண்ட அன்பின்/காதலின் வேகத்தால் திறந்து கொண்டது.

ஆசை மனதில் இருக்கிறது. ஆனால், அந்த ஆசை அல்ல மனம் திறக்க காரணம்.

அவன் மேல் கொண்ட அன்பினால் அந்த கதவு திறந்து கொண்டது.

பாடல்  


நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டும் அளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்த்த கதவு.


பொருள்





நீண்ட கமலத்தை = நளனை நோக்கி நீண்ட தாமரை போன்ற கண்களை கொண்ட தமயந்தி

நீலக் கடைசென்று = நீல மலர் போன்ற நளனின் கண்கள்

தீண்டும் அளவில் திறந்ததே = தீண்டிய அந்த கணத்தில் திறந்ததே

பூண்டதோர் = பூட்டி வைக்கப் பட்ட ஒரு

அற்பின்தாழ = அன்பில் கனிந்து (தாழ )

கூந்தலாள் = அழகிய கூந்தலை கொண்ட தமயந்தி

வேட்கை = ஆசை

அகத்தடக்கிக் = மனதில் அடக்கி

கற்பின்தாழ் வீழ்த்த கதவு = கற்பு என்ற தாழ்பாளை கொண்ட கதவு

ஆசை கொண்ட மனதை கற்பு என்ற தாழ்ப்பாள் கொண்டு பூட்டி வைத்து இருந்தாள். அன்பு அந்த கதவை திறந்து விட்டது.


1 comment: