Monday, June 24, 2013

திருவெம்பாவை - எய்யாமற் காப்பாய்

திருவெம்பாவை - எய்யாமற் காப்பாய்


அழகான சின்ன கிராமம். அந்த கிராமத்தில் ஒரு கோவில். அந்த கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு திருக் குளம். அந்த குளத்தில் சில தாமரை மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. அந்த தாமரையில் தேன் குடிக்க வண்டுகள் வருகின்றன. வண்டுகளின் ரீங்காரம் அந்த அதி காலையில் தெளிவாகக் கேட்கிறது.

அதி காலை நேரத்தில் சில பெண்கள் அந்த குளத்தில் நீராட வருகிறார்கள்.
மார்கழி மாதம். குளிர் காற்று உயிர் உரசி போகும் நேரம்.குளத்தின் நீர் ஜில் என்று இருக்கிறது. தண்ணீரில் கால் வைத்தால் குளிர் எலும்பு வரை எட்டி பாயும்.

அந்த பெண்கள் ஆனது ஆகட்டும் என்று நீரில் "முகேர்" என்று குதித்து விட்டார்கள்.

குளிர்கிறது . சிறிது நேரத்தில் குளிர் பழகி விட்டது. தண்ணீர் சுகமாக இருக்கிறது.

தூரத்தில் கோவில் மணி அடிக்கிறது.

அந்த பெண்கள்  இறைவனின் திருவடிகளை  போற்றி பாடுகிறார்கள்.

"ஐயா, வழி வழியாய் உந்தன் அடியார்களாக வாழ்ந்து வருகிறோம்.  சிவந்த சிவந்த மேனியில் பால் போன்ற திருவெண்ணீறு அணிந்தவனே.  அந்த உமா தேவியின் மணவாளனே.  நீ அடியார்களை ஆட் கொண்டு விளையாடும் விளையாட்டில், பலன் அடைந்தவர்கள் சென்ற வழிகளை அறிந்தோம். எங்களை கை விடாமல் காப்பாற்றுவாய்"

அவர்களின் பாடலும், வண்டுகளின் ஒலியும் , கோவிலின் மணியும், அவர்கள் நீராடும் போது தோன்றும் நீரின் சல சலப்பு ஒலியும் காற்றில் கலக்கின்றது....


பாடல்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.


பொருள்





மொய்யார் = வண்டுகள் ஆராவாரிக்கும்

தடம் பொய்கை = பெரிய குளத்தில் 

புக்கு = புகுந்து

முகேரென்னக் = முகேர் என்ற ஒலியுடன்

கையாற் குடைந்து குடைந்து = கையால் குடைந்து குடைந்து

உன் கழல்பாடி = உன்னுடைய கழல் அணிந்த திருவடிகளைப் பாடி

ஐயா =ஐயா

வழியடியோம் = வழி + அடியோம் = வழி வழியாக அடியவர்கள் நாங்கள்

வாழ்ந்தோங்காண் = வாழ்ந்தோம் காண்.

ஆரழல்போல் =ஆராவாரிக்கும் தீ போல 

செய்யா = சிவந்த மேனியுடன்

வெண் ணீறாடி = திரு வெண் நீறு உடலெங்கும் பூசி

செல்வா = செல்வனே

சிறுமருங்குல் = சிறிய இடையை உடைய

மையார் = மை பூசிய

தடங்கண் = நீண்ட கண்களை உடைய

மடந்தை மணவாளா = பெண்ணின் மணவாளனே

ஐயா = ஐயா

நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் = நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் = துன்பத்தில் இருந்து விடுபட்டவர்கள், எப்படி எல்லாம் விடு பட்டார்களோ அந்த வகை எல்லாம்

உய்ந்தொழிந்தோம் = நாங்களும் விடு பட்டோம்

எய்யாமற் காப்பாய் எமை = மீண்டும் இந்த பிறவி எய்தாமல் காப்பாய், எங்களை 

ஏலோர் எம்பாவாய்  =  ஏலோர் எம்பாவாய்



No comments:

Post a Comment