Monday, June 24, 2013

திருக்குறள் - காலத்தினால் செய்த உதவி

திருக்குறள் - காலத்தினால் செய்த உதவி 



காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும் . ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா ?

சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்.

அதுவே, ஒரு பாலை வனத்தில், நாக்கு வறண்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு அந்த ஒரு குவளை தண்ணீர் எவ்வளவு பெரிய உதவி ?

உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல

உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது.

மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

இதையே கொஞ்சம் மாத்தி யோசித்துப் பார்ப்போம்.

காலம் அல்லாத காலத்தில் செய்த உதவி பெரிது அல்ல. அதற்காக எப்போதும் சாகிற  காலத்தில்தான் உதவி செய்ய வேண்டும் என்பது அல்ல.

"நான் அவனுக்கு அவ்வளவு செய்தேனே...அவனுக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லை " என்று நிறைய பேர் அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.

உதவி செய்தவனுக்கு வேண்டுமானால் அது பெரிதாய் இருக்கலாம். உதவி பெற்றவனுக்கு  அது சரியான காலமாய் இருக்காது. அவனை நொந்து பயன் இல்லை.

அதே போல், மிக இக்கட்டான காலத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் உதவி மிகப் பெரிதாய்  நினைக்கப் படும்.

இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் ஒருவனுக்கு இறுதி வந்த காலத்தில் செய்த உதவி  பெரிதாய் நினைக்கப் படும் என்று கூறினார்.

அதுக்காக மருத்துவமனைக்குப் போய் , சாகக் கிடக்கிறவனாய்  பாத்து உதவி செய்ய கூடாது

இறுதி என்பதற்கு ஒரு இக்கட்டான சமயம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொன்றையும் யோசிக்கலாம்.

அதாவது, ஒருவன் உதவி என்று கேட்கும் போது, அதன் அவசரம் தெரிந்து உதவி செய்ய வேண்டும்.   கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் அந்த உதவியின் பயனோ  பலனோ வெகுவாக குறைந்து போகலாம்.


எனக்கு இதில் வேறு ஒரு அர்த்தம் தோன்றுகிறது.இலக்கணப்படி அது சரியாக வருமா என்று தெரியவில்லை. இருந்தாலும்.....

ஒருவனுக்கு பணம் காசு தந்து உதவி செய்யலாம். வேலை வாங்கித் தரலாம். அது எல்லாவற்றையும் விட  மிகச் சிறந்த உதவி அவனுக்கு உங்கள் நேரத்தை தருவது. காலத்தினால் செய்த உதவி. பொருளினால் செய்த உதவி அல்ல. காலத்தினால்  செய்த உதவி.

காலம் என்பது எப்போதும் அரிதான ஒன்று. உங்கள் காலத்தை (நேரத்தை ) நீங்கள்  மற்றவருக்கு தருகிறீர்கள் என்றால் உங்களையே தருகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் காலத்தை மட்டும் தனியே அனுப்ப முடியாது.

உதவி வேண்டுபவனை நேரில் போய் பார்ப்பது , அவனுடைய துன்பத்தை தீர்க்க  நீங்கள் முயற்சி செய்வது, உங்களுக்குத் தெரிந்தவர்களை கண்டு பேசி அவனுடைய துன்பத்திற்கு  வழி தேடுவது, அவனுக்காக பணம் திரட்டுவது, அவனுக்காக பரிந்து பேசுவது இப்படி பல வழிகளில் உங்கள் காலத்தை அவனுக்காக செலவிடலாம். அவன் துன்பத்தை தீர்க்க உங்கள் நேரத்தை நீங்கள் செலவிடுவது பெரிய உதவி.

ஒண்ணும் இல்லை, கொஞ்சம் நேரம் செலவழித்து அவனை நேரில் போய்  பார்க்கிறீர்கள் என்று  வைத்துக் கொள்வோம், அவன் துன்பத்தின் ஆழம் தெரியும், அவன் மேல் பரிவு உண்டாகும், மேலும் உதவி செய்யவேண்டும் என்று தோன்றும்.

அவன் கூட பேசினால் (தொலை பேசியில், வள்ளுவர் தொலை பேசி என்று நினைத்து இருக்க மாட்டார் என்றாலும் ), அவன் என்ன வேண்டும் என்று சொல்வான். அவனுக்கு வேண்டியது ஒரு வேளை பணமாக இருக்காது. உங்கள் அறிவு, உங்கள் அனுபவம், உங்கள் தொடர்பு இவை எல்லாம் அவனுக்கு உதவி செய்யப் பயன் படலாம்.

கொஞ்சம் பணத்தை அனுப்பி விட்டு இருந்துவிட்டால் சிக்கல் தீர்ந்து விடாது.

வாழ்வில் எல்லா சிக்கலும் பணத்தால் தீர்ந்து விடாது.

எனவே, காலத்தினால் செய்த உதவி உலகை விட பெரியது.

அடுத்த முறை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் நினைத்தால், கொஞ்சம் நேரமும்  செலவிடுங்கள். உதவி தேவைப் படுபவருக்கு உங்கள் நேரம் மிகப் பெரிய  உதவியாய் இருக்கும். உங்கள் பணத்தை விட உங்கள் நேரம் அவருக்கு மிகப் பெரியதாய் தோன்றும்.

காலத்தினால் செய்த உதவி.


யோசித்துப் பாருங்கள்.


11 comments:

  1. காலத்தினால் செய்த உதவிக்கு மாற்று அர்த்தம் நான் யோசித்ததே இல்லை. நல்ல அர்த்தம்தான். நன்றி.

    ReplyDelete
  2. சூப்பர் பாஸ்

    ReplyDelete
  3. அருமை காலத்தினால் செய்த உதவி


    ReplyDelete
  4. அருமையான பதில் ஐயா

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  6. என்றும் உதவும் உள்ளங்கள் வாழட்டும்

    ReplyDelete
  7. விளக்கம் செம்ம

    ReplyDelete
  8. தாங்கள் சொன்ன கருத்து மிகச்சரியானதே. வள்ளுவர் இந்த நோக்கத்தில்தான் சொல்லியிருப்பார் என்று கருதுகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சபாஷ் புலிகேசி ககக போ!
    அருமையாக சொன்னீர்.

    ReplyDelete