Tuesday, June 25, 2013

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?

நளவெண்பா - மயங்கினாள் , என் செய்வாள் மற்று ?


நளனின் காதலை தமயந்தியிடம் அன்னப் பறவை  சொன்னது. நளன்  உன் மேல்  எப்படி எல்லாம் காதல் கொண்டிருக்கிறான் என்று கூறியது.

அதை கேட்ட தமயந்தி உருகுகிறாள். ஐயோ , என் மேல் இத்தனை அன்பா, இத்தனை காதலா என்று அவள் மனம் கரைகிறது. ஏற்கனவே அவனை திருமணம் முடித்து, அவனை கட்டி அணைத்தார்ப் போல இருக்கிறது அவளுக்கு. அந்த அபரிமிதமான காதலால், மகிழ்ச்சியில் அவள்  மார்புகள் விம்முகின்றன. அதை அவள் பார்க்கிறாள். மயங்குகிறாள்.

பாவம் பெண், வேறு என்ன செய்ய முடியும் ?

பாடல்

மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று.

பொருள்





மன்னன் = நள  மன்னனின்

மனத்தெழுந்த = மனத்தில் எழுந்த

மையல்நோய் = காதல் நோய்

அத்தனையும் = அனைத்தும்

அன்னம் உரைக்க = அன்ன பறவை வந்து அவளிடம் சொல்ல

அகமுருகி = அவள் உள்ளம் உருகி

முன்னம் = முன்பே

முயங்கினாள் போல் = நளனை கட்டி அணைத்தவள் போல

தன் முலைமுகத்தைப் =தன்  மார்பின் முகத்தை

பாரா மயங்கினாள் = பார்த்து மயங்கினாள்

என்செய்வாள் மற்று = அவள் வேறு என்ன செய்ய முடியும்


1 comment:

  1. ம்ம்ம்...இது நல்ல ஜொள்ளு!

    ReplyDelete