Sunday, June 23, 2013

திருக்குறள் - செய்யாமல் செய்த உதவி

திருக்குறள் - செய்யாமல் செய்த உதவி


செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.


சீர் பிரித்த பின்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் மாற்றல் அரிது 


பள்ளிக் கூடத்தில் படித்த குறள்தான்.

உதவி செய்யாமல் இருந்து பின் செய்த உதவிக்கு ஈடாக இந்த வையகத்தையும் வானகத்தையும் தந்தாலும் போதாது.

இப்படித்தான் படித்தோம்.

வள்ளுவர் இவ்வளவு சாதரணமாக எழுதுவாரா ?

முதலில், அது என்ன செய்யாமல் செய்த உதவி ?

ஒருவன் நமக்கு முன் பின் ஒரு உதவியும் செய்யாமல் இருக்கும் போது அவனுக்கு நாம்  செய்யும் உதவி இருக்கிறதே அது தான் செய்யாமல் செய்த உதவி. அதாவது, ஒருவர் உங்களுக்கு முன்பே ஒரு உதவி  செய்திருக்கிறார் என்று வைத்துக்   கொள்வோம், அதற்க்கு பதிலாக நீங்கள் ஒரு உதவி செய்கிறீர்கள் என்றால் அது  பெரிய விஷயம் அல்ல. உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ  நீங்கள் செய்யும் உதவி பெரிதல்ல. உங்களுக்கு உதவியே செய்யாத ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவி மிகப் பெரியது


இது ஒரு அர்த்தம்

இன்னொரு அர்த்தம்....செய்யாமல் செய்வது. அது என்ன செய்யாமல் செய்வது ? குழப்பமாய்  இருக்கிறதே.

சில பேர் நமக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்து செய்ய மாட்டார்கள். அவர்கள், அவர்கள் கடமையை செய்வார்கள். நமக்கு அது உதவியாய்  முடியும்.

உதாரணமாக, நம் பெற்றோர்கள்.

அவர்கள் நமக்கு எவ்வளவோ செய்கிறார்கள். அது எல்லாம் உதவி என்று நினைத்து அவர்கள் செய்வது இல்லை. அது நமக்கு மிகுந்த பலனை தருகிறது. அது செய்யாமல் செய்த உதவி.

நம் ஆசிரியர்கள்.

உதவி செய்ய வேண்டும் என்று பாடம் நடத்துவது இல்லை. ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடம் நமக்கு எவ்வளவு பெரிய  உதவியாய் முடிகிறது. அது செய்யாமல் செய்த உதவி.

நாம் யார் என்று கூட தெரியாமல் நமக்காக குறள் எழுதி வைத்தாரே வள்ளுவர், அது செய்யாமல் செய்த உதவி.

ஆழ்ந்து யோசித்தால் நமக்கு எவ்வளவோ பேர் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காமல் , அவர்கள் செய்த ஏதோ ஒன்று நமக்கு உதவியாய் முடிந்திருக்கிறது.

போலியோ சொட்டு மருந்தை தந்த அந்த விஞ்ஞானி செய்தது செய்யாமல் செய்த உதவி.

சுயநலம் அற்ற அந்த உதவிகள் செய்யாமல் செய்த உதவிகள்.

வையகமும் வானகமும் மாற்றல் அரிது என்றால் என்ன அர்த்தம் ?

அப்படிப்பட்ட உதவிக்கு நாம் என்ன செய்தும் ஈடு கட்ட முடியாது. இந்த உலகம் பூராவையும் , அந்த வானம் பூராவையும் தந்தாலும் போதாது என்கிறார் .

எதை கொடுத்தும் அந்த நன்றியை நம்மால் ஈடு கட்ட முடியாது.

எதை கொடுத்து தாயின் அன்பை ஈடு கட்டுவீர்கள் ?

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குறள் .


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. "செய்யாமல் செய்த உதவி" என்பதின் விளக்கம் மிக நன்று.

    ReplyDelete