Monday, June 24, 2013

இராமாயணம் - அவளை காணும் காலம் வருமா ?

இராமாயணம் - அவளை காணும் காலம் வருமா ?



திருமணத்திற்கு முதல் நாள். இராமன் தனிமையில் அமர்ந்து சீதையின் அழகைப் பற்றி எண்ணுகிறான்.

அவனுக்குள் காதல் பொங்கி எழுகிறது.

அவளுடைய உருவம் அவன் கண் முன் வந்து போகிறது. அவளோட அழகிற்கு முன்னால் நான் எம்மாத்திரம் என்று எண்ணுகிறான்.

அவளுடைய அந்த அழகிய மார்புகள், வாள்  போன்ற கூறிய கண்கள், நிலவு போன்ற முகம், அதில் நெளியும் ஒரு புன் முறுவல், அந்த புன்னகை பூக்கும் இதழ்கள்...அவளை இன்னொரு முறை பார்க்கும் காலம் வருமா ?

திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. விடிந்தால் திருமணம். அதற்குள் இராமனுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று ஆவல்.

உங்கள் வாழ்விலும் நடந்த மாதிரி இருக்கிறதா ?...:)

பாடல்

பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவதுஓர் காலம் உண்டாம் கொலோ?


பொருள்




பூண் உலாவிய = அணிகலன்கள் அசையப் பெற்ற

பொற் கலசங்கள் = பொன் கலசங்கள்

என் = என்னுடைய

ஏண் இல் ஆகத்து = ஏதும் பெருமை இல்லாத மார்பில்

எழுதலஎன்னினும்; = அணைத்துக்  கொள்ள வில்லை என்றாலும். எழுதல் என்றால் விம்முதல், உயருதல், வீங்குதல், என்று பல பொருள் உண்டு 

வாள் நிலா முறுவல் = வாள் போன்ற கூர்மையான பிறை சந்திரனை போன்ற ஒரு முறுவலும் (புன் முறுவல்)

 கனி வாய் மதி = கோவைப் பழம் போன்ற அவளது இதழ்களையும், நிலவு போன்ற அவளது முகத்தையும்

காணல் ஆவதுஓர் காலம் உண்டாம் கொலோ? = காணும் காலம் உண்டாகுமா ?

2 comments:

  1. என்ன ஜொள்ளு, என்ன ஜொள்ளு! சும்மா குற்றால அருவி மாதிரி வழியுது!

    ReplyDelete
  2. பெண்கள் விடும் ஜொள்ளு பற்றி எழுதுப்பா!

    ReplyDelete