Saturday, June 1, 2013

திருக்குறள் - அறிவின் பயன்

திருக்குறள் - அறிவின் பயன் 


முந்தைய ப்ளாகில் இல்லாதவற்றுள் எல்லாம் பெரிய இல்லாமை அறிவு இல்லாமையே என்றும், மற்ற இல்லாமைகளை இந்த உலகம் பெரிதாக கொள்ளாது என்றும் பார்த்தோம்.

அறிவை விட அருள், அன்பு முக்கியமில்லையா ? எல்லோரும் அறிவு உள்ளவர்களாய் இருப்பது என்பது கடினம். ஆனால், எல்லோரும் மற்றவர்கள் மேல் அன்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் அல்லவா ?

அறிவை விட அன்பு முக்கியம் இல்லையா ? ஏன் வள்ளுவர் அறிவில்லாமையை பெரிதாக சொல்கிறார் ? அன்புடைமை பற்றி ஏன் அவ்வளவு சொல்லவில்லை என்று கேள்வி எழலாம்.

வள்ளுவர் சாதாரண மனிதர் அல்ல.

ஒரு விஷயத்தை சொல்லுமுன் எவ்வளவு யோசித்து இருப்பார் ?

அறிவு என்றால் என்ன ? What is intelligence  ? அறிவு என்பதற்கு வள்ளுவர் சில இலக்கணங்களை தருகிறார்.

அதில் முக்கியமான ஒன்று அறிவு மற்ற உயிர்களை தன் உயிர் போல நினைக்கும்.

அறிவினால் அவ்வது என்ன ? மற்றதன் நோயையை தன் நோய் போல நினைக்காவிட்டால் ?

பாடல்

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை.


பொருள்




அறிவினான் = அறிவினால்

ஆகுவ துண்டோ = ஆகுவது உண்டோ ?மிக மிக கவனத்துடன் சொல்லப் பட்ட சொல். ஆகுவது என்றால் ஆக்குவது, செய்வது, செயல் படுவது. நிறைய பேர் மற்ற உயிர்களின் துன்பம் கண்டு இரங்குவார்கள். ஐயோ பாவம் என்று பரிதாபப் படுவார்கள். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய மாட்டார்கள். வெறும்  அன்பு உணர்வும், அருள் உணர்வும் மட்டும் போதாது. மற்ற உயிர்களின்  துன்பத்தை  போக்க ஏதாவது செய்ய வேண்டும்.

நான் மற்ற உயிர்களை  துன்பம் செய்யாமல் இருக்கிறேன், அது போதாதா என்றால் போதாது. அது பூரணமான அறிவு அல்ல.

மற்ற உயிர்களின் துன்பம் கண்டு பரிதாபப் படுகிறேனே அது போதாதா என்றால் ...போதாது. அது முழுமையான அறிவு அல்ல.

மற்ற உயிர்களின் துன்பத்தை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும். அதுதான் அறிவு. ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்.    


பிறிதின்நோய் = நோய் என்றால் துன்பம். (நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்பது வள்ளுவம் ​ ). பிறரின் என்று சொல்ல வில்லை. பிறிதின் என்று சொன்னார். புல், பூடு, புழுக்கள், பூச்சிகள், பறப்பன, நீர் வாழ்வன, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எல்லாவற்றிற்கும் வரும் நோய்.  

தம்நோய்போல் போற்றாக் கடை.= தனக்கு வந்த துன்பம் போல் போற்றி அதை  நீக்கா விட்டால் ? போற்றி என்றால் பாதுகாத்தல், கவனமாக காப்பாற்றுதல்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் உள்ளம் அறிவின் பாற் பட்டது. வள்ளலாரை விட ஒரு படி மேலே போய் , வாடிய பியரை கண்டபோது நீயும் வாடிப் பயன் இல்லை, அதுக்கு தண்ணி ஊத்து என்கிறார் வள்ளுவர். அது அறிவு.

நம் வீட்டில் யாருக்காவது உடல் நிலை மன நிலை சரி இல்லை என்றால், நாமும் உடைந்து விடுவது அறிவின்  அழகு அல்ல. அந்த துன்பத்ஹ்டை போக்குவது தான் அறிவு.

ஒரு மருத்துவர் என்ன செய்கிறார் - நோயாளியின் துன்பத்தை, வலியை
குறைக்கிறார்

இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர்கள் என்ன செய்கிறார்கள் - மக்களின் வலியை  போக்குகிறார்கள்.

நாம் படிப்பது, பரிட்ச்சை எழுதுவது, வேலை பார்ப்பது எல்லாம் மற்றவர்களின் துன்பத்தை குறைக்க என்று நினைக்க வேண்டும்.


எவ்வளவு ஆழமான சிந்தனை. அறிவு என்றால் நிறைய படிப்பது , நிறைய சொல்லுவது , நிறைய சம்பாதிப்பது என்று எல்லாம் சொல்ல வில்லை.

இப்போது சொல்லுங்கள் அறிவில்லாதவனை என்ன என்று சொல்லுவது ?
 

1 comment:

  1. I duly conveyed this to my wife. She asked if there is any contradiction within Thirukkural (such as A>B, B>A), but I said I had not come across any contradiction so far.

    ReplyDelete