Saturday, July 20, 2013

திருக்குறள் - பொறாமையின் புறவேற்றுமை

திருக்குறள் - பொறாமையின் புறவேற்றுமை 


அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

பிறருடைய ஆக்கத்தை போற்றாது பொறாமை கொள்பவன் தனக்கு வரும் ஆக்கத்தை வேண்டாம் என்று சொல்லுபவன். அதாவது, அவனுக்கும் ஆக்கம் வராது.

இது நேரடியான எளிமையான பொருள்.

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் குறளின் வீச்சும் ஆழமும் புரியும்.

பொறாமை என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம் ?

மற்றவர்கள் செல்வம் மற்றும் பிற சிறப்புகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாமல் இருத்தல் பொறாமை என்று சொல்லுவோம்.

சுருக்கமாக சொல்லுவது என்றால் வயெற்றிரிச்சல் படுவது.

வள்ளுவர் ஒரு படி மேலே போகிறார்.

பொறாமை என்பது மற்றவர்களின் உயர்வை கண்டு பொறுமுவது மட்டும் அல்ல...அவர்களின் செல்வத்தை, ஆக்கத்தை பாதுகாக்காமல் இருப்பதும் பொறாமைதான் என்கிறார்.

எப்படி ? சில வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து சிந்திப்போம்.

நம்முடைய நண்பர் வெளியூரில் இருக்கிறார். நாம உள்ளுரில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நண்பருக்கு சொந்தமான ஒரு சிறு நிலம் உள்ளூரில்  இருக்கிறது. அது நமக்குத் தெரியும். அதில் யாரோ குடிசை போட்டு இருக்கிறான். ஆக்கரமிப்பு செய்து இருக்கிறான். அதைக் கண்டபின்னும், அந்த ஆக்கரமிப்பை நீக்க உதவி செய்யாமல் இருப்பது அந்த சொத்தை பேணாது விடுவதுபோலத் தான். அதுவும் பொறாமையின் ஒரு வடிவம் தான்.


நண்பர் திறமைசாலி, அறிவாளி, நல்லவர், வல்லவர். அவரைப் பற்றி ஒரு மூன்றாம் மனிதன்  நம்மிடம் சில தகாத வார்த்தைகள் சொல்லும்போது, "அவன் அப்படிப் பட்ட  ஆள் இல்லை, அவனை நன்றாக எனக்குத் தெரியும்..." என்று தடுத்து கூறி நண்பரின் புகழுக்கு (ஆக்கம்) களங்கம் வராமல் பாதுகாக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டால், அதுவும் ஒரு விதத்தில் பொறாமைதான்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

மற்றவர்களின் ஆக்கத்தை பேண வேண்டும்.

ஆக்கம் என்ற சொல் மிக ஆழமான சொல். வள்ளுவர் யோசித்து யோசித்து அந்த வார்த்தையை தேர்ந்து எடுத்து இருக்கிறார்.

பணம், செல்வம், வீடு, வாசல், நில, புலன் இது மட்டும் அல்ல ஆக்கம் என்பது.

ஒருவனின் புகழ், கல்வி, பிள்ளைகள், குடும்பம் எல்லாமே ஒருவனின் ஆக்கம்தான்.

நமக்குத் தெரிந்த ஒருவரின் பையன் புகை பிடிப்பதை பார்க்கிறோம். நேரில் அவனை கண்டிக்கலாம். அவனுடைய தந்தையிடம் சொல்லி அவனை திருத்தலாம் . அதை விட்டுவிட்டு, நமக்கு என்ன , எக்கேடோ கெட்டு போகட்டும்....என் பிள்ளை நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பதும் பொறாமைதான்.



சரி மற்றவர்களின் ஆக்கத்தை பேணாது பொறாமை கொண்டால் என்ன ஆகும் ?

அப்படிச் செய்பவர்கள் அறத்தினால் விளையும் ஆக்கத்தை வேண்டாம் என்று மறுப்பவர்கள் ஆவார்கள்.

அறத்தினால் என்ன ஆக்கம் விளையும் ?

அறம் - இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய எல்லாவற்றையும் நல்கும். இம்மைக்கு வேண்டிய  செல்வத்தையும், இன்பத்தையும் மறுமைக்கு வேண்டிய  வீடு பேற்றையும் நல்கும்.

மற்றவர்களின் ஆக்கத்தை பேணாது பொறாமை கொள்பவன் தனக்கு அறத்தினால் விளையும்  நன்மைகளை தானே வேண்டாம் என்று தள்ளி விடுபவன் ஆவான் என்கிறார் வள்ளுவர்.

எவ்வளவு ஆழமான சிந்தனை.

  


1 comment:

  1. பேணுதல் என்றால், சும்மா பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல என்பது நல்ல கருத்து. மிக நல்ல பொருளாக்கம். நன்றி.

    ReplyDelete