Tuesday, July 30, 2013

பிரபந்தம் - நீதி அல்லாதன செய்தாய்

பிரபந்தம் - நீதி அல்லாதன செய்தாய் 


நாம் ஏதேனும் ஒரு பொருளை இழந்து விட்டால் ரொம்ப துக்கப் படுவோம். அதுவும் இழந்தது உயிர் என்றால் இன்னும் துக்கம் அதிகமாகும்.

எது இழப்பு ? நாம் வரும்போது ஏதாவது கொண்டு வந்தோமா ? கொண்டு வந்ததை இழப்பதற்கு ? வெறும் கையோடு  வந்தோம்....வெறும் கையோடு போகப் போகிறோம். நடுவில் வந்தது கொஞ்சம். போனது கொஞ்சம்.

நமது சமயப் பெரியவர்கள் இறைவனின் வேலைகள் என்று சொல்லும்போது ....படைத்தல், காத்தல், மறைத்தல், அருளுதல், அழித்தல் என்று  சொல்கிறார்கள்.

மறைத்தல் என்றால் நம்மிடம் இருந்ததை எடுத்து மறைத்து வைத்து விடுவது.

பொருள் அழிவது இல்லை...நம் கண்ணில் இருந்து மறைந்து விடுகிறது.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற் றில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்

என்பார் மணிவாசகர். கரத்தல் மறைத்தல்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்  பாடுகிறாள்.

பெண்கள் எல்லோரும் குளிக்க குளத்தில் இறங்கி இருக்கிறார்கள். கண்ணன் அவர்கள் உடைகளை எடுத்துக் கொண்டான். வெளியே வர முடியவில்லை. வேண்டும் என்றால் ஊருக்குள் போய்  சொல்லிக் கொள்ளுங்கள் என்கிறான் கண்ணன். எப்படி வெளியே போவது ? கண்ணா எங்கள் உடையைக் கொடு. நீ எங்கள் உடையை எடுத்துக் கொண்டாலும், உன் மேல் உள்ள ஆர்வம் குறையாது எங்களுக்கு என்று கெஞ்சுகிறாள், கொஞ்சுகிறாள் கோதை.

அவன் தந்தான்.

அவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான்.

அவன் தருவான்.

இது சேலையை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளும் சிற்றின்ப விளையாட்டு அல்ல. வாழ்க்கையை விளக்கும் தத்துவம். கொண்டு வந்ததும் இல்லை. கொண்டு போகப்  .போவதும் இல்லை. எல்லாம் ஒரு விளையாட்டுதான்.

பாடல்


நீரிலே நின்று அயர்க்கின்றோம்,
நீதி அல்லாதன செய்தாய்,
ஊர் அகம் சாலவும் சேய்த்துஆல்.
ஊழி எல்லாம் உணர்வானே!
ஆர்வம் உனக்கே உடையோம்
அம்மனைமார் காணில் ஒட்டார்
போரவிடாய் எங்கள் பட்டைப்
பூங்குருத்து ஏறி இராதே


பொருள்


நீரிலே நின்று அயர்க்கின்றோம் = குளத்திலே நின்று சோர்வடைகிறோம்

நீதி அல்லாதன செய்தாய் = நீதி இல்லாதவற்றை செய்தாய்

ஊர் அகம் = ஊருக்குள் உள்ள வீடு

சாலவும் சேய்த்துஆல். = ரொம்பவும் தூரத்தில் இருக்கிறது

ஊழி எல்லாம் உணர்வானே! = ஊழிக் காலம் வரை எல்லாம் அறிந்தவனே

ஆர்வம் உனக்கே உடையோம் = உன்மேல் மட்டுமே ஆர்வம் உடையோம். ஆர்வம் என்பது அருமையான சொல். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ஆசை. curiosity என்று சொல்லுவார்களே. ஒன்றை முழுவதுமாக அறிந்து விட்டால் ஆர்வம் போய்  விடும்.இறைவனை என்றுமே முற்றும் அறிய முடியாது என்பதால் "ஆர்வம் உடையோம்"


அம்மனைமார் காணில் ஒட்டார் = எங்க அம்மாக்கள் பார்த்தால் எங்களை உள்ளே சேர்க்க மாட்டார்கள்

போரவிடாய் எங்கள் பட்டைப் = எங்கள் துணிகளை எங்களிடம் கொடுத்து விடு

பூங்குருத்து ஏறி இராதே = பூ மரத்தின் மேல் ஏறி நிற்காதே.

தின்ன பழம் கொண்டு தருவான்
பாதி தின்கின்ற போதில் தட்டிப் பறிப்பான்


என்ற கோபால கிருஷ்ண பாரதியின் பாடலும் சொல்லுவது இதைத்தான். தருவான், அவனே எடுத்துக் கொள்வான்.

நாம் இழக்க இங்கு ஒன்றும் இல்லை. அவன் தந்தான். அவன் கொண்டான். அவன் தருவான் என்று இருங்கள்.




1 comment:

  1. அருமையான விளக்கம்.

    மறைத்தல், அழித்தல் இரண்டும் வேறானால், என்ன வித்தியாசம்?

    ReplyDelete