Sunday, July 28, 2013

இராமாயணம் - சோகமே இப்படி என்றால்....

இராமாயணம் -  சோகமே இப்படி என்றால்....


இராவணன் பார்க்கிறான்  ஜானகியை.

 அவள் முகத்தில் ஏதோ ஒரு சோகம். இராமனுக்கு என்ன ஆச்சோ என்ற கவலை. அந்த சோகத்திலும் அவள் முகம் ஒளி  விடுகிறது. இந்த சோகத்திலும் இவள் முகம் இவ்வளவு ஒளி விடுகிறது என்றால் இவள் சந்தோஷமாய் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று சிந்திக்கிறான் இராவணன்.

சீதை, தலை முடியை வாரி முடியவில்லை. அப்படியே விட்டிருக்கிறாள். அது காற்றில் அலை  பாய்கிறது.

அலை பாய்ந்தது அவள் குழல் மட்டுமல்ல, இராவணனின் மனமும்  தான்.

இராவணன் மனதுக்குள்  நினைக்கிறான்...இலங்கைக்கு போனவுடன், இப்படி ஒரு பெண்ணை எனக்கு  காண வழி செய்த என் தங்கைக்கு (சூர்பனகைக்கு) என் இருபது மகுடத்தையும் உருக்கி ஒரே மகுடமாக செய்து அவள் தலையில் வைக்க வேண்டும்...அவளுக்கு முடி சூட்ட வேண்டும் ...

பாடல்

உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்,
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்?
தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென், என் அரசு' என்று எண்ணினான். 


பொருள்





உளைவுறு  = மனதில் உளைச்சல் உள்ள

துயர் முகத்து = துயரம் கொண்ட முகத்தின்

ஒளி இது ஆம் எனின் = ஒளி இது என்றால்

முளை எயிறு இலங்கிடும் = எயிறு என்றால்  பல்லு.சீதையின் பல் முளை விடும்  பயிர் போல  இருந்தது.

முறுவல் என்படும்? = இவள் மகிழ்ச்சியாக இருந்தால் அவள் புன்னகை எப்படி இருக்கும் ?

தளை அவிழ் குழல் = கட்டு அவிழ்ந்த கூந்தலைக் கொண்ட

இவட் கண்டு தந்த என் = இவளை கண்டு தந்த

இளையவட்கு = என் தங்கைக்கு

அளிப்பென், என் அரசு' என்று எண்ணினான். = என் அரசை அளிப்பேன் என்று எண்ணினான்


1 comment:

  1. அப்பா, என்ன ஒரு காமம்! இந்த பாடல்களை யாரும் சொல்வது இல்லை - இராவணனுக்கு சீதை மேல் இருந்த காமத்தைச் சொன்னாள் ஏதோ தவறு என்பது போல. இவைகளை எங்களுக்குக் கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete