Friday, July 5, 2013

திருக்குறள் - புறங் கூறாமை

திருக்குறள் - புறங் கூறாமை 



புறங் கூறாமை என்றால் ஒருவரைப் பற்றி, அவர் இல்லாத போது தவறாகப் பேசுவது.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்.

என்ன அர்த்தம் ?

கண்ணின்று = கண்ணின் முன்னால் நின்று

கண்ணறச் = கண்ணோட்டாம் (அருள், அல்லது அன்பு ) இல்லாமல் = கண்+அற 

சொல்லினுஞ் = சொல்லக் கூடாது, அப்படியே சொன்னாலும்

 சொல்லற்க  = சொல்லக் கூடாது. எதை ?

முன்னின்று பின்நோக்காச் சொல் = ஒருவரை முன்னே விட்டு பின்னால் பேசுவது

அதாவது, முகத்திற்கு நேரா எவ்வளவு கொடுமையான சொல் கூட சொல்லிவிடலாம், ஆனால் முதுகுக்குப் பின்னால் ஒன்றும் சொல்லக் கூடாது.

இது நம் பாட நூல் பொழிப்புரை.

அதையும் தாண்டி சற்று ஆழமாக சிந்திக்கலாம்...

கண்ணை பிடுங்குவது எவ்வளவு கொடுமையான செயல் . எவ்வவளவு வலி தரக்  கூடியது ? பிடுங்கும் போது மட்டும் அல்ல, அதற்குப் பின்னும் கண்ணில்லாத வாழ்க்கை எவ்வளவு துன்பகரமானது ?

அந்த அளவுக்கு வலியும் துன்பமும் தரும் சொற்களைச் ஒருவரின் முகத்திருக்கு நேராக சொன்னால் கூடப் பரவாயில்லை, ஆனால் ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி  இல்லாததும் பொல்லாததும் சொல்லக் கூடாது.

இது ஒரு அர்த்தம்.

இன்னும் சற்று ஆழமாக சிந்திப்போம்..

அது என்ன பின் நோக்காச் சொல் ?

பின் நோக்காச் சொல் என்றால், பின்னால் சொல்லுவது முதுகுக்குப் பின்னால் சொல்லுவது என்று பொருள்  சொல்கிறார்கள்.

பின் நோக்காச் சொல் என்றால் பின்னால் வருவதை அறியாமல் சொல்லுவது.

யாரிடம் என்ன பேசுகிறோம், இது பின்னால் எப்படி மாறும் என்று அறியாமல் பேசுவது.

இன்று ஒருவரிடம் மற்ற ஒருவரைப் பற்றி ஏதோ தீயதாய் சொல்லி விடுகிறோம் . நாளையே அவர்கள் நண்பர்களாக ஆகி விடலாம். அந்த சமயத்தில் , நாம் இப்போது சொன்னது நமக்கு எதிராகப் போய் விடலாம்.

அது பின்நோக்காச் சொல்.

அண்ணன் தம்பிக்குள் சண்டை , கணவன் மனைவிக்குள் சச்சரவு, நண்பர்களுக்குள் பகை , வேலை செய்யும் இடத்தில் ஊழியர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு.....இவை எல்லாம் நிகழ்வது இயற்க்கை. நாம் நடுவில் போய் ஏதாவது சொல்ல, அது பின்னால் நமக்கு எதிராய் திரும்பி விடும்  ஆபத்து உண்டு.

எனவே, பேசுவதற்கு முன் அதன் பின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்று  ஆராய்ந்து பின் பேச வேண்டும்.

இது இன்னொரு அர்த்தம்.


மற்றொரு அர்த்தமும் சொல்லலாம்.

முன்னின்று பின் நோக்காச் சொல் என்றால் பின்னால் ஒருவரை நேருக்கு நேர் நோக்கி பேச முடியாமல் செய்யும் சொற்கள்.

அவசரத்தில், கோபத்தில், ஆத்திரத்தில் ஒருவரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசி விடலாம். பின்னால் அவரை வேறு எங்காவது காண நேர்ந்தால், "ச்சே, அன்று அப்படி பேசி விட்டோமே...இப்ப எப்படி அவர் முன்னால போய் நிக்கிறது " என்று அவரைப் பார்பதை தவிர்ப்போம்.

முன்னால் அவர் முன் நின்று பேசினோம். பின்னால் அவரைப் நோக்கி பேச முடியவில்லை. அது பின்  நோக்காச் சொல்.

பேசும் போது பின்னால் அவரை நேருக்கு நேர் பார்க்க வேண்டி வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பின் பேச வேண்டும்.

பேசு முன் யோசியுங்கள்.

மற்றவைகளைப் பற்றி எப்போதும் நல்லதையே பேசுங்கள். இந்தச் சிக்கல் எதுவும் வராது.

யாரைப் பற்றியும் எப்போதும் தீயதாய் எதையும் சொல்லாதீர்கள் - அது   உண்மையாகவே  இருந்தால் கூட. யார், எதை எப்படி திரித்து சொல்லுவார்களோ ?

நல்லதையே பேசி விட்டுப் போவோமே ?

சரிதானே ?






1 comment:

  1. எப்படித்தான் உனக்கு மட்டும் இவ்வளவு அர்த்தங்கள் தோன்றுகிறதோ?

    ReplyDelete