Saturday, July 6, 2013

திருக்குறள் - உதவியின் அளவு

திருக்குறள் - உதவியின் அளவு 



உதவி வரைத்து அன்று, உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவி, அது எவ்வளவு பெரியது அல்லது எவ்வளவு சிறியது என்பது நம்மையோ, நாம் செய்யும் உதவியையோ பொருத்தது அல்ல . அது அந்த உதவியை பெற்றுக் கொண்டவனின் சால்பைப் பொருத்தது.

அது என்ன சால்பு ?

சால்பு என்றால் மேன்மை, நல்ல குணம்.

பிள்ளையின் படிப்புக்கு, பெண்ணின் திருமணத்திற்கு அல்லது ஏதோ அவசர மருத்துவ செலவுக்கு என்று ஒரு நல்லவர் உங்களிடம் உதவி கேட்க்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்கள். அதைப் பெற்றுக் கொண்டு அவர் உங்களை வாழ்த்துவார் "நீங்க நல்லா இருக்கணும், உங்க புள்ள குட்டியெல்லாம் நல்லா இருக்கணும்...இந்த ஆயிரம் ரூபாய், எனக்கு லட்ச ரூபாய்க்கு சமம் " என்று வாழ்த்தி விட்டு செல்வார்


அதே ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு கெட்டவனுக்கு கொடுத்துப் பாருங்கள்.
"பெருசா ஆயிரம் ரூபாய் கொடுக்க வந்துட்டான்....பிச்சாத்து காசு...இந்த ஆயிரம் ரூபாய் எனக்கு பத்து பைசாவுக்கு சமம்...." என்று உங்களை தரக் குறைவாகப் பேசலாம் '

இரண்டு இடத்திலும் கொடுத்தது நீங்கள்தான்,  கொடுத்த பணம் ஒரே அளவுதான்....ஒரு இடத்தில் இலட்ச்ச ரூபாயாக மாறியது, இன்னொரு இடத்தில் பத்து பைசாவாக  மாறியது.

அது அது பெற்று கொண்டவனின் தகுதியைப் பொருத்தது.

 உதவி வரைத்து அன்று = வரைத்து என்றால் அளவு. வரை முறை இல்லாமல் பேசாதே என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா? வரை என்றால் ஒரு அளவு.

உதவியின் அளவு செய்யும் உதைவியைப் பொறுத்து அல்ல என்பது பொருள்.

சரி, அதுக்கு என்ன இப்ப ? இதை அறிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன் ?

கொஞ்சம் மாத்தி யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்கு ஒரு உதவி வேண்டி இருக்கிறது. ஒரு பெரிய மனிதரிடம் போய் உதவி கேட்கிறீர்கள். அவரும் உங்களுக்குச் செய்கிறார். அந்த உதவிக்கு பதில் உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

சிக்கல் அங்குதான் வருகிறது.

என்ன செய்வீர்கள்.

உங்களுக்கு ஒரு இலட்சம் உதவி செய்வது அவருக்கு எளிது. நீங்களும் பதிலுக்கு ஒரு இலட்சம் உதவி செய்யப் போனால் அது ஒன்றும் பெரிதாக இருக்காது. நீங்கள் பல மடங்கு பெரிதாகச் செய்ய வேண்டி இருக்கும்.


எனவே, உதவி கேட்டுப் போகும்போது யாரிடம் உதவி கேட்கிறோம் என்று கவனமாய் இருங்கள்.



1 comment:

  1. எனவேதான், "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்றனரோ?

    பெரியவர், சிறியவர் என்பது பணத்தை மட்டும் வைத்து அல்ல. பணக்காரனுக்கும் பல சமயம் உதவிகள் தேவைப்படலாம்.

    ReplyDelete