Saturday, July 6, 2013

குசேலோபாக்கியானம் - நடந்து சிவந்த சேவடிகள்

குசேலோபாக்கியானம் - நடந்து சிவந்த சேவடிகள் 



இது  ஒரு புது ப்ளாகின் ஆரம்பம். குசேலோபாக்கியானம், குசேலனுக்கும் கண்ணனுக்கும்  உள்ள ஆழமான பக்தி கலந்த நட்பை விவரிக்கும் கதை.

குசேலோபாக்கியானம் - இதில் உள்ள பாடல்கள் அத்தனையும் தேன் .  முழுவதும் படித்து விட்டேன்.  எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியவில்லை.  அவ்வளவு அருமையான பாடல்கள். 

 அதில் இருந்து உங்களுக்காக சில பாடல்கள்.....

தாமரைப் பூ. மிக மென்மையானது. அதில் தோன்றிய திருமகள்.  அதைவிட மென்மையானவள். அவளுடைய கரம் முற்றாத தளிர் போல மென்மையானது. அப்படிப் பட்ட திருமகள், தன் தளிர் கரங்களால் மிக மிக மென்மையாக திருமாலின் பாதங்களை வருடுகிறாள். அந்த மென்மையைக்  கூட தாங்க மாட்டாமல், திருமாலின் பாதங்கள் சிவந்து போகின்றன. அப்படிப்பட்ட மென்மையான பாதங்கள் சிவக்க சிவக்க ஆடு மாடு மேய்க்க நடந்தான். அவன் புகழ் வாழ்க.

பாடல்  

முற்றா இளமென் தளிர்க்கரத்தால்
          முனிவி லாது மெல்லெனச்செம்
     பொற்றா மரையிற் குடியிருக்கும்
          பூவை வருடுந் தொறுஞ்சேக்கும்
     விற்றார் அணிநற் பதமிரண்டும்
          வியன்மா நிலந்தீண் டிடநடந்து
     கற்றா மேய்த்த சிற்றாயன்
          காமர் சீர்த்தி வாழியவே.



பொருள்

முற்றா = முற்றாத

இள = இளமையான

மென் = மென்மையான

 தளிர்க்கரத்தால் = தளிர் போன்ற கரங்களால்

முனிவி லாது = கோபம் இல்லாமல்,  இனிமையாக, மகிழ்ச்சியுடன்

மெல்லெனச் = மெல்லமாக

செம் = சிவந்த 

பொற்றா மரையிற் = பொன் போன்ற  தாமரையில்

குடியிருக்கும் = வசிக்கும்

பூவை = பூ போன்ற திருமகள்

வருடுந் = வருடும்

தொறுஞ் = ஒவ்வொரு முறையும்

சேக்கும் = சிவக்கும்

விற்றார் = வில் + தார் = பூமாலை

அணிநற் பதமிரண்டும் = அணிந்த பாதங்கள் இரண்டும்

வியன்மா நிலந்தீண் டிட = விரிந்த இந்த நிலத்தை கால் தரையில் பட

நடந்து = நடந்து

கற்றா = கன்று + ஆ = பசுவையும் கன்றையும்

 மேய்த்த சிற்றாயன் = மேய்த்த சிறிய  ஆயன்

காமர் சீர்த்தி வாழியவே. = பெரிய புகழ் வாழியவே

(if you like it and want me to continue with more writings on this, please click g+ button given below)

1 comment: