Tuesday, July 9, 2013

ஜடாயு - காமம், காதையும் மறைக்கும்

ஜடாயு - காமம், காதையும் மறைக்கும் 


தன்னிடமுள்ள வரங்களை நினைத்து இராவணனுக்கு இறுமாப்பு. நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பில். முக்கோடி வாழ் நாள், முயன்று உடைய பெரும் தவம், எக்கோடி யாராலும் வெல்லப் படாய் என்ற வரங்களை நினைத்து, நினைத்ததை முடித்து வந்தான்.

இராவணா, உன் வரங்களும் வித்தைகளும் இராமன் வில்லில் அம்பை தொடுக்கும்வரை தான் இருக்கும்.

அதற்கப்புறம், அந்த வரங்கள் பலிக்காது என்ற உண்மையை சொல்கிறான்.

நடந்தது அது தானே. உண்மை சில சமயம் நாம் எதிர் பார்க்காத இடத்தில் இருந்து வெளிப் படுகிறது. நாம் தான் காது கொடுத்து கேட்பதில்லை.

இராவணனுக்கு இந்த உண்மை மனதில்  தைத்திருந்தால் ?

விதி.

காமம் காதை மறைத்தது.

பாடல்

'புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும், மற்று  உள விஞ்சைகளும்,
உரம் பெற்றன ஆவன-  உண்மையினோன்
சரம் பற்றிய சாபம்      விடும் தனையே.


பொருள்





'புரம் பற்றிய போர் விடையோன் = முப்புரங்களை போரில் அழித்த,  எருதின் (விடை) மேல் ஏறியவன் (சிவன்)

அருளால் = அருளால்

வரம் பெற்றவும் = பெற்ற வரங்களும்

மற்று  உள விஞ்சைகளும் = மற்ற வித்தைகளும்

உரம் பெற்றன ஆவன = வலிமை உள்ளவைதான்

உண்மையினோன் = என்ன அருமையான வார்த்தை ! உண்மையானவன். வாய்மை தவறாதவன். சொன்ன சொல் தவறாதவன். உண்மையை,  அறத்தை நிலை நிறுத்துபவன் - இராமன்.


சரம் பற்றிய சாபம் விடும் தனையே = சாபம் என்றால் வில் என்று ஒரு அர்த்தம் உண்டு. இராமன் வில்லில் சரத்தை (அம்பை) ஏற்றியவுடன் உன் வரங்களும் வித்தைகளும் உன்னை விட்டு விட்டுப் போய் விடும்.

இராவணன் கேட்கவில்லை.

காமம் காதை மறைத்தது.



No comments:

Post a Comment