Thursday, August 1, 2013

திருக்குறள் - பொய்யாமையும் செய்யாமையும்

திருக்குறள் - பொய்யாமையும் செய்யாமையும் 



பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

ஒருவன் பொய் சொல்லாமல் இருந்தால் அவன் மற்ற அறங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பொய்யாமையே பெரிய அறம் .

இருப்பதே ஏழு வார்த்தைகள். அதிலே இரண்டு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வரும்படி எழுதுவானேன்.

பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை நன்று

என்று சொல்லி இருக்கலாம்தானே. பொருள் ஒன்றும் சிதையவில்லையே ? பின் எதற்கு அந்த வார்த்தைகளை இரண்டு தரம் சொல்லுவது ?

வள்ளுவர் சும்மா சொல்லுவாரா ?

பொய் சொல்லாமல் இருந்தால் மற்ற அறங்கள் செய்யத் தேவை இல்லை.

சரி. பொதுவாக நான் பொய் சொல்லுவது இல்லை, ஆனால் எப்போதோ, ஒரு சில சமயங்களில், கடினமான நேரங்களில், தர்ம சங்கடமான நேரங்களில் பொய் சொல்லுவது உண்டு. அது பரவாயில்லையா ? என்று கேட்டால் வள்ளுவர் சொல்கிறார்....

பொய்யாமை என்ற செயலை  பொய்யாமல் செய்ய வேண்டும். அது ஒரு போதும்  பொய்த்துப்  போகக் கூடாது. இந்த ஒரு தடவை தானே, அந்த ஒரு தடவை தானே  என்று சாக்கு சொல்லக் கூடாது.

பொய்யாமை , பொய்யாமை ஆற்றின். பொய்யாமையை பொய்யாமல் செய்தால்

சரி, பொய்யாமை பொய்யாமை புரிகிறது.

அது என்ன செய்யாமை செய்யாமை நன்று ?

ஒருவன் பொய்யாமை என்ற அறத்தை கடை பிடித்துக் கொண்டே மற்ற அறங்களையும்  செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி மற்ற அரண்களை செய்யும்போது  அதில் சில தீமைகளும், தவறுகளும் நிகழலாம். இவனால்  அவற்றை மறைக்க முடியாது ஏன் என்றால் அவன் பொய்யாமை என்ற அறத்தை  செய்து  கொண்டு இருக்கிறான். அந்த சிறிய தவறுகளால் அவன்  தண்டனை அடைய  நேரிடலாம். அவனைப் பிடிக்காதவர்கள், அந்த தவறுகளை பெரிதாக்கி அவனை அழிக்க நினைக்கலாம்.

எனவே, பொய்யாமை என்ற ஒரு அறத்தை பற்றி ஒழுகுபவர்கள், மற்ற அறங்கள்  எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

இது ஒரு செய்யாமை.

பொய்யாமை வழி  நிற்பவர்கள், மற்ற அறங்களை கடை பிடித்து அதில் தவறோ  தீங்கோ ஏற்பட்டால், அதன் மூலம் அவர்கள் தண்டனை அடைவார்கள், ஏன் என்றால் அவர்கள் அதை மறைக்க  மாட்டார்கள்.   இப்படி தண்டனை பெற்று, திருந்தி எல்லா தீவினைகளும் அவனை விட்டுப் போய் விடும். மற்ற அறங்களை செய்யாமல் இருப்பது என்பது தானகவே  நிகழும்.
அதாவது, செய்யாமை என்ற செயல் செய்யாமல் தானகவே நிகழும்.

அதாவது, கள் உண்ணாமை என்ற  அறம் இவன் முயற்சி எதுவும் செய்யாமலே  தானாகவே  நிகழும்.அதாவது இவன் கள்  உண்ணாமல் இருக்க எந்த முயற்சியும்  செய்ய வேண்டாம். செய்யாமை என்பது   பெரும்பாலும் முயற்சியால் விளைகிறது.

நான் இனிப்பு பண்டங்களை உண்ணாமல் இருக்க ரொம்ப முயற்சி எடுக்கிறேன். எனக்கு இனிப்பு பண்டங்கள் மேல் அவ்வளவு ஆர்வம். அதை உண்ணாமல்  இருக்க நான் ரொம்ப முயற்சி எடுக்கிறேன்.

ஆனால், களவு என்ற கெட்ட செயலை செய்யாமல் இருக்க நான் எந்த முயற்சியும்   எடுப்பது இல்லை. அது இயல்பாக நிகழ்கிறது.    ஒன்றும் செய்யாமல்  களவு செய்யாமை நிகழ்கிறது.

வள்ளுவர் ரொம்ப யோசித்து இந்த குறளை எழுதி இருக்கிறார்.

நீங்களும் யோசியுங்கள்


3 comments:

  1. முதல் வரியின் விளக்கம் நீங்கு பொருந்தியிருக்கிறது. இரண்டாவது வரியின் விளக்கம் வலிந்து பொருள் கொள்வதுபோல் இருக்கிறது. எனவே, இரண்டு சொற்களும், வலியுறுத்துவது கருதி இரண்டு முறை சொல்லப்பட்டன என்று கொண்டால் இந்த சங்கடம் இல்லை. சிறியேனின் பணிவான கருத்து.

    ReplyDelete
  2. எழுத்துப்பிழை திருத்தியது:

    முதல் வரியின் விளக்கம் நன்கு பொருந்தியிருக்கிறது. இரண்டாவது வரியின் விளக்கம் வலிந்து பொருள் கொள்வதுபோல் இருக்கிறது. எனவே, இரண்டு சொற்களும், வலியுறுத்துவது கருதி இரண்டு முறை சொல்லப்பட்டன என்று கொண்டால் இந்த சங்கடம் இல்லை. சிறியேனின் பணிவான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. அது சரியல்ல என்பது என் பணிவான கருத்து.

      இந்த குறளை மீண்டும் ஒரு முறை ஒரு மாதம் கழித்து எழுதுகிறேன். சரியாக எழுதுகிறேனா என்று பார்க்கலாம்

      Delete