Monday, August 12, 2013

இராமாயணம் - நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள்

இராமாயணம் - நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள் 


சீதை மேலும் சொல்லுகிறாள் மாறு வேடத்தில் வந்த இராவணனிடம், "தீயவர்களோடு சேர்ந்தவர்கள் நல்லவர்கள் அல்லர். சொல்லப் போனால், தூயவர்கள், நல்லவர்கள், என்றும் காலம் காலமாக தொடர்ந்து வரும் அற வழியில் நிற்பார்கள். தீயவர்கள் ஒரு நெறியில் நிற்க மாட்டார்கள். இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று இருப்பார்கள். இதை எல்லாம் அறிந்த சீதை, அவர்கள் கொள்கை மாறுவார்கள் என்று அறிந்தாள் , ஆனால் உருவமும் மாறுவார்கள் என்று அறியவில்லை.

தீயவர்களோடு சேர்ந்து, அவர்களை நல் வழிப் படுத்துவோம் என்று நல்லவர்கள் நினைக்க மாட்டார்கள். நல்லவர்கள், தூய்மையானவர்கள் என்று சொன்னாலே அவர்கள் தீயவர்களோடு  சேராதவர்கள் என்று அர்த்தம். மாறி சேர்ந்து விட்டால், என்ன காரணத்திற்காகவும், அவர்கள் நல்லவர்கள் அல்லாதவர்களாக மாறி விடுவார்கள்.

பாடல்  

சேயிழை-அன்ன சொல்ல,-'தீயவர்ச் சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர், சொல்லின், தொல்  நெறி தொடர்ந்தோர்' என்றாள்;
'மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு உரு வரிக்க' என்பது,
ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின், அயல் ஒன்று எண்ணாள். 

பொருள்


சேயிழை = சிறந்த அணிகலன்களை பூண்ட சீதை

அன்ன சொல்ல = இராவணன் , அப்படி சொல்லக் கேட்டு

'தீயவர்ச் சேர்தல் செய்தார் = தீயவர்களோடு சேர்ந்தவர்கள்

தூயவர் அல்லர் = நல்லவர்கள் அல்லர். அது என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சை விட்டால் அது அந்த பாலை கெடுக்குமே அன்றி தான் நல்லதாக மாறாது.

சொல்லின்= சொல்லப் போனால்

தொல்  நெறி தொடர்ந்தோர்' என்றாள் = நல்லவர்கள், பழைய, காலம் காலமாக இருந்து வரும் அற வழியில் செல்பவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள். தீயவர்களோ கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நேற்று ஒரு வாழ்க்கை என்று வேறு ஒன்று என்று இருப்பார்கள். அவர்களுக்கு என்று ஒரு வழி  முறை கிடையாது. பாதைகள் நாளும் மாறிக் கொண்டே இருக்கும்.


'மாய வல் அரக்கர் வல்லர் = மாயங்கள் செய்யும் அரக்கர்கள் வல்லவர்கள்

வேண்டு உரு வரிக்க' என்பது = விரும்பிய உரு எடுக்க வல்லவர்கள் என்று

ஆயவள் அறிதல் தேற்றாள் = அவள் அறிந்து இருக்கவில்லை

ஆதலின், அயல் ஒன்று எண்ணாள்.  = ஆதலால் வேறு ஒன்றும் அவள் நினைக்கவில்லை

சீதை வாயிலாக கம்பன் ஒரு பாடம் நடத்துகிறான்....

1. நல்லவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள். அப்படி சேர்ந்தால் அவர்கள் நல்லவர்கள் இல்லை. 

2. நல்லவர்கள் என்றும் ஒரு வழியில் நடப்பார்கள்.

4. தீயவர்கள் அடிக்கடி தங்கள் கொள்கைகளை, வழிகளை மாற்றிக் கொள்வார்கள். அவர்களை நம்ப முடியாது.

5. கொள்கைகளை மட்டும் அல்ல, அவர்கள் உருவத்தையும் மாற்றிக் கொள்வார்கள். உருவம் என்றால் நடை  , உடை, பாவனை, தோளில் போடும் கட்சித் துண்டு , எல்லாம் மாறும். நேற்றுபோல் இன்று இருக்க மாட்டார்கள். 

6. அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பவன் நல்லவன் அல்ல. 

"அவனை நம்பி மோசம் போய் விட்டேன் "

"அவன் இப்படி மாறுவான் என்று நான் நினைக்கவே இல்லை "

"எப்படி இருந்தான், இப்ப எப்படி மாறிப் போய் விட்டான்...கைல நாலு காசு வந்ததும் ஆளே  அடையாளம் தெரியாம மாறிட்டான் "

என்று மோசம் போனவர்கள் பேசக் கேட்டு இருக்கிறோம் அல்லவா ?


5 comments:

  1. இந்தப் பாடலுக்கு, புவனா என்ன எழுதப் போகிறார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. தீயவருடன் சேர்வது என்றால், அவர்களுடன் இணைந்து அவர் செய்யும் தீய செயலை செய்வதாகும். அவர்களும் பழகி, தீயன செய்யக் கூடாது என்று சொல்வது "சேர்வது" என்று சொல்ல முடியாது. பக்கத்துக்கு வீட்டு பையனுடன் சேர்ந்து தம் அடிப்பது தவறு, அவனுடன் பழகி தம் அடிக்கக்கூடாது என்று அவனிடம் சொல்வது தவறு அல்ல.

    ReplyDelete
  3. By the time you tell him to leave smoking, he will make you smoke. He will convince you to smoke. Is that ok ?

    ReplyDelete
  4. காப்பியங்களின் நோக்கம் மக்களுக்கு நல்வழி காட்டுவது. கம்பர் இராமாயணத்தில் மிக நல்ல கருத்துக்களை கூறி இருக்கிறார். மறுக்க முடியாது. ஆனால் நல்லவர்கள் அனைவரும் கெட்டவர்களோடு சேரவே கூடாது அவர்களை திருத்த எந்த முயற்சியும் செய்யகூடாது என்று சொல்லி இருக்க மாட்டார். all good, learned, decent people have some social and moral responsibility to correct those who are not good. otherwise those people will multiply like anything and fill up and spoil the whole society, and there wont be place for the good people to live. So atleast to avoid that we have to try to guide them. யாரோ ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ குழிக்குள் விழ போனால் தடுக்க முயற்சி செய்யாமல் நானும் விழுந்து விடுவேன் என்று பயந்து ஒதுங்கி போவது சரி என்று எனக்கு பட வில்லை.
    Im not questioning kambar or you but this just my opinion.

    ReplyDelete
    Replies
    1. விதி வலியது.

      ஊழிற் பெருதக்க யாவுள மற்றவை சூழினும் தான் முந்துறும்.

      விநாச காலே, விபரீத புத்தி.

      Delete