Tuesday, August 20, 2013

இராமாயணம் - நீங்கள் நல்லவரா? கெட்டவரா ?

இராமாயணம் - நீங்கள் நல்லவரா? கெட்டவரா ?


இப்படி ஒரு கேள்வியை கேட்டால் யாரும் தாங்கள் நல்லவர்கள் என்றே சொல்லுவார்கள். அது பெரும்பாலனவர்கள் விஷயத்தில் சரியாகவும் இருக்கும்.

ஒரு மிக சிறந்த நல்லவன், மிகப் பெரிய கெட்டவனாக மாற எவ்வளவு  ஆகும் ?

கைகேயி மிக மிக நல்லவள். தசரதன் அவள் மேல் உயிரையே வைத்து இருந்தான். அவளும் அவன் மேல் உயிரை வைத்து இருந்தாள் . அவன் போருக்குப் போனபோது கூட அவனை பிரிந்து இருக்க முடியாமல், அவன் கூடவே போருக்குப் போனாள் . அவனுக்கு தேர் ஓட்டினாள் .

இராமனை தன் மகனாக நினைத்து வளர்த்ததாள்.

இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியை தசரதன் அவளுக்குத் தான் சொல்ல  வந்தான் .... இராமனைப் பெற்ற கோசலையிடம் கூட முதலில் சொல்ல  நினைக்கவில்லை.

அவளைப் பற்றி சொல்ல வந்த கம்பன், பாற்கடலில் கிடக்கும் இலக்குமி மாதிரி இருந்ததாள் என்றான்.

அப்படிப் பட்ட நல்லவள், அடியோடு மாற எவ்வளவு நேரம் ஆனது ?

கூனி மொத்தம் 24 பாடல்கள் சொல்லும் நேரம்தான் ஆனது.

மிக மிக நல்லவள்...மிக மிக கொடியவளாக மாறுவதற்கு மொத்தம் 24 பாடல்கள்தான் தேவைப்  பட்டது.

கொடியவர்களை, நல்லவர்களை எவ்வளவு சீக்கிரம் மாற்றி விடுவார்கள் என்பதற்கு  இது ஒரு  உதாரணம்.

கணவனின் உயிர்  போனது, அன்போடு வளர்த்த இராமன் காடு  போனான், யாருக்காக இவ்வளவும் கேட்டாளோ அந்த பரதன் அவளை தாயீர் அல்லீர் நோயீர், பேயீர் என்று அவளை வைது தீர்த்தான்....

அவ்வளவு கொடியவளாக கூனியின் 24 பாடல்கள் போதுமானதாய்  இருந்தது.

பால் போல் இருந்த அவள் மனம் திரிந்தது என்றான் கம்பன்.

பால்தான், ஆனால் அதில் ஒரு துளி புளிப்பு விழுந்தவுடன் தயிராக திரிவது போல அவள் மனம் திரிந்தது என்றான் கம்பன்.


பாடல்

தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.

பொருள்





தீய மந்தரை = தீய மந்தரை

 இவ் உரை செப்பலும் = அந்த உரைகளை சொன்னவுடன்

தேவி = கைகேயி

தூய சிந்தையும் திரிந்தது = தூய சிந்தையும் திரிந்தது. பாலில் ஒரு துளி மோர் விழுந்தால் எப்படி அது கொஞ்சம் கொஞ்சமாக திரிந்து போகுமோ அது போல் அவள் மனம் திரிந்தது

சூழ்ச்சியின் = எண்ணிப் பார்த்தால்

இமையோர் மாயையும் = தேவர்களின் மாயையும் 

அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் = அவர்கள் பெற்ற உண்மையான நல்ல வரத்தினாலும்

ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும் = அந்தணர்கள் இயற்றிய தவத்தாலும், அவள் மனம் திரிந்தது

தீயவர்களின் சேர்க்கை எப்படி நல்லவர்களை அடியோடு மாற்றும் என்பதற்கு ஒரு உதாரணம் இது.

இன்னொரு செய்தி, மனிதர்களில் யாரும் முழுமையான நல்லவர்களும் இல்லை. முழுமையான கெட்டவர்களும் இல்லை. சேரும் இனத்தைக் கொண்டு மனித மனம்    மாறும்.

யார் எப்படி வேண்டுமானாலும்  மாறலாம்.

தீயாரைக் காண்பதும் தீதே என்றாள் அவ்வை. பார்த்ததற்கு  அப்புறம் அல்லவா பழகுவது, பின் அவர்களை திருத்துவது....

பார்பதே தீது....

No comments:

Post a Comment