Monday, August 19, 2013

இராமாயணம் - கடல் கடந்தவன்

இராமாயணம் - கடல் கடந்தவன்  


தசரதன்.

அவன் அனைத்தின் எல்லைகளையும் கடந்தவன்.


அவனிடம் உதவி என்று  வந்தவர்கள், கடல் போல, கணக்கில் அடங்கா அலை அலையாய் வந்து கொண்டு இருப்பார்கள். அந்த இரப்பவர்கள் என்ற கடலை தானம் கொடுத்தே கடந்து விட்டான். இனிமேல் தனம் பெற யாருமே இல்லை என்ற அளவிற்கு தானம் தந்தே இரப்போர் என்ற கடலை கடந்தான்.

அறிவு கடல் போன்றது. அந்தக் கடலையும் அவன் கடந்தான். எப்படி ? ஆய்வு செய்து ஆய்வு செய்து அறிவு அத்தனையும் அடைந்தான். இனி அறிய ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு ஆய்வு செய்தே கல்விக் கடலை கடந்தான்.

பகை எனும் கடல். பகைவர்கள் என்ற கடலை வாளால் சண்டையிட்டே கடந்தான். அவனுக்கு இனி யாரும் பகைவர்களே இல்லை என்ற அளவிற்கு அத்தனை பகைவர்களையும் வென்றான்.

ஆசை எனும் கடல். வாழ்க்கையின் போகம் எல்லாம் அனுபவித்தே கடந்தான்.   ஆசைக்கு  .அளவு இல்லை. ஆசை கடல் போன்றது. அதை நீந்தி கடந்தவர் யாரும் இல்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக விரிந்து கொண்டே போகும்.  அளவற்ற ஆசை அனைத்தையும் அடைந்தவர் யாரும் இல்லை - தசரதனைத் தவிர. தசரதன் ஆசை எனும் கடலை அனுபவித்தே கடந்தானாம். இனிமேல் அனுபவிக்க எதுவும் இல்லை. அத்தனை ஆசைகளையும் அனுபவித்து விட்டான்.

பாடல்


ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 

பொருள்





ஈந்தே கடந்தான் = தானம் கொடுத்தே கடந்தான்

இரப்போர் கடல் = யாசகம் பெற வந்தவர் என்ற கடலை

எண் இல் = கணக்கில் அடங்காத

நுண் நூல் = நுண்மையான நூல்களை

ஆய்ந்தே கடந்தான் = ஆராய்ச்சி செய்தே கடந்தான்

அறிவு என்னும் அளக்கர் = அளக்கர் என்றால் கடல். அறிவு என்ற கடலை ஆராய்ந்தே கடந்தான்.

வாளால் = வாளால்

காய்ந்தே கடந்தான் = சண்டையிட்டே கடந்தான்

பகை வேலை = வேலை என்றால் கடல். பகை என்ற கடலை போரிட்டே கடந்தான்.

கருத்து முற்றத் = கருத்து முற்ற

தோய்ந்தே கடந்தான் = அனுபவித்தே கடந்தான்

திருவின் தொடர் போக பௌவம் = பௌவம் என்றால் கடல். செல்வத்தால் தொடர்ந்து வரும்  அத்தனை இன்பங்களையும் அனுபவித்தே கடந்தான்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம்


எண் இல் நுண் நூல் ஆய்ந்தே கடந்தான் = தசரதன் காலத்திலேயே நிறைய புத்தகங்கள்  இருந்து இருக்கின்றன. அதுவும் எண்  இல் நூல்கள். கணக்கில் அடங்காத  நூல்கள். அதுவும் நுண் நூல். ஆழ்ந்த, அறிவு பூர்வமான நூல்கள் நிறைய இருந்திருக்கின்றன.  ஆச்சரியம் !

1 comment:

  1. "இன்பங்கள் அனைத்தும்" என்று சொல்ல வந்த கம்பர், ஏன் "செல்வத்தால் தொடர்ந்து வரும் இன்பம்" என்று சொன்னார்? செல்வத்தாலன்றி வரும் இன்பங்கள் பல இருக்கின்றனவே!

    அற்புதமான பாடல். "கடல் கடந்த..." என்ற சொல்லுக்கு இதைப் படிப்பவர் மனதில் ஒரு புதுப் பரிணாமம் வந்திருக்கும்.

    ReplyDelete