Sunday, August 25, 2013

இராமாயணம் - இராமனிடம் தசரதன் கேட்டுப் பெற்றது

இராமாயணம் - இராமனிடம் தசரதன் கேட்டுப் பெற்றது 


ஆண்டு, தன் மருங்கு இரீஇ, உவந்து,
     அன்புற நோக்கி,
‘பூண்ட போர் மழு உடையவன்
     பெரும் புகழ் குறுக
நீண்ட தோள் ஐய ! 
     நிற் பயந்தெடுத்த யான், நின்னை
வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது’
     என, விளம்பும்.

முந்தைய ப்ளாகில் தசரன் தன் அரசை இராமனுக்கு தருவது என்ற நிச்சயித்த பின்,  அதற்கு தகுதியானவன் தானா என்று அவனை தன் தோளால்  அளந்தான் என்று பார்த்தோம்.

இராமன் தகுதியானவன் தான் என்று  அறிந்த பின், "இந்தா அரசாட்சி,   ஏற்றுக் கொள்" என்று கொடுத்து  விடவில்லை.

ஒரு வேளை இராமன் அரசாட்சியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாவிட்டால் ? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று நினைத்து விட்டால் ? இப்ப தானே திருமணம் முடிந்தது, இன்னும் கொஞ்ச நாள்  சந்தோஷமாக இருந்து விட்டு அப்புறம் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டால் ?

பதவி  என்பது பெரிய  விஷயம். அதை சரியாக பரிபாலித்தவர்களுக்குத்தான் தெரியும்  அதன்  கஷ்டம்.

இராமா, நீ தான் மூத்த  மகன்,நீ தான் இந்த அரசை ஏற்று நடத்த வேண்டும் என்று  வலுக் கட்டாயமாக அவன் மேல் அரசை திணிக்கவில்லை.

ஒரு பெரிய பதவியில் இருப்பவன், வேலையை விடுவது என்று முடிவு செய்து விட்டால்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கக்  கூடாது.

தனக்குப் பின் தகுதியான ஒருவனை கண்டு பிடித்து, அவன் விருப்பம் அறிந்து, அந்த பொறுப்பை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். அது தான் முறை.

தசரதன் , இராமனிடம்  கெஞ்சுகிறான்...நீ இந்த அரச பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று....

பொருள்
 

ஆண்டு = அங்கு

தன் மருங்கு இரீஇ = தன் அருகில் இருந்த இராமனை

உவந்து = மகிழ்வுடன்

அன்புற நோக்கி = அன்போடு பார்த்து

‘பூண்ட போர் மழு உடையவன் = எப்போதும் போர்க் கோலம் பூண்டு, கையில் மழு என்ற ஆயுதத்தோடு இருப்பவன் (பரசுராமன்)

பெரும் புகழ் குறுக =  அவனுடைய பெரிய புகழ் குன்றும்படி செய்த 

நீண்ட தோள் ஐய = நீண்ட நெடிய தோள்களை உள்ள ஐயனே

நிற் பயந்தெடுத்த யான் = உன்னை பெற்றெடுத்த யான்

நின்னை வேண்டி = உன்னை வேண்டி

எய்திட விழைவது ஒன்று உளது பெற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது

என, விளம்பும் = என்று சொல்லினான்

எவ்வளவு பெரிய பாரம்பரியம் இந்த நாட்டில் இருந்திருக்கிறது !

எல்லாவற்றையும் தொலைத்து விட்டோமோ என்று கவலையாக இருக்கிறது....



1 comment:

  1. என்ன நல்ல ஒரு பாசத்தைக் காட்டும் காட்சி!

    நன்றி.

    ReplyDelete