Thursday, August 29, 2013

இராமாயணம் - உய்யல் ஆவது ஓர் நெறி

இராமாயணம் - உய்யல் ஆவது ஓர் நெறி 


இராமனிடம் தசரதன்  வேண்டுகிறான்.  ஐயா, கடினமானதும், மிக நீண்டதுமான மூப்பு எனக்கு  வந்துவிட்டது. இந்த  அரசாட்சி என்ற சிறையை விட்டு வெளியேறி நான் பிழைக்கும் வழியை காண நீ எனக்கு உதவிட வேண்டும் என்றான்.

பாடல்

‘ஐய ! சாலவும் அலசினென் ; 
     அரும் பெரு மூப்பும்
மெய்யது ஆயது ; வியல் இடப்
     பெரும் பரம் விசித்த
தொய்யல் மா நிலச் சுமை உறு
     சிறை துறந்து, இனி யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக,
     உதவிட வேண்டும்.

பொருள்

‘ஐய ! = ஐயனே

சாலவும் = ரொம்பவும்

அலசினென் = தளர்ந்து விட்டேன் 

அரும் = அரிய  இங்கு கடினமான என்று  கொள்ளலாம்

பெரு மூப்பும் = பெரிய  மூப்பு.அதாவது நீண்ட மூப்பு. எது நமக்கு பிடிக்காதோ அது நீண்டு கொண்டே போவது மாதிரி  இருக்கும். காதலிக்கு காத்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் யுகம் போல இருக்கும். அவளோடு இருக்கும் போது யுகமும் நொடி போல்  போகும்.


மெய்யது ஆயது = உண்மையை ஆராயப் போனால்

வியல் இடப் = பரந்த இந்த உலகம் என்ற

பெரும் பரம் = பெரிய பாரத்தை

விசித்த தொய்யல் = விசித்தல் என்றால் வலிந்து கட்டப்பட்ட. தொய்யல் என்றால்  துன்பம்.

மா நிலச் சுமை = பெரிய, நிலைத்த பாரத்தை

உறு = கொண்ட

சிறை துறந்து = சிறையை துறந்து

இனி யான் = நான் இனிப் போய்

உய்யல் ஆவது = பிழைக்கும் வழியை காண. உய்தல் என்றால் தப்பி பிழைத்தல். உய்வார்கள் உய்யும் வழி எல்லாம் உய்து அறிந்தோம், எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்  என்பது மணிவாசகம்

ஓர் நெறி புக = ஒரு நல்ல வழியில்  புக. நெறி என்றால் வழி. அது எப்படி நல்ல வழி என்று பொருள் கொள்வது என்றால் பெரியவர்கள் நெறி என்றால் நல்ல நெறி  என்றுதான் கொள்வார்கள்.  நெறி அல்லாத நெறி தன்னை நெறியாகக் கொள்வேனை என்பார்  மணிவாசகர். வழியே ஏகுக, வழியே மீளுக என்பது அவ்வை  வாக்கு.நல்ல வழியில் சென்று நல்ல வழியில் திரும்பி வர வேண்டும்.

உதவிட வேண்டும் = நீ எனக்கு உதவி செய்ய வேண்டும்

ஒரே ஒரு நரை முடியை காதோரம் பார்த்தான் தசரதன். அவனுக்கு மூப்பை பற்றி இவ்வளவு  கவலை.

நாமாக இருந்தால் ஒரு டை அடித்து சரி செய்து  விடுவோம்.

இயற்கைக்கு முரணாக வாழ்வதே வழியாகப் போனது நமக்கு. 

சக்ரவர்த்தி பதவி ஒரு சிறை, ஒரு பாரம் என்று நினைக்கிறான்  தசரதன். 60000  மனைவிகள், அளவற்ற செல்வம், புகழ் இது எல்லாம் பிழைக்கும் வழி அல்ல என்று  உணர்ந்தான்.

வாழ்க்கைக்கு வேறு ஏதோ வேண்டும் என்று நினைக்கிறான். அதைத் தேடித் போக   விரும்புகிறான்.

அரச பொறுப்பை நீ ஏற்றுக் கொண்டு எனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று இராமனிடம்  வேண்டுகிறான். 

காலம் வரும்போது பொறுப்பை இளைய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். 

மிக மிக ஆழ்ந்து படிக்க வேண்டிய  பாடல்கள்.

பதவி, புகழ் ,  பணம்,செல்வம், செல்வாக்கு என்று ஓடிக்  கொண்டிருக்கிறோம். ஆனால்  அது அல்ல வாழ்வின் நோக்கம் என்று அதை ஆண்டு அனுபவித்தவன்    சொல்கிறான். அது சுமை, அது சிறை  என்கிறான். அந்த சிறைக்கு  செல்ல இத்தனை பேர் போட்டி போட்டுக்  கொண்டிருக்கிறார்கள். அந்த தண்டனை  கிடைக்கவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உள்ளே  இருப்பவன்,எனக்கு விடுதலை தா என்று  கெஞ்சுகிறான்.


சிந்தனைக்குரிய பாடல். 


1 comment:

  1. நான் இன்னும் பல்லாண்டுகள் ஆடி ஓடிக்கொண்டு இருப்பேன்! சும்மா ஒரு நரை வந்துவிட்டால், எல்லாம் விட்டுவிட்டுக் காடு போக வேண்டுமா என்ன?!

    ReplyDelete