Saturday, August 31, 2013

வில்லி பாரதம் - முடித்ததும் முடிக்காததும்

வில்லி பாரதம் - முடித்ததும் முடிக்காததும் 


சமாதானமாய் போகலாம் என்று சொன்ன தருமனைப் பார்த்து பீமன் கோபம் கொண்டு சொல்கிறான் .....

"நாம் என்னவெல்லாம் முடித்து விட்டோம்...போரை முடித்து விட்டோம், பாஞ்சாலியின் விரித்த கூந்தலை முடித்து விட்டோம், துரியோதனன் சபையில் நாம் எடுத்த சபதங்களை முடித்து விட்டோம், பிச்சை எடுப்பதில் பேர் வாங்கி பெருமையை, புகழை  முடித்து விட்டோம், நம்முடைய புகழை முடித்து விட்டோம், இவனோடு பிறந்த நான் என்னவெல்லாம் சாதித்து விட்டேன்"

என்று வெறுத்து  கூறுகிறான்.

பாடல்

போர்முடித்தானமர்பொருது புலம்புறுசொற்பாஞ்சாலி பூந்தண்
                                         கூந்தற், 
கார்முடித்தா னிளையோர்முன் கழறியவஞ்சின முடித்தான்
                                    கடவுட்கங்கை, 
நீர்முடித்தா னிரவொழித்த நீயறியவசையின்றி
                               நிலைநின்றோங்கும், 
பேர்முடித்தா னிப்படியே யார் முடித்தாரிவனுடனே
                                    பிறப்பதேநான்.


சீர் பிர்த்தபின்





போர் முடித்தான் அமர் பொருது 

புலம்புறு சொல் பாஞ்சாலி பூந்தண் கூந்தல் கார் முடித்தான் 

இளையோர் முன்  கழறிய வஞ்சின முடித்தான்

கடவுள் கங்கை நீர் முடித்தான் இரவு ஒழித்த  நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் 

பேர் முடித்தான் இப்படியே யார் முடித்தார்

 இவனுடனே பிறப்பதே நான் 

பொருள்


போர் முடித்தான் அமர் பொருது = அமர் என்றால்  போர். பொருது என்றால் பொருந்தி. யுத்தம் செய்து,  வென்று இனி சண்டை  இல்லை என்ற அளவிற்கு வெற்றி பெற்று விட்டான் பீமன். 

புலம்புறு சொல் = புலம்பும் சொற்களைப் பேசும்

பாஞ்சாலி பூந்தண் கூந்தல் கார் முடித்தான் = கார் மேகம் போன்ற பூங்குழலை முடித்தான். விரிந்து கிடந்த கூந்தலை முடித்தான். 

இளையோர் முன்  கழறிய வஞ்சின முடித்தான் = கழறிய என்றால் கூறிய. இளையோர் என்றால்  அர்ஜுனன்,நகுலன், சகாதேவன் போன்ற இளைய தம்பிகள் முன் உரைத்த சபதத்தை இந்த பீமன் முடித்தான்

கடவுள் கங்கை நீர் முடித்தான் = இறந்தவர்களுக்கு ஈமக் கடன் செய்து செய்து கங்கை நீரே வற்றிப் போகும்படி அப்படி ஒரு உக்கிரமான போரை செய்து எதிரிகளை கொன்று குவித்தான்

இரவு ஒழித்த = இதை விட யாரும் பிச்சை பெற முடியாது என்று சொல்லும் அளவிற்கு அதையும் ஒழித்த

 நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் பேர் முடித்தான் = குற்றம் இன்றி, நிலைத்து  நிற்கும்,ஓங்கும் புகழையும் முடித்தான்

 இப்படியே யார் முடித்தார் = இப்படி இத்தனை விஷயங்களை யார் முடித்தார்கள்

 இவனுடனே பிறப்பதே நான் = இவன் பின்னே பிறந்த நான்


தானங்களில் மிக உயர்ந்த தானம் சமாதானம். 

தருமனுக்குத் தெரியும் பாஞ்சாலியின் விரிந்த கூந்தல், அவர்கள் இட்ட   .சபதம் எல்லாம்.   இருந்தும் சமாதானம்  விரும்புகிறான்.

பாஞ்சாலியின் விரிந்த  கூந்தலும்,அவர்கள்  இட்ட சாபமும் பெரிய யுத்தத்திற்கு போதுமான  காரணம்  அல்ல.

அவன் சமாதனம் விரும்புகிறான். 

1 comment:

  1. மன்னிக்கவும் - எனக்கு சரியாகப் புரியவில்லை.

    இதை எல்லாம் முடித்ததாக, பீமன் தன்னைத் தானே கூறி, நொந்து கொள்கிறானா?

    அல்லது

    "இதை எல்லாம் முடித்து விட்டாய்" என்று தருமனைப் பார்த்து ஏளனம் செய்கிறானா?

    ReplyDelete