Monday, September 30, 2013

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

யார் பெரியவர் ? 

சிவனா ? அபிராமியா ?

முப்புரங்களை எரிக்க தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு சண்டை போட்டு வென்றவரா அல்லது அப்பேர்பட்ட சிவனின் உடலில் பாதியை தன்னுடைய மார்பகத்தால் வென்ற அபிராமியா ?


தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

பொருள்

தங்கச் சிலை கொண்டு = தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு 
தானவர் முப்புரம் சாய்த்து = அசுரர்களின் முப்புரங்களை சாய்த்து 

மத = மதம் கொண்ட 

வெங் கண் = சிவந்த கண்களை கொண்ட 
கரி = யானையின் 
உரி = தோலை உரித்து 
போர்த்த = மேலே போர்த்திக் கொண்ட 
செஞ்சேவகன் = சிவந்த மேனியை கொண்ட சேவகன் 
மெய்யடையக் = உடலில் பாதியை அடைய 

கொங்கைக் குரும்பைக் = குரும்பை போன்ற   கொங்களை 
குறியிட்ட நாயகி = குறியாகக் கொண்ட நாயகி 
கோகனகச் = பெரிய தங்கம் போன்ற 

செங் கைக் கரும்பும் = சிவந்த கையில் கரும்பும் 
மலரும் = மலரும் 
எப்போதும் என் சிந்தையதே. = எப்போதும் என் சிந்தையுள்ளே 

ஆண், வெளியே எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் , பெண்ணின் அழகின் முன்னால் அவன் தோற்றுத் தான் ஆக வேண்டும்.

அது பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை 
ஆணுக்கு கிடைக்கும் கம்பீரம் 

மேருவை வில்லாக வளைத்த சிவனின் கதி அது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ...



 

Sunday, September 29, 2013

குறுந்தொகை - மணந்த மார்பே

குறுந்தொகை - மணந்த மார்பே 


குறுந்தொகை போன்ற பாடல்களை படிக்கும் போது அவை எழுதப் பட்ட காலத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத காலம். சின்ன கிராமங்கள். விவசாயம் மட்டுமே பிரதானமாய் இருந்த காலம். ஊரை அடுத்து காடு இருக்கும். சில சமயம் காட்டில் இருந்து விலங்குகள் ஊருக்குள் வருவதும் உண்டு. 

அது ஒரு குளிர் காலம். முன் பனிக் காலம். பின்னிரவு நேரம். நிலவொளியில் ஊரே குளித்துக் கொண்டிருக்கிறது. குளிர் காற்று உயிரையும் சேர்த்து வருடிச் செல்லும் காலம். 
குளிர் மனிதர்களுக்கு மட்டும் அல்லவே. காட்டில் உள்ள மான்களையும் அது சென்று காதோரம் காதல் பேசி விட்டு செல்கிறது. குளிர் தாங்காமல் அவை மெல்ல மெல்ல அந்த கிராமத்துக்கு வருகின்றன. அங்குள்ள வயல்களில் உளுந்து விளைந்திருக்கிறது. அவற்றை அவை உண்ண நினைக்கின்றன. உணவு உண்டால் கொஞ்சம் உடல் சூடு பிறக்கும். இந்த குளிரை தாங்க முடியும் என்று அவை நினைகின்றன. 

அந்த ஊரில் உள்ள தலைவிக்கும் தூக்கம் வரவில்லை. ஜன்னலோரம் அமர்ந்து நிலவொளியில் வயல் வரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறாள். மான்கள் மெல்ல மெல்ல வருவது தெரிகிறது. 

ஹ்ம்ம்ம் என்ற பெரு மூச்சு வருகிறது...அவன் அருகில் இருந்தால் இந்த குளிருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாள். அவன் மார்பில் சாய்ந்து இந்த குளிர் தரும் துன்பத்தை போக்கிக் கொள்ளலாமே என்று நினைக்கிறாள். 

பாடல் 

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே.

பொருள்

பூழ்க்கால் = காடை என்ற பறவையின் காலைப் 

அன்ன = போல 
செங்கால் = சிவந்த கால்களை உடைய 
உழுந்தின் = உளுந்து செடியின் 

ஊழ்ப்படு = காலத்தால் 
முதுகாய் = முற்றிய காய்களை 
உழையினங் கவரும் = மான் இனம் கவரும். உண்பதற்கு வரும் 
அரும்பனி = கடுமையான பனி
அற்சிரம் = அந்த சிரமத்தை  
தீர்க்கும் = போக்கும் 
மருந்து பிறிதில்லை = மருந்து பிறிது இல்லை 
அவர் மணந்த மார்பே = அவரோடு நான் இணைந்திருந்த அவரின் மார்பை தவிர 

யோசித்துப் பார்த்தேன்....எதுக்கு இந்த மான், உளுந்து எல்லாம் இந்த பாடலில். பேசாமல் குளிர் வேதனை போக்க மருந்து அவன் மார்பு என்று சொல்லி விட்டுப் போய் விடலாமே ?

சொல்லலாம். 

மான்கள் வருவது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருக்கும் அந்த ஊரின் தன்மை, உளுந்து விளையும் மண்ணின் தன்மை, குறைந்த மழை பெய்யும் அடி வருடும் வறட்சி, பயிர்களை உண்ணத் தலைப்படும் மான்களின் பசி, அது இரவு நேரமாக இருக்கும் என்ற யூகத்திற்கு இடம் தருவதும், (பகலில் வந்தால் விரட்டி விடுவார்களே), தூக்கம் வராதா தலைவி அதை பார்த்துக் கொண்டிருப்பதும், தலைவனை நினைத்து ஏங்குவதும் ... 

யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு அழகான பாடல் 
 

 


Saturday, September 28, 2013

இராமாயணம் - குகன் அறிமுகம்

இராமாயணம் - குகன் அறிமுகம் 


குகன், இராமன் இருக்கும் இடம் வருகிறான். வாசலில் காவல் நிற்கும் இலக்குவன் கேட்டான் "நீ யார்" என்று. 

குகன் என்ன சொன்னான் என்பது  ஒரு புறம் இருக்கட்டும். 

நம்மை யாராவது "நீங்கள் யார் " என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ? 

நம் படிப்பு, வேலை, திறமை , சொத்து என்று நம் பெருமைகளை சொல்லுவோம். 

குகன் கங்கை கரை நாட்டுக்கு அரசன், ஆயிரம் படகுகளுக்குச் சொந்தக்காரன், எவ்வளவு பணிவாய் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் பாருங்கள்.....

பாடல் 

கூவா முன்னம், இளையோன் குறுகி, 'நீ
ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;
'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான்.

பொருள்

கூவா முன்னம் = குகன் அழைப்பதற்கு முன்னே 

இளையோன் குறுகி = இளையவனான இலக்குவன் அவனை சென்று அடைந்து 

'நீ ஆவான் யார்?' என = நீ  யார் என 

அன்பின் இறைஞ்சினான் = அன்போடு கெஞ்சிக் கேட்டான். இறைஞ்சினான் என்கிறான் கம்பன். 

'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென் = தேவா, உன் திருவடிகளைச் வணங்குவதற்கு வந்தேன் என்றான்.  குகன் இதுவரை இராமனைப் பார்த்தது கிடையாது. இலக்குவனைப் பார்த்து அவன் தான் இராமன் என்று நினைத்த்துக் கொண்டான். உன்னை சேவிக்க வந்தேன் என்றான். உண்மையில் அவன் சேவிக்க வந்தது இராமனை 

நாவாய் வேட்டுவன் = படகுகள் ஓட்டும்  ஒரு வேடன் 

நாய் அடியேன்' என்றான் = நாய் போல அடிமையானவன் என்கிறான். 

என்ன ஒரு பணிவு. 

அடக்கம் அமரருள் உய்கும் என்றான் வள்ளுவன். தன்னை இவ்வளவு பணிவாக அறிமுக படுத்திக் கொண்டவன் யாரும் இல்லை இந்த உலகில். 

பெரியவர்களிடம் இந்த அடக்கம் எப்போதும் நிறைந்து கிடக்கிறது. 

மாணிக்க வாசகரிடம் இருந்தது - நம்மையும் ஓர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று வித்து என்பார். 
அபிராமி பட்டரிடம் இந்த அடக்கம் இருந்தது - அடியேனுடைய நாய்த் தலையே என்பார். 

குகனிடம் அவ்வளவு அன்பு.. அவ்வளவு அடக்கம். 


மூதுரை - தீயார் உறவு

மூதுரை - தீயார் உறவு 


தீயவர்களைக் காண்பதும் தீதே - பார்த்தால் என்ன ஆகும் ? அட, இவன் இவ்வளவு தப்பு செய்கிறான், சட்டத்தை மீறுகிறான், அயோக்கியத்தனம் பண்ணுகிறான் இருந்தும் நல்லாதான் இருக்கான், ஒழுங்கா நேர்மையா இருந்து நாம என்னத கண்டோம், நல்லதுக்கு காலம் இல்லை...நாமும் கொஞ்சம் அப்படி செய்தால் என்ன என்று தோன்றும். கொஞ்சம் செய்வோம். மாட்டிக் கொள்ளவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் செய்யத் தோன்றும். இப்படிப்  போய் கடைசியில் பெரிதாக ஏதாவது செய்து மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, தீயவர்களை காணாமல் இருப்பதே நல்லது.

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

தீயார் சொல்லை கேட்பதும் தீதே....தீயதைக் கூட நல்லது மாதிரி சொல்லி நம்மை தீய வழியில் செலுத்தி விடுவார்கள். ஒரு தடவைதானே சும்மா முயற்சி செய்து பாருங்கள், பிடிக்கலேனா விட்டுருங்க என்று கேட்ட பழங்கங்களை நமக்கு அறிமுக படுத்தி விடுவார்கள்.

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

தீயார் குணங்களை ஊரைப்பதும் தீதே ...தீயவர்களின் குணங்களைப் பற்றி பேசக் கூட கூடாது. இன்றைய தினம் தொலைக் காட்சிகளிலும், தினசரி இதழ்களிலும் கொலை செய்தவன், கொள்ளை அடித்தவன், கற்பழித்தவன் , வெடி குண்டு வைத்தவன் ....இவர்கள் பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகிறது. அது கூடாது என்கிறார் அவ்வையார்

அவரோடு இணங்கி இருப்பதும் தீதே .... அவர்களோடு ஒன்றாக இருப்பதும் தீதே

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

Friday, September 27, 2013

மூதுரை - பிளவு

மூதுரை - பிளவு 


உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா ? அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா ? வந்த கோபம் இன்னும் இருக்கிறதா ? அப்படி யாராவது இருக்கிறார்களா உங்கள் பட்டியலில் ? உங்களுக்கு முன்பு தீமை செய்தவர்கள், உங்களை ஏமாற்றியவர்கள், என்று யாராவது இருக்கிறார்களா ? யோசித்துப் பாருங்கள்....

அந்த பட்டியல் அப்படி ஒரு புறம் இருக்கட்டும்....

இந்த கல்லு இருக்கிறதே அது ஒரு முறை உடைந்து விட்டால் பின் ஒட்டவே ஒட்டாது. என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும். 

பொன் இருக்கிறதே, அதில் கொஞ்சம் பிளவு வந்து விட்டால் உருக்கி ஒட்ட வைத்து விடலாம். ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிடணும்

இந்த தண்ணீரின் மேல் அம்பை விட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப் பொழுதில் மீண்டும் சேர்ந்து கொள்ளும். அம்பு பட்ட தடம் கூட இருக்காது. 

கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால் வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டார்கள். நமக்கு எப்படி மறு தீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள். இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல 

நல்லவர்களுக்கு நாம் ஒரு தவறு செய்துவிட்டால், கொஞ்ச நாள் மனதில் வைத்து இருப்பார்கள்....பின் மறந்து விடுவார்கள் - பொன் மேல் பிளவு போல 

ஆன்றோர் அல்லது பெரியோர் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாம் ஏதாவது  தீமை செய்து விட்டால் உடனடியாக மறந்து மன்னித்து விடுவார்கள்....நீர் மேல் பிளவு போல 

பாடல் 

கற்பிளவோ ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்

பொருள்

Wednesday, September 25, 2013

இராமாயணம் - பொருக்கென எழுந்து

இராமாயணம் - பொருக்கென எழுந்து


இராமனுக்கு முடி சூட்டுவது என்று மந்திரிகள் சபையில் முடிவு செய்து ஆகி விட்டது. இராமனை அழைத்த்து வரும்படி சுமந்திரினிடம் தசரதன் சொல்லி அனுப்புகிறான். 

இங்கே கொஞ்சம் நிறுத்துவோம். 

அரச முறைப் படி, இராமன் தான் அரசு ஆள வேண்டும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தசரதன் சொன்னால் போதும். யாரும் அதை மறுத்து இருக்க மாட்டார்கள். இருந்தாலும், தசரதன் மந்திரிகள் சபையைக் கூட்டி ஆலோசிக்கிறான். அவர்கள் கருத்தைக் கேட்கிறான். கம்பனின் நிர்வாக இயல் என்று தனியாக எழுதலாம்.

சுமந்திரன் போய் இராமனை அழைக்கிறான் "அரசன் உங்களை அழைத்து வரும்படி சொன்னான் " என்று சொன்னவுடன் "பொருக்கென" வந்தானாம் இராமன். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன், கொஞ்சம் ட்ரெஸ் பண்ணிக் கொண்டு வருகிறேன், என்று எல்லாம் சொல்லவில்லை. உடனே வந்தானாம். 

எவ்வளவு நல்ல பிள்ளை. 

பெரியவர்கள் சொல்வதை அப்படியே கேட்பதில் இராமனுக்கு நிகர் இராமனே.

பாடல் 

கண்டு, கைதொழுது, 'ஐய, இக் கடலிடைக் கிழவோன்,
"உண்டு ஒர் காரியம்; வருக!" என, உரைத்தனன்' எனலும்,
புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து, ஓர்
கொண்டல்போல் அவன், கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான்

பொருள் 

Sunday, September 22, 2013

தேவாரம் - யாதும் ஓர் குறைவில்லை

தேவாரம் - யாதும் ஓர் குறைவில்லை 


குறை இல்லாத மனிதன் யார் ? எல்லோருக்கும் ஏதோ  ஒன்று இல்லை. இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை.

கல்யாணம் ஆகாதவனுக்கு திருமணம் ஆகவில்லையே என்று குறை.

ஆனவனுக்கு பிள்ளை இல்லை என்று குறை.

பிள்ளை இருப்பவனுக்கு அது  சரியாகப் படிக்கவில்லையே என்று குறை.

பணம் இல்லாக் குறை, ஆரோக்கியம் இல்லாக் குறை...இப்படி குறை இல்லா மனிதன் யாரும் இல்லை.

ஞான சம்பந்தர் பாடுகிறார்....குறையை மட்டுமே ஏன் எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் ? எவ்வளவு நல்லது எல்லாம் இருக்கிறது ?

இந்த பூமி, இந்த இந்திய நாடு எவ்வளவு நல்ல நாடு...இங்கு நல்லபடி வாழலாம், நல்ல கதி அடைய ஒரு குறையும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, இவற்றை அளிக்க கழு மலம் என்ற ஊரில் நல்ல பெண்ணோடு (பார்வதியுடன்) சிவன் இருக்கிறான் என்கிறார்.

பாடல்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே



 பொருள்


குறுந்தொகை - இப்படி இல்லாமலும் நிறைய பேர் இருப்பாங்களா ?

குறுந்தொகை - இப்படி இல்லாமலும் நிறைய பேர் இருப்பாங்களா ?


காதல் - உயிர்களின் ஜீவ நாடி.

காதலுக்காக ஏங்குவதும், காதலைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்பாத உயிர்கள் இருக்குமா என்ன ?

ஆனால், சுத்தி முத்தும் பார்த்தால் அப்படி காதலுக்காக உருகுபவர்கள் நிறைய இருப்பது மாதிரி தெரியவில்லை.

பணம், பொருள், பதவி, அறிவு என்று பலவற்றை தேடுபவர்கள்தான் அதிகமாகத் தெரிகிறார்கள்.

அன்பு யாருக்கு வேண்டும் ?

தான் அன்பு செலுத்துபவர்களின் வரும் வழி பார்த்து , விழி சோர நிற்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ?

மழை தேடும் மண்ணைப் போல மனம் தேடும் மக்கள் எத்தனை ?

காதலிக்காக காதலனுக்காக கால் கடுக்க நடந்தவர்கள், காத்துக் கிடந்து கால் தேய்ந்தவர்கள் எவ்வளவு பேர் ?

பாடல்

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

பொருள்


Saturday, September 21, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 




அந்தக் காலம். 

 ஒரு சின்ன கிராமம். 

 மின்சாரம் கிடையாது. மழையை நம்பிய விவசாயம். விவசாயம் இல்லை என்றால் வருமானம் இல்லை, வேலை இல்லை. சாப்பாட்டுக்கு  வழி இல்லை. 

மக்கள் என்ன செய்வார்கள் ? ஊரைக் காலி செய்துவிட்டு போய் விடுவார்கள். வீடுகளை அப்படியே விட்டு விட்டுப்  போய் விடுவார்கள்.

காலி வீட்டை ஏன் பூட்டி வைக்க வேண்டும் ? அப்படியே திறந்து கிடக்கும்.

வெயில். கொளுத்தும் வெயில். பட்டுப் போன மரங்கள். சூடு தாங்காமல் மரத்தில் உள்ள அணில்கள் அங்குள்ள வீடுகளின் மேல் உள்ள ஓடுகளில் தாவி தாவி இறங்கி வீட்டு முற்றத்தில் இறங்கி நிழல் தேடி வரும். வீட்டில் சிதறி கிடக்கும் சில பல தானிய மணிகளை உண்ணும். வீட்டிற்குள் அங்கும் இங்கும் எங்கும் ஓடும்...உணவைத் தேடி.

முற்றத்தை தாண்டிக் குதித்து வாசலுக்கு ஓடும். அங்கிருந்து முற்றம் வழியாக பின் வாசலுக்கு ஓடும்.  

அங்குள்ள வீடுகளில் அணில்களின் ஓட்டத்தைத் தவிர வேறு ஒரு உயிரும் இல்லை. 

ஆனால் , முன்பு அப்படி அல்ல. 

தேரும் திருவிழாவுமாக அந்த ஊர் ஒரே கோலாகாலமாக  இருக்கும்.வான வேடிக்கை, இசைக் கருவிகளின் இசை, கடைத் தெருக்களில் வாங்கவும் விற்கவும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.  

அந்த  வீட்டுகளுக்கு வருத்தம் இருக்குமா ? கணவனும், மனைவியும், பிள்ளைகளும் ஒன்றாக வாழ்ந்து அவர்கள் சுக துக்கங்களைப் பார்த்த அந்த வீடுகளுக்கு, இப்போது தனிமையில் இருப்பது கொஞ்சம் வருத்தமாய் இருக்குமோ ?


அந்த வீடுகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறாள் அந்தப் பெண். அவள் காதலனும் பஞ்சம் பிழைக்க வெளியூர் போய் விட்டான். அவனோடு இருந்த காலத்தில் விழாக் கோலம் பூண்ட ஊர் போல சந்தோஷமாக  இருந்தேன்.ஆனால் இன்றோ அவனைப் பிரிந்து அணில்கள் விளையாடும் வெற்று ஊர் போல இருக்கிறது என் வாழ்க்கையும் 


 பாடல் 

காதலர் உழைய ராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரில் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.


பொருள் 


இராமாயணம் - பரதன் கங்கை கரை அடைதல்

இராமாயணம் - பரதன் கங்கை கரை அடைதல்



இராமனை மீண்டும் அழைத்து வந்து அரியணையில்  அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பரதன் கங்கைக் கரையை  அடைந்தான்.

முதல் பாடலிலேயே கம்பன்  உருகுகிறான்.

பூ விரிந்தது போன்ற அழகிய பாதங்களைக் கொண்ட பரதன், ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு உயர்ந்த சேனைகளை கொண்டவன்,  காவிரி நாடு போல உயர்ந்த அயோத்தியை விட்டு எல்லா உயிர்களும் பார்த்து இரக்கப் படும்படி கங்கைக் கரையை அடைந்தான்.

பாடல்

பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.


பொருள்


Wednesday, September 18, 2013

இராமாயணம் - உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்

இராமாயணம் - உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான் 


நம் மனம் அல்லது உயிர் எத்தனையோ விஷயங்களுக்கு ஆசைப்  படுகிறது. மனம் விரும்பும் விதம் எல்லாம் உடல்  சென்று அது வேண்டும் இன்பங்களை புலன்கள் மூலம் பெற்று மனம் மகிழ்ச்சி அடைய  உதவுகிறது.

இதைப் பார்த்த கம்பனுக்கு ஒன்று தோன்றியது.

மக்கள் எல்லாம் உயிர்  போலவும்,தசரதன் உடல் போலவும் தோன்றியது.

உயிர் வேண்டியதை எல்லாம் உடல் தேடித் பிடித்து அது அனுபவிக்கத் தருவதைப் போல தசரதன் மக்களுக்கு சேவை  செய்தான்.

பாடல்

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.

பொருள்

வயிர = வைரம் வைத்து செய்யப் பட்ட

வான் பூண் அணி  = உயர்ந்த பூண் கொண்ட அணிகலன்களை அணிந்த

மடங்கல் மொய்ம்பினான் = சிங்கம் போன்ற உடலைக் கொண்டவன்

.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால் = எல்லா உயிர்களையும் தன்  உயிர் போல நினைத்து காப்பதால்

செயிர் இலா உலகினில் = குற்றம் இல்லாத இந்த உலகில்

சென்று. நின்று. வாழ் = சென்று நின்று வாழும்

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான் = எல்லா உயிர்களும் வாழும் உடம்பு போல  ஆயினான்




Tuesday, September 17, 2013

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு 


நற்றிணை , 400 தனிப் பாடல்களை கொண்டது. அந்த கால தமிழர்களின் வாழ்கையை படம் பிடித்து  காட்டும்  நூல்.

அதில் ஒரு பாடல்.....

தலைவி அவளுடைய தோழியிடம் கூறுகிறாள்.

"..அவன் சொன்ன சொல் தவற மாட்டான். எப்போதுமே இனியவன். கட்டி அணைக்கும் என் தோள்களை என்றும் பிரியாதவன். தேன் போல இனிமையானவன். எப்படி இந்த உலகம் நீர் இல்லாமல் வாழ முடியாதோ, அது போல அவன் இல்லாமல் நான் வாழ முடியாது என்று அவன்  அறிவான். அவன் என்னை பிரியும் அந்த சிறுமையான செயலை ஒரு போதும் செய்ய மாட்டான். "

பாடல்


நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!


பொருள்

நின்ற சொல்லர் = சொன்ன சொல் தவறாதவன். அவன் சொன்ன சொல் என்றும் நிலைத்து இருக்கும்.  ஒரு தடவை ஒன்று சொன்னால் அதில் இருந்து மாற மாட்டான்.

நீடு தோறு இனியர் = ரொம்ப இனிமையானவன். நீடு என்றால் நீண்ட, ரொம்ப நாள், என்று பொருள். 

என்றும் என் தோள் பிரிபு அறியலரே = என் தோள்களை விட்டு பிரியவே மாட்டான்


தாமரைத் = தாமரை மலரில் 

தண் = குளிர்ச்சியான

தாது ஊதி = மகரந்தப் பொடிகளை ஊதி. ஊதி என்றால் துளைத்து, நுழைந்து, உறிஞ்சி  என்று பொருள்

மீமிசைச் = உயர்ந்த இடத்தில்

சாந்தில் = சந்தன மரத்தில்

தொடுத்த தீம் தேன் போல = சேர்த்து வைத்த சுவையான தேனைப் போல

புரைய மன்ற = நிச்சயமாக உயர்ந்தது

புரையோர் கேண்மை = உயர்ந்த அவனின் நட்பு அல்லது உறவு

நீர் இன்று அமையா உலகம் போலத் = நீர் இல்லாமல் அமையாத உலகம் போல

தம் இன்று = அவன் இன்றி


அமையா நம் நயந்தருளி = அமையாத நம்முடைய நன்மையைக் கருதி, அருள் செய்து

நறு நுதல் பசத்தல் அஞ்சிச் = என் நெற்றி பசலை நிறம் அடையும் என்று அஞ்சி

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! = என்னை பிரியும் அந்த சிறிய செயலை  செய்வானா ? அவனுக்கு அதைச் செய்யத் தெரியாது

சந்தன மரத்தில் உள்ள தேன் போல அவன் காதல் உயர்ந்தது. கெட்டுப் போகாதது. 

இராமாயணம் - வெட்கப்பட்ட திருமால்

இராமாயணம் - வெட்கப்பட்ட திருமால் 



சீதையை தேடி கண்டடைந்த அனுமன், அவளுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டுகிறான். அந்த உருவத்தை கம்பன் சில பாடல்களில் விவரிக்கிறான். அதில் ஒரு பாடல்...

"இதை ஒரு வலிமை இல்லாத குரங்கு என்று நினைக்க முடியாது. உலகுக்கோர் அச்சாணி போன்றவன் இந்த அனுமன். இவனுடைய பெருமை சொல்ல முடியாது. இவனுடைய விஸ்வரூபத்தைப் பார்த்தால், அந்த உலகளந்த திருமாலும் வெட்கப் படுவான் "

என்கிறார் கம்பர்.

பாடல்

‘ஏண் இலதுஒரு குரங்கு ஈது’ என்று எண்ணலா
ஆணியை, அனுமனை,அமைய நோக்குவான்,
‘சேண் உயர்பெருமை ஓர் திறத்தது அன்று’ எனா,
நாண் உறும்-உலகுஎலாம் அளந்த நாயகன்.

பொருள்


Monday, September 16, 2013

இராமாயணம் - இராமன் அம்பா ? காமன் அம்பா ?

இராமாயணம் - இராமன் அம்பா ? காமன் அம்பா ?


மாரீசனை ஏதோ கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். கம்பன் அப்படிச் சொல்லவில்லை. அவனை மிக நல்லவனாக காட்டுகிறான்.

மாரீசன், எவ்வளவோ எடுத்துச் சொல்லுகிறான். இராவணன் கேட்டான் இல்லை. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று.

கடைசியில், நீ போகவில்லை என்றால் உன்னை கொல்வேன் என்றான் இராவணன்.

வேறு வழியில்லாமல் மாரீசன் ஒத்துக் கொண்டான்.

இராவணனுக்கு ஒரே குஷி.....மாரீசனை அப்படியே கட்டிக் கொண்டு, கோபம் எல்லாம் நீங்கி,  "மலை போல் உயர்ந்த தோள்களை கொண்டவனே, மன்மதனின் கொதிக்கும் அம்பால் அழிவதை விட, இராமனின் அம்பால் இறப்பது எவ்வளவோ பெருமை தருவது அல்லவா ? எனவே, தென்றலை விட மென்மையான சீதையை தருவாய்" என்று கூறினான்.

பாடல்

என்றலும், எழுந்து புல்லி, ஏறிய வெகுளி நீங்கி,
'குன்று எனக் குவிந்த தோளாய்! மாரவேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ?
தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி' என்றான்.

பொருள் 

Sunday, September 15, 2013

திருக்குறள் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - கூடா ஒழுக்கம் 


கூடா ஒழுக்கம் என்றால், ஏதோ சேரக் கூடாதவர்களோடு சேர்வது என்று சிலர் நினைக்கலாம்.

அது அல்ல.

பரிமேலழகர் சொல்கிறார்

" அஃதாவது, தாம் விட்ட காம இன்பத்தை உரன் இன்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற , அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருந்தாததாய தீய ஒழுக்கம் . அது விலக்குதற்கு , இது தவத்தின்பின் வைக்கப்பட்டது."

அதாவது, ஒரு கால கட்டத்தில், காம இன்பம்  போதும்,இனி  என்று சொல்லிவிட்டு துறவறம் மேற் கொண்டவர்கள், அதை விட முடியாமல் பின்னும் காமத்தின் பின்னே செல்வதை காண்கிறோம். அப்படி பட்ட ஒழுக்கத்தை தீய ஒழுக்கம் என்கிறார். அது தவிர்க்கப்பட வேண்டியது என்பதால், கூடா ஒழுக்கம் என்ற இந்த அதிகாரம் தவம் என்ற அதிகாரத்தின் பின்னால் வைக்கப் பட்டது.

அசரம் பாபு, நித்யானந்தா, பிரேமானந்தா என்று எத்தனையோ பேரை பற்றி கேள்விப் படுகிறோம். அவை எல்லாம் கூடா ஒழுக்கத்தால் வந்தவை. 


பாடல்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

பொருள்


இராமாயணம் - துரிசு இல்லாத் திருமனத்தான்

இராமாயணம் - துரிசு இல்லாத் திருமனத்தான் 


இராமனைத் தேடி பரதன் கங்கை கரை அடைகிறான். பரதனை சந்தேகப் படுகிறான் குகன். ஒருவேளை இராமனை கொல்லத்தான் வந்திருகிறானோ என்று சந்தேகம் வருகிறது.

இராமாயணத்தில் , மிக மிக பாவப்பட்ட பாத்திரம் என்றால் பரதன் தான். அவனை யாருமே புரிந்து கொள்ளவில்லை. பெற்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. தந்தை புரிந்து கொள்ளவில்லை. உடன் பிரிந்த இலக்குவன் புரிந்து கொள்ளவில்லை. ஏன்,  கோசலை கூட அவனை ஒரு இடத்தில் சந்தேகித்தாள்.

அவ்வளவு நல்லவன். ஆனாலும் காப்பியும் முழுவதும் துன்பப்படுகிறான்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் என்றார்  வள்ளுவர். நல்லவனுக்கு ஏன் இவ்வளவு துன்பம் ?

கங்கை கரை அடைந்த பரதன் அங்கு நின்ற குகனை காட்டி அவன் யார் என்று சுமந்தரனிடம்  கேட்டான்.

சுமந்திரன் குகனைப் பற்றி பல விஷயங்கள் கூறுகிறான் ...அதோடு ஒரு வரி  "உங்கள் குல தனி நாதற்கு உயிர் துணைவன்" என்று  குறிப்பிடுகிறான்.

அதை கேட்ட பரதன்  ரொம்ப மகிழ்ந்தான்...." அப்படியா,என் அண்ணனுக்கு துணைவனா ? அப்படினா நானே போய் அவனைப் பார்க்கிறேன்" என்று எழுந்தான். பரதன் பெரிய அரசன்.  குகன் ஒரு சிற்றரசன். படகுகள் ஓட்டும் மக்களுக்குத் தலைவன். பரதன் நினைத்திருந்தால், குகனை இங்கே அழைத்து வாருங்கள் என்று சொல்லி  இருக்கலாம்.

இராமனின் நண்பன் என்று சொன்னவுடன் பரதனுக்கு எல்லாம் மறந்து போயிற்று. தான் யார், குகன் யார் என்பதெல்லாம் அவனுக்கு பொருட்டு  இல்லை.  நானும் இராமனின் தொண்டன். அவனும் இராமனின் தொண்டன் ...எங்களுக்குள் என்ன உயர்வு தாழ்வு என்று நினைத்தான்.

இறைவன் சந்நிதியில் எல்லோரும் ஒன்று....

பாடல்


தன் முன்னே, அவன் தன்மை,
     தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
     துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
     கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
     யானே சென்று’ என எழுந்தான்.


பொருள்


தன் முன்னே = தன்  முன்னே நின்ற குகனை பற்றி

அவன் தன்மை = அவனுடைய தன்மைகளை

தந்தை துணை = தந்தையின்  (தசரதனின்) துணை (துணைவன் சுமந்திரன்)

முந்து உரைத்த சொல் = முன்னால் சொன்ன சொல் (உங்கள் குல நாயகற்கு உயிர் தோழன் என்று சொன்ன சொல்)

சொல் முன்னே உவக்கின்ற = இது ஒரு ஆச்சரியமான வரி. சொல்வதற்கு முன்னே மகிழ்ந்தான். எப்படி சொல்வதற்கு முன்னேயே மகிழ்ச்சி வரும். சில பேரை கண்டால், இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் கொப்பளிக்கும். யார் என்று தெரியாது, என்ன பேர், என்ன ஊர் எதுவும் தெரியாது. இருந்தாலும் ஏதோ ரொம்ப நாள் பழகின மாதிரி ஒரு எண்ணம் தோன்றும். சுமந்திரன் சொல்வதற்கு முன்னாலேயே பரதனுக்கு மனதிற்குள் ஒரு சந்தோஷம். 

துரிசு இலாத் திரு மனத்தான் = மனதில் ஒரு குற்றமும் இல்லாதவன். வள்ளுவர் சொன்ன மாதிரி "மனதிற்கன் மாசு இலன்" . மனதில் கூட குற்றம் இல்லாதவன். அவ்வளவு நல்லவன். 

‘மன் முன்னே தழீஇக் கொண்ட = நம் மன்னவனான இராமனை தழுவிக் கொண்ட

மனக்கு இனிய துணைவனேல் = மனதுக்கு இனிய துணைவன் என்றால்

என் முன்னே  அவற் காண்பென்  யானே சென்று’ என எழுந்தான். = அவனுக்கு முன்னால் நானே போய் அவனைப் பார்ப்பேன் என்று பரதன் எழுந்தான்

பரதனும், குகனும் சந்தித்த இடத்தில் கம்பனின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டும் பாடல்கள்.

நேரம் இருப்பின் மூல நூலை படித்துப் பாருங்கள்.



Saturday, September 14, 2013

குறுந்தொகை - ஆணின் நாணம்

குறுந்தொகை - ஆணின் நாணம் 




அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.

பெண்ணுக்கு நாணம் வரும். கேள்வி பட்டு இருக்கிறோம். ஆணின் நாணம் ?

குறுந்தொகை ஆணின் நாணத்தைப் பற்றி பேசுகிறது.

அவன் ஒரு இளைஞன்,  அந்த ஊரில் ஒரு அழகான பெண். அவள் மேல் அவனுக்கு ரொம்ப காதல். ஆனால், அவளோ இவன் காதலை ஏற்றுக் கொள்வதாக இல்லை. ரொம்பத்தான் ராங்கி பண்ணிக்  கொள்ளுகிறாள். இவனும் விடுவதாக இல்லை. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று இருக்கிறான்.

அந்த காலத்தில் மடல் ஊறுதல் என்று ஒன்று உண்டு.

ஒரு பெண்ணை விரும்பும் ஆடவன், அவளை அடைவதற்கு அவளின் பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை  என்றால்,அந்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால், பனை ஓலையில் குதிரை மாதிரி பொம்மை செய்து, அதன் மேல் ஏறி உட்கர்ந்து கொள்வான்.

ஊரில் உள்ளோர் எல்லாம் அவனைப் பார்த்து சிரிப்பார்கள், சில பேர் பாவம் என்று நினைப்பார்கள். எப்படியோ, ஊர் எல்லாம் தெரிந்து விடும்.

அந்த பெண்ணை வேறு யார் மணப்பார்கள் ? கடைசியில் அவளை அவனுக்கே கட்டி கொடுத்து விடுவார்கள்.

இந்தப் பாடலில், தலைவன் தான் அப்படி செய்வேன் என்று சொல்லவில்லை. இருந்தாலும்  எப்படியாவது அவளை மணந்து  கொள்வேன்.

அப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக ஊருக்குள் செல்லும்போது , அப்போது இந்த ஊரில் உள்ளவர்கள் சொல்லுவார்கள்..."இவன் கொஞ்சம்  விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும், நல்ல பையன் ...இவள் ஒரு நல்லவனைத் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் " என்று சொல்லுவார்கள். அப்படி சொல்வதை கேட்க்கும்போது எனக்கு   கொஞ்சம் வெட்கமாக இருக்கும் என்கிறான்.


துள்ளித் திரிந்த வாலிபப் பையன், காதலியை கை பிடிக்க என்ன வெல்லாம் செய்தான், இப்ப பாரு எவ்வளவு நல்ல பையனாக இருக்கிறான் என்று சொல்லுவார்கள். அதை கேட்கும் போது எனக்கு கொஞ்சம் நாணம் வரும் என்கிறான்.

பொருள்


அமிழ்து பொதி செந்நா = அவளுடைய நாக்கு இருக்கிறதே, அது அமிழ்தை பொதிந்து வைத்ததைப் போல இனிமையானது

அஞ்சவந்த = அஞ்சும்படி

வார்ந்து = வார்த்து வைத்ததைப் போன்ற

இலங்கு = விளங்கும் 

வைஎயிற்றுச் = கூர்மையான பற்கள்

சின்மொழி = சின்ன சின்ன மொழி பேசும் 

அரிவையைப் = இளம் பெண்ணை

பெறுகதில் அம்ம யானே! = எப்படியாவது பெறுவேன்

பெற்றாங்கு = பெற்ற பின்

அறிகதில் அம்ம, = நீ அறிவாய்

இவ்வூரே! = இந்த ஊரே

மறுகில் = தெருவில்

நல்லோள் கணவன் இவன் எனப் = நல்ல பெண்ணை மணந்த கணவன் இவன் என

பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே = பலபேர் சொல்லுவதை கேட்க்கும் போது  நான் கொஞ்சம்  நாணம் அடைவேன்


Friday, September 13, 2013

இராமாயணம் - இராமன் கானகம் போனதும் நல்லது தான்

இராமாயணம் - இராமன் கானகம் போனதும் நல்லது தான் 


இராமன், குகனை கண்டபின், கங்கை கரை கடந்து வனம்  புகுந்தான். அவனை தேடிக் கொண்டு வந்தான் பரதன்.  முதலில் பரதனைக் கண்டு, அவன் இராமனை கொல்லத்தான் வந்திருக்கிறான் என்று தவறாக நினைத்தான்  குகன்.பின் தெளிவு பெற்று "ஆயிரம் இராமர் நின் கேள்வர் ஆவரோ தெரியின் அம்மா " என்று கூறுகிறான்.

எல்லோரும் படகில் ஏறுகிறார்கள். கோசலையை கண்டு பரதனிடம் குகன் கேட்டான், "இந்தத் தாய் யார்" என்று.

பரதன் சொன்னான் "இந்த உலகை ஈன்றவனை ,  ஈன்றவள்.நான் பிறந்ததால் அவனை இழந்தவள்"  என்றான்.

கேட்டவுடன் குகன் அவள் காலில் விழுந்து கதறி  அழுதான்.

இங்கே ஒரு நிமிடம்  நிறுத்துவோம்.

ஏன் குகன் அழுதான் ?

ஒரே ஒரு நாள் இராமனைப் பார்த்த பின்  குகனால் இராமனைப் பிரிந்து இருக்க  முடியவில்லை.

"உன்னை இங்ஙனம் பார்த்த கண்களை ஈர்க்கலா கள்வன் யான்" என்று  கூறியவன். இராமனைப் பார்த்த கண்களை எடுக்க  முடியவில்லையாம்.அப்படி ஒரு நாள் பார்த்த என்னாலேயே அவனைப் பிரிந்து இருக்க முடியவில்லையே, பத்து மாதம் அவனை சுமந்து பெற்று வளர்த்த நீ எப்படித்தான் அவனை பிரிந்து இருக்கிறாயோ என்று நினைத்து அழுதான்.

அவன் அழுவதைப் பார்த்து கோசலைக்கு  ஆச்சரியம்.

அவனை யார் என்று பரதனிடம் கேட்டாள்.

பரதன் கூறினான் "இராமனுக்கு இனிய  துணைவன். எங்கள் எல்லோருக்கும்  மூத்தவன் " என்று.

கோசலை கூறுகிறாள்...

"இராமன் நாடு விட்டு காடு வந்ததும் நல்லதாகப் போயிற்று. அவன் கானகம் வரமால் இருந்திருந்தால், இப்படி பட்ட ஒரு நல்லவனை தம்பி கிடைத்திருப்பானா ? இனி நீங்கள் ஐந்து பேரும் ஒன்றாக இந்த அவனியை ஆளுங்கள் " என்றாள் .

கோசலை - சக்ரவர்த்தியின் பட்டத்து  மகாராணி. இராமனைப்  பெற்றவள். அவளின் பெருமை எவ்வளவு இருக்கும் ? குகனை யார் என்று கேட்டு  இருக்கிறாள். குகனை இதற்க்கு முன்னால் பார்த்தது கூட கிடையாது.  நீங்கள் ஐந்து பேரும் ஒன்றாக நாட்டை ஆளுங்கள்  என்கிறாள்.

இராமனின் அன்பு எங்கிருந்து வந்தது என்று இப்போது தெரிகிறதா ? அவனின் தாய் கோசலையிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.

அவள் எவ்வளவு எளிமையானவளாய் இருந்திருக்க வேண்டும். எவ்வளவு  அன்பும்,பாசமும் உள்ளவளாய் இருந்திருக்க வேண்டும் ? அவளிடம் எவ்வளவு தாய்மை உணர்வு நிறைந்திருக்க வேண்டும் ?


பாடல்

நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்; நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங் காலம் அளித்திர்' என்றாள்


பொருள்


இராமாயணம் - சடாயு இறுதிக் கடன்

இராமாயணம் - சடாயு இறுதிக் கடன் 


இலக்கியத்தை அதன் கதைக்காக  படிக்கிறோம்.அதில் உள்ள கவிதை சுவைக்காக படிக்கிறோம். சொல் விளையாட்டுகள் பிடித்து இருக்கிறது.

ஆனால், அவை சொல்லும் செய்திகளை விட்டு விடுகிறோம்.

மிகப் பெரிய இழப்பில் இருக்கிறான் இராமன். சக்ரவர்த்தி பதவி போயிற்று.  நாட்டை விட்டு விரட்டி விட்டார்கள். மனைவியை எவனோ தூக்கிக் கொண்டு போய் விட்டான். தந்தையின் நண்பன் அவனுக்காக அடிபட்டு சாகக் கிடக்கிறான்.

நாமாக இருந்தால் எப்படி இருப்போம் ?  கோபம், எரிச்சல்,ஏமாற்றம், வெறுப்பு எல்லாம் வரும்.

அவ்வளவு சிக்கலிலும் இராமன் வாழ்ந்து  காட்டுகிறான்.

 குகனை, சுக்ரீவனை, விபிஷணனை சகோதரனாக கொள்கிறான். ஏன் ?

சடாயுவுக்கு இறுதி கடன் செய்கிறான் . ஏன் ?

தீண்டாமை, மனிதர்களுக்குள்  உயர்வு தாழ்வு பாராட்டுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

மனிதன் கூட அல்ல. ஒரு பறவையை தொட்டு தூக்கி, அந்தப் பறவையை தந்தை என நினைத்து அதற்க்கு இறுதி கடன் செய்கிறான். அந்த பறவையை அப்படியே விட்டு விட்டு சென்றிருந்தால் யாரும் இராமன் மேல் தவறு காண முடியாது.

இருந்தாலும், சடாயுவுக்கு இறுதி கடன் செய்கிறான்.

இராமன் சொல்லும் செய்தி - தாழ்ந்தவன் என்று யாரும் கிடையாது. தீண்டத்தகாதவன் என்று யாரும் கிடையாது. எல்லோரும் இறைவனின் படைப்பு.

இதை படித்த பின்னும் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்டினால், படித்ததன் பலன் தான் என்ன ?

பாடல்

ஏந்தினன் இரு கைதன்னால்; 
     ஏற்றினன் ஈமம்தன்மேல்; 
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; 
     தலையின் சாரல் 
காந்து எரி கஞல மூட்டி, கடன் 
     முறை கடவாவண்ணம் 
நேர்ந்தனன்-நிரம்பும் நல் நூல் மந்திர 

     நெறியின் வல்லான்.

பொருள்


Wednesday, September 11, 2013

குறுந்தொகை - பிரிவுத் துயர்

குறுந்தொகை - பிரிவுத் துயர்

பிரிவுத் துயர் எவ்வளவு கடினமானது என்று அனுபவித்தர்களுக்குத்தான் தெரியும்.

இருப்பு கொள்ளாது. எப்ப பாக்கப் போறோம், எப்ப பாக்க போறோம் என்று மனம் கிடந்து தவிக்கும். வெளியேயும் சொல்ல முடியாது. உள்ளேயும் வைத்துக் கொள்ள முடியாது.

இங்கே பார்க்க மாட்டோமா, அங்கே பார்த்து விட மாட்டோமா என்று மனம் கிடந்து அலையும்.

பார்க்கும் இடம் எல்லாம் அவன் அல்லது அவளாகத் தெரியும்.

கூட்டமாக இருக்கும் இடம் எல்லாம் மனம் கவர்ந்தவனையோ, வளையோ மனம் கண்டு விட பர பரக்கும் .

காணாமல் சோர்ந்து போகும்.

அந்த பிரிவு துயரை தாங்கிக் கொள்ளவும் ஒரு வலு வேண்டும். எவ்வளவு நாள் தான் இந்த பிரிவைத் தாங்க முடியும் ?

குறுந்தொகையில் , தலைவி தலைவனை பிரிந்த துயரை தோழிக்கு சொல்கிறாள்.

அவள் ஊரில் மலைகள் உண்டு. அழகிய சோலைகள் உண்டு. அந்த சோலைகளில் வாழும் மயில்கள்,  பாறையோரம் முட்டை இட்டு வைத்து இருக்கும். அந்த முட்டைகளை, அங்கு உள்ள ஆண் குரங்கு குட்டிகள் பந்து என நினைத்து உருட்டி விளையாடும். அப்படிபட்ட குரங்குகளை கொண்ட நாட்டின் தலைவனை நட்பாக கொண்டேன். இன்று அவன் பிரிவு என்ன வாட்டுகிறது. இந்த பிரிவுத் துயரை ஆற்றல் உள்ளவர்களால் தான் தாங்க முடியும். (என்னால் முடியாது என்பது பொருள்)

பாடல்

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே.

பொருள்


திருக்குறள் - இரகசியமான ஆசைகள்

திருக்குறள் - இரகசியமான ஆசைகள் 


யாரிடம்தான் இரகசியமான ஆசைகள் இல்லை ? வெளியே சொல்ல முடியாத ஆசைகள் எல்லோர் மனத்திலும் இருக்கத்தான் செய்கிறது. குடும்பம், நண்பர்கள், சமுதாயம், சட்டம் இவை எல்லாம் ஒத்துக் கொள்ளாது என்று பூட்டி வைத்த ஆசைகள் மனதில் ஏதோ ஓரத்தில் உறங்கித்தான் கிடக்கிறது.

இது தவிர்க்க முடியாதது.

அவை எல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்து வராது. சொன்னால் யார் கேட்பார்கள். அது தவறு என்று எல்லோர்க்கும் தெரியும்....ஆனால் இந்த மனம் எங்கே கேட்கிறது ?

இதற்கு வள்ளுவர் என்ன சொல்கிறார்.

மிக மிக ஆச்சரியமான ஒரு கருத்தை சொல்கிறார்.

அந்த மாதிரி ஆசைகளை மற்றவர்கள் அறியாமல் அனுபவிக்கச் சொல்கிறார். இவைகள் ஒருவனுக்கு பலவீனம். பலவீனம் இல்லாத மனிதன் கிடையாது. ஆனால் அந்த பலவீனம் மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

நம்ப முடியாத அந்த குறள் ....



காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.


பொருள்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் = தான் விரும்பியவற்றை, தான் அவற்றை விரும்பி அனுபவிக்கிறேன் என்று மற்றவர் அறியாமல் அனுபவித்தால்




ஏதில ஏதிலார் நூல் = ஏதிலார் என்றால் பகைவர்கள் அல்லது நம்மோடு ஒத்து போகாதவர்கள். அவர்கள் நம்மை வஞ்சிக்க மாட்டார்கள். அதாவது நம் பலவீனத்தை  அவர்கள் தங்களுக்கு சாதகமாகக் கொள்ள முடியாது.


இதில் இன்னும் நுணுக்கமான அர்த்தம் உள்ளது.

காமம், வெகுளி, உவகை இவை எல்லாம் முற்றுமே விலக்க வேண்டிய குற்றங்கள் அல்ல என்கிறார் பரிமேலழகர். 

இதில் காமம் என்பதைத்தான் இந்த குறளில் குறிப்பிடுகிறார். 

காதல காதல் அறியாமை என்பது காமத்தை மட்டும் குறிப்பிடுவதாக பரிமேல் அழகர்  குறிப்பிடுகிறார். 

இரகசியமான காதல் மற்றும் காமத்தை யாரிடமும் சொல்லக் கூடாது. 

அதாவது, அதை முற்றாக விலக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லவில்லை. 

உய்தல் என்றால் மீண்டு வருந்தல், கடைந்தேறுதல் .

உய்வார்கள் உய்யும் வழியெல்லாம் உய்ந்து ஒழிந்தோம் எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவை என்பார் மணிவாசகர் 

காமத்தை மற்றவர்கள் அறியாமல் அனுபவித்து மீண்டு வா என்பது பொருள். 

இது அரசனுக்குச்  சொன்னது என்று சொல்லி முடிக்கிறேன்....:)


Monday, September 9, 2013

அபிராமி அந்தாதி - கற்ற கயவர்

அபிராமி அந்தாதி - கற்ற கயவர் 


அபிராமி அந்தாதியில் சில பல பாடல்கள், அந்த அந்தாதிப் பாடல்களை படிப்பதால் வரும் பலன்களையும், அபிராமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பற்றி கூறுகிறது.

அப்படி, அபிராமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை கூறும் ஒரு பாடல்.

வாழ்க்கையில் அதிக பட்ச நேரம் அலுவலகத்தில், வேலை பார்ப்பதில் சென்று விடுகிறது. வேலை பார்பதும், சம்பாதிப்பதும், இல்லாதை இட்டு நிரப்புவதிலும் வாழ்க்கை மொத்தமும் போய் விடுகிறது. எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் பொதுவாக பெரும்பாலோனருக்கு அப்படித்தான் நடக்கிறது.


பாடல்

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு 
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் 
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் 
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.



இல்லாமை சொல்லி = இல்லை என்று சொல்லி,

ஒருவர் தம்பால் சென்று = மற்றவர்களிடம் சென்று

இழிவுபட்டு = இழிவு பட்டு

நில்லாமை = நிற்காமல் இருக்க வேண்டும் என்று

நெஞ்சில் நினைகுவிரேல் = நெஞ்சில் நினைத்தால் 

நித்தம் நீடு தவம் = தினமும் நீண்ட தவம்

கல்லாமை = கல்லாத மடையர்கள்

கற்ற கயவர் = கற்ற கயவர்கள். கல்லாத கயவர்கள் என்று சொல்லவில்லை, கற்ற கயவர்கள் என்று சொல்கிறார்.  படித்தவன் தான் எல்லா அயோக்கியத்தனமும் செய்வான்

தம்பால் = அவர்களிடம்

ஒரு காலத்திலும் செல்லாமை = ஒரு போதும் செல்ல வேண்டியது இல்லாமல்

வைத்த = நம்மை அந்த இடத்தில் வைத்த

திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. = மூன்று உலகங்களுக்கும் தலைவியான அபிராமியின் பாதங்களைச்  சேருங்கள்

யாரிடமும் போய் கைகட்டி நிற்க வேண்டாம் - எனக்கு நிறைய சம்பளம் கொடு, எனக்கு பதவி உயர்வு கொடு என்று கேட்டு கஷ்டப்பட வேண்டாம்.

பணத்தையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறார் பட்டர்.




திருக்குறள் - உலகம் என்பது என்ன ?

திருக்குறள் - உலகம் என்பது என்ன ?


குறள்

சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் 
வகைதெரிவான் கட்டே யுலகு.

சீர்  பிரித்த பின்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு

பொருள்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் =  சுவை, ஒளி , ஊறு , ஓசை, நாற்றம்

என ஐந்தின் = என இந்த ஐந்தின்

வகை தெரிவான் கட்டே உலகு = வகைகளை தெரிவான் பக்கமே, இந்த உலகு.

அட, இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ? இது நமக்கே தெரியுமே...

வள்ளுவர் அவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டு போபவர்  அல்ல.

இந்த உலகம், நம் புலன்களைத் தாண்டி தனியாக ஏதாவது இருக்கிறதா ? நமக்கு ஐந்து புலன்கள்  இருக்கின்றன. எனவே நாம்  இந்த உலகை இந்த ஐந்து புலன்கள் வழியாக  உணர்கிறோம்.

ஒருவேளை நமக்கு ஆறு புலன்கள் இருந்திருந்தால், இந்த உலகை வேறு விதமாகப் நாம் உணர்ந்து இருப்போம்.

எது உண்மை ? இந்த புலன்களைத் தாண்டி ஏதேனும் உண்மை என்று இருக்கிறதா ?

சரி, புலன்கள் மட்டும் இருந்தால் போதுமா ? குருடனுக்குக் கூட கண் இருக்கிறது. பார்க்க முடியவில்லை.  செவிடனுக்கு காது இருக்கிறது. கேட்க்க முடியவில்லை. புலன்கள் மட்டும் இருந்தால் போதாது, அவற்றை இயக்கம் புத்தி, மூளை, மனம் என்று ஏதோ ஒன்று வேண்டும்.

புலன்கள் ஐந்து . இவற்றை கர்மேந்திரியங்கள் என்று சொல்கிறார்கள்.

அந்த புலன்களை இயக்கம் அறிவு ஐந்து.  இவற்றை ஞானேந்திரியங்கள் என்று சொல்கிறார்கள்.

புலன்களுக்கு வந்து சேரும் உணர்வுகள் ஐந்து - சுவை, ஒளி , ஊறு , ஓசை , நாற்றம்  என்று ஐந்து விதமான உணர்வுகள்.

இந்த ஐந்து வித உணர்வுகளை உருவாகும் பொருள்களின் தன்மை அல்லது இயல்பு ஐந்து. ஒரு பொருள் சுவையாக இருக்கலாம், சூடாக இருக்கலாம் ...


பொருள்கள் ஐந்து விதம்
அவற்றின் குணங்கள் ஐந்து விதம்
அவற்றை அறியும் நமது புலன்கள் ஐந்து விதம்
அந்த புலன்களை இயக்கம் அறிவின் கூறு ஐந்து விதம்

இந்த இருப்பதை அறியும் அவனைத் தாண்டி உலகம் என்று ஒன்று இல்லை.

இந்த கட்டுக்குள் இருப்பதுதான் உலகம்.

பன்னிய உலகினில் பயின்ற பாவத்தை
நன்னி நின்று அறுப்பது நமச்சிவாயவே என்பார் நாவுக்கரசர்.

நாம் பன்னிய உலகம் இது.

நாம் உருவாக்கிய உலகத்தோடு நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.



Sunday, September 8, 2013

குறுந்தொகை - நனைந்த பாறைகள்

குறுந்தொகை - நனைந்த பாறைகள் 


மழை !

மழையைக் கண்டால் எல்லோரும் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். குடைக்குள் மறைந்து கொள்கிறார்கள்.

எத்தனை பேருக்கு மழையில் நனையப் பிடிக்கும் ?

மழை முதலில் உடையை நனைக்கும்...பின் உடலை ...பின் உயிரை நனைக்கும்.

மழை விட்ட பின், ஊரே கழுவி விட்ட மாதிரி சுத்தமாக இருக்கும். இலைகள் எல்லாம் பளிச்சென்று இருக்கும். காற்றில் ஈரம் காதோரம் கவிதை சொல்லும்.

அது ஒரு சின்ன கிராமம். அவனும் அவளும் ஊருக்கு வெளியே அடிக்கடி சந்திப்பார்கள். யார் கண்ணிலும் படாமல் இருக்க அங்கிருக்கும் பெரிய பாறைகளுக்கு பின்னே மறைவாக அமர்ந்து பேசுவார்கள், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயல்வார்கள்...

கொஞ்ச நாளாக அவன் வரவில்லை. அவனைத் தேடி அவள் போகிறாள். அவர்கள் அமர்ந்திருந்த ஒவ்வொரு பாறையாக சென்று பார்க்கிறாள்.

அவர்கள் வருவார்களோ இல்லையோ, காத்திருப்பது ஒரு சுகம். அதிலும் மழையில் காத்திருப்பது இன்னும் சுகம்.

அவள் காத்து இருக்கிறாள்.

மழை அன்றும் பெய்தது.

பெய்து ஓய்ந்தது.

அங்கிருந்த பாறைகள் எல்லாம் குளித்து வரும் யானை போல பள பளப்பாக இருக்கிறது.

அவளோட தோழி கேட்க்கிறாள் "எங்கடி போயிட்டு வர்ற..இந்த மழையில் ?"

"அவனைத் தேடித்தான்...ஒரு வேளை வருவானோ என்று காத்து இருந்தேன்...வரலை " என்றாள்.

அவள் கண்ணில் வருத்தம் ஒரு புறம், இன்னொரு புறம் அவனுக்காக காத்திருந்த காதல் ஒரு புறம்....அதைத்தான் பசலை என்கிறார்களோ....

பாடல்


மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே.

பொருள்

மாசுஅறக் = தூசி இல்லாத

கழீஇய = கழுவி விட்ட


யானை போலப் = யானையைப் போல

பெரும்பெயல் = அடித்துப் பெய்த மழையில்

உழந்த = அங்கும் இங்கும் அலையும்

இரும்பிணர்த் = கரிய, கரடு முரடான

துறு கல் = பெரிய பாறைகள்

பைதல் = நனைந்த, ஈரமான

ஒருதலைச் சேக்கும் = அந்த பாறைகளின் மறுபக்கம் என்னை சேர்க்கும். ஒருதலை என்றால் ஒரு பக்கம். பாறையின் அந்தப் பக்கம்.

நாடன் = அந்த ஊர்க் காரன்

நோய் தந்தனனே = காதல் எனும் நோய் தந்தான். பிரிவு எனும் நோய் தந்தான்.

தோழி! = தோழி

பசலை ஆர்ந்த = பசலை படர்ந்தது

 நம் குவளை அம் கண்ணே = குவளை போன்ற என் அழகிய  கண்ணே


காலம் காலமாக , இந்த காதல் பயிரை , மழைதான் நீர் விட்டு வளர்த்து இருக்கிறது. 


Saturday, September 7, 2013

இராமாயணம் - அவை அடக்கம்

 இராமாயணம் - அவை அடக்கம் 


12000 பாடல்களுக்கு மேல் இழைத்து இழைத்து பாடிய கம்பர் அவை அடக்கம் சொல்லுகிறார்.

எளியவர்களில் எளியவனான நான், சொற்களை கொண்டு நூல் நூற்பது மாதிரி இந்த நூலை நூற்கத் தொடங்கி இருக்கிறேன்.

இந்த கதையின் நாயகன் இராமன்.

அவன் எப்பேர் பட்டவன் தெரியுமா ?

ஒரு இலக்கை நோக்கி அம்பு எய்தால் அது கட்டாயம் அந்த குறியை சென்று அடையும்.

எப்படித் தெரியுமா ?

தவ வலிமை உள்ளவர்கள் ஒரு சாபம் கொடுத்தால் அது எப்படி தப்பாமல் சென்று அடையுமோ அது போல சென்று அடையும். நடுவில் எத்தனை தடை வந்தாலும் அவற்றை தாண்டி இலக்கை சென்று அடைய வைக்கும் திறம் படைத்தவன் இராமன்.

அவனுடைய கதையை கூட நான் முதன் முதலாகச் சொல்ல வில்லை. வால்மீகி முதலில் வட மொழியில்  சொல்லிவிட்டார்.அவர் பெரிய தவ சீலர். அவர் சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். அவ்வளவுதான். 

கம்பன் இந்தப் பாட்டில் விளையாடுகிறான்...

பாடல்

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை 
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

பொருள்


நொய்தின் நொய்ய = எளிமையிலும் எளிமையான, கீழிலும் கீழான

சொல் நூற்கலுற்றேன் = சொற்களை கொண்டு நூற்க தொடங்கி உள்ளேன்

எனை = என்ன ஒரு அதியசம்

வைத வைவின் = பெரியவர்கள் இட்ட சாபம் போல

மராமரம் = மராமரங்களை

ஏழ் துளை = ஏழு துளை செய்து

எய்த எய்தவற்கு = சென்று அடையும்படி எய்தவற்கு

எய்திய = அப்படிப்பட்ட திறமையை கொண்ட

மாக்கதை = பெரிய கதை

செய்த = செய்த 

செய் தவன் = தவம் செய்தவன். செய்த தவம், செய்கின்ற தவம், செய்யும் தவம். வினைத்தொகை. வால்மீகி.

சொல் நின்ற தேயத்தே. =  அவனுடைய சொல் நின்ற தேசத்தில்


கம்பனின் சொல் விளையாட்டை கொஞ்சம் பார்ப்போம் 

எய்த எய்தவற்கு எய்திய - மூன்று எய்த என்று வருகிறது.  

முதல் "எய்த" என்பதற்கு அம்பை  எய்த என்று பொருள். 

இரண்டாவது "எய்தவற்கு"  என்பதற்கு அம்பை செலுத்திய இராமன். எய்தவன். 

மூன்றாவது "எய்திய" என்பதற்கு அடைந்த என்று பொருள் .  

அதே போல் 

செய்தவன் என்ற சொல் விளையாட்டு 

செய்தவன் என்றால் உருவாகியவன் என்று பொருள்.

செய் தவன் என்றால் தவம் செய்தவன் என்று பொருள் 

திருக்குறள் - பரிமேலழகர் உரை

திருக்குறள் - பரிமேலழகர் உரை 


இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதல்லது, ஒழுக்கம்போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தல் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானே அன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டு தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.


     அதுதான் நால்வகை நிலைத்தாய், வருணந்தோறும் வேறுபாடு உடைமையின், சிறுபான்மை ஆகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மை ஆகிய பொது இயல்பு பற்றி, 'இல்லறம்' 'துறவறம்' என இருவகை நிலையால் கூறப்பட்டது.

-------------------------------
அறம் என்பது  ஒழுக்கம்,வழக்கு , தண்டனை என்ற மூன்று கூறுகளை கொண்டது என்று பார்த்தோம்.

இதில் வழக்கும், தண்டமும் உலகியல் வாழ்க்கைக்கு மட்டும் உதவும். ஒழுக்கமோ, இம்மைக்கும் மறுமைக்கும் உதவி செய்யும். உயிருக்கு உறுதி தரும் என்கிறார் பரிமேலழகர்.  மேலும் இந்த வழக்கும் தண்டமும்  படித்து தெரிந்து கொள்வதை விட உணர்ச்சி வசப் படுதலாலும் , உடம்பின் இயற்கையாலும் கூட அறிய முடியும்.  எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் , ஒழுக்கம் என்பது என்ன என்று சொன்னால் அன்றித் தெரியாது.

எனவே வள்ளுவர் ஒழுக்கம் என்பதை மட்டும் அறம் என்று எடுத்துக் கொள்கிறார்.

அந்த ஒழுக்கமும் 4 வகை நிலைகளில் (பிரமச்சாரியம், இல்லறம், வானப்ரஸ்தம், துறவறம் ) வர்ணத்திற்கு வர்ணம் (பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ) மாறுபடும் இயல்புடையது.  அப்படி மாறும் ஒழுக்கங்களை விட்டு விட்டு, எல்லோருக்கும் பொதுவான இல்லறம், துறவறம்  என்ற இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு வள்ளுவர் திருக்குறளை  இயற்றினார்.

ஒரு வழக்கை எப்படி நடத்த வேண்டும், எந்த வழக்குக்கு எந்த மாதரி சாட்சியங்கள் வேண்டும், தடயங்கள் வேண்டும், அதற்கு எவ்வளவு தண்டனை தர வேண்டும் என்று   எழுதிக் கொண்டு போனால் அதற்கு ஒரு எல்லையே இருக்காது.

மேலும், இவை காலம் காலமாக மாறிக் கொண்டே வரும்.

எனவே அவற்றை வள்ளுவர் விட்டு விட்டார்.

 வழக்கையும்,தண்டத்தையும் அவர் விட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

மனிதன் ஒழுக்கமாக இருந்து விட்டால் வழக்கும் தண்டனையும் தேவையே இருக்காது.

எனவே மனிதனை முதலில் ஒழுக்க நெறியில் செலுத்த வேண்டி அதை அறமாகக் கொண்டு  திருக்குறள் எழுதினர் என்று பரிமேல் அழகர்  கூறுகிறார்.


Friday, September 6, 2013

அரிச்சந்திர புராணம் - கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம்

அரிச்சந்திர புராணம் - கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் 


அரிச்சந்திர புராணம்.

கல் மனதையும் கரைய வைக்கும் கதை. கண்ணில் நீர் தளும்பாமல் படிக்க முடியாது.

என்ன ஆனாலும் சரி, உண்மை பேசுவதை விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறான் அரிச்சந்திரன். அவன் மனைவியும் அவனுக்கு உறு துணையாக இருக்கிறாள்.

நாட்டை  இழந்தான். சொத்து சுகங்களை இழந்தான். மனைவியை ஒரு அந்தணனுக்கு விற்றான். மகன்  போனான். மனைவிமேல் கொலைப் பழி விழுந்தது. அவளை தெருவில் இழுத்துக் கொண்டு கொலை களத்திற்கு கொண்டு  போனார்கள். அவளை சிரச் சேதம்  பொறுப்பும் அரிச்சந்திரனிடம் கொடுக்கப்  பட்டது.

கௌசிக முனிவன் அப்போது வந்து சொல்கிறான் " அரிச்சந்திரா, ஒரே ஒரு பொய் சொல். நீ எனக்கு அரசை தரவில்லை என்று ஒரு பொய் சொல். நீ இழந்த அத்தனையும் உனக்குத் திருப்பித் தருகிறேன் " என்றான்.

அரிச்சந்திரன் ஒத்துக்  கொள்ளவில்லை. அவன் மனைவியும் அதற்கு ஒப்பவில்லை. இருவரும் கௌசிக முனிவனிடம் கூறினார்கள்.....

"எம் அரசை இழந்தோம்... எங்கள் பிள்ளையை இழந்தோம்...எங்கள் சொத்து சுகம் எல்லாம் இழந்தோம். இனி எங்களுக்கு என்று இருக்கிறது என்று நினைக்க ஒன்றே ஒன்று தான் இருக்கிறது ...அது நல்ல கதி அல்லது சொர்க்கம். அதையும் இழந்தாலும் பரவாயில்லை சொன்ன சொல்லை  இழக்க மாட்டோம் " என்று கூறினார்கள்.  அதை கேட்ட முனிவன் மதி இழந்து, சொல்ல சொல் இல்லாமல் மறைந்தான். 

பாடல்

பதிஇ ழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த 
நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்
கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்

மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான்.

பொருள்

பதிஇ ழந்தனம் = அரசை இழந்தோம்

பாலனை இழந்தனம் = பிள்ளையை இழந்தோம்

படைத்த நிதி இழந்தனம் = நாங்கள் கொண்ட நிதியை இழந்தோம்

இனி நமக்குளதென நினைக்கும் = இனி எங்களுக்கு உள்ளது என்று நினைக்கும்

கதி இழக்கினும் = நல்ல கதியை இழக்கினும்

 கட்டுரை இழக்கிலேம் என்றார் = சொன்ன சொல் தவற மாட்டோம் என்றார்


மதி இழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான் = மதி இழந்து, சொல்ல     வார்த்தை  இல்லாமல் கௌசிகன் மறைந்தான்.

பாடல் சொல்லும் செய்தி என்ன ?

செய்யும் செயல் சரியானது என்று முடிவு பண்ணிவிட்டால் எத்தனை தடை  வந்தாலும், எவ்வளவு இன்னல் வந்தாலும் உறுதியாக இருக்க வேண்டும்.

உண்மை சொல்வது சரியானது என்று முடிவு செய்து  விட்டான். ஒரு இம்மி அளவும் பின்  வாங்க வில்லை. ஆனது ஆகட்டும் என்று தான் சரி என்று நினைத்த  வழியில் இறுதி வரை சென்றான்.

சின்ன சின்ன துன்பங்கள், தடைகள் வந்தாலும் துவண்டு போகிறோம். எதுத்த காரியத்தை  கை விட்டு  .விடுகிறோம்.

சிறு தோல்விகள் நம்மை சோர்வடையச் செய்து விடுகின்றன.

நம்மால் முடியாது என்று பின் வாங்கி விடுகிறோம்.

அது கூடாது.

பதினாலு வருடம் காட்டுக்குப் போ என்றால் சிரித்துக் கொண்டே போனான் இராமன்.

பதுமூன்று வருடம்  வனவாசம்,ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் - சரி என்று போனார்கள்   பாண்டவர்கள்.

செய்யும் செயலில் உறுதி வேண்டும். சவால்களை கண்டு துவளக் கூடாது என்று உரமூட்ட   வந்தவை இந்த கதைகள்

சொல்லித்தாருங்கள் உங்கள்  .பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும்.


இராமாயணம் - பாணி வில்லுமிழ்

இராமாயணம் - பாணி வில்லுமிழ் 


நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

நல்லவர்கள், அவர்களுக்கு கோபம் வந்தால் அதை ஒரு கணத்தில் மறந்து விடுவார்கள்.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

என்பார் வள்ளுவர். குணத்தில் நல்லவர்கள், கோபம் வந்தால், அது அவர்களிடம் ஒரு கணம் கூட நிற்காது.

ஆனால் கெட்டவர்களுக்கு கோபம் வரும் படி நாம் நடந்து கொண்டால், அதை அவர்கள் ஆயுள் உள்ள வரை மறக்க மாட்டார்கள்...எப்படியாவது நம்மை பழி தீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பார்கள்.

அன்று எனக்கு செய்தானே, அன்று எனக்கு செய்தானே என்று கருவிக் கொண்டே இருப்பார்கள்.

சிறு வயதில் இராமன் கூனியின் மேல் மண் உருண்டை உள்ள அம்பை எய்தான். அதை அவள் மறக்க வில்லை. மனதில் வைத்து கருவிக் கொண்டே இருந்தாள் . எப்படியாவது இராமனுக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்று காத்து இருந்தாள் .

பாடல்

தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள்-வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள். 

பொருள்

தொண்டைவாய்க் = சிவந்த இதழ்களை கொண்ட

கேகயன்  தோகை = கேகய மன்னனின் மகள் (கைகேயி)

கோயில்மேல் = மாளிகைக்கு

மண்டினாள் = அடைந்தாள்

வெகுளியின் மடித்த வாயினாள் = கோபத்தால் உதட்டைக் கடித்துக் கொண்டு

பண்டைநாள் = முன்பு ஒரு நாள்

இராகவன் = இராமனின்

பாணி = பாணி என்றால் கை. பாணிக் கிரகணம் என்றால் கையை பிடித்துக் கொள்ளுதல்.

வில்லுமிழ் = வில் உமிழ்ந்த

உண்டை = உருண்டை

உண்டதனைத் = அடி வாங்கியதை

தன் உள்ளத்து உள்ளுவாள் = தன் மனத்தில் நினைப்பாள்

தீயவர்கள் என்றும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். 

எப்போதோ சின்ன வயதில் செய்ததை, தெரியாமல் செய்ததை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். 

எனவே தீயவர்களிடம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். 

அவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று அவர்களோடு உறவாடக் கூடாது.  தெரியாமல், விளையாட்டாக நாம் ஏதோ ஒன்று சொன்னாலும், செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு   பின் நமக்கு பெரிய தீமையாக செய்து விடுவார்கள்.  

எனவேதான் அவ்வை, தீயாரை காண்பதும் தீது என்றாள் . அப்புறம் அல்லவா பழகி, பின் அவர்களை திருத்தி, நல்வழிப் படுத்துவது. அவர்களைப்  பற்றி    நினைப்பதும்  கூட தீது என்கிறார்  அவ்வையார்.

சரி அது  ஒரு புறம் இருக்கட்டும்....நீங்கள் எப்படி ?

மற்றவர்கள் உங்களுக்குச் செய்த தீமைகளை நினைத்துக் கொண்டே இருப்பீர்களா  அல்லது உடனே மறந்து விடுவீர்களா ?

எவ்வளவு நாள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அவ்வளவு கெட்டவர்கள் நீங்கள் என்பது  பாடம். 

நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்பது வள்ளுவம். 

தீமைகளை அன்றே மறக்கப் படியுங்கள். 

Thursday, September 5, 2013

திருக்குறள் - வழக்கும் தண்டனையும்

திருக்குறள் - வழக்கும் தண்டனையும்




அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்ற மூன்று கூறுகளை உடையது என்று  பார்த்தோம்.

அதில்

வழக்காவது, ஒரு பொருளைத் தனித்தனியே 'எனது எனது' என்று இருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு, அப்பொருள் மேல் செல்வது. அது 'கடன் கோடல்' முதல் பதினெட்டுப் பதத்தது ஆம்.

அதாவது வழக்கு என்பது ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எனக்கு எனக்கு என்று தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வது. 

அதில் 

தண்டமாவது, அவ்வொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழீஇயினாரை, அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்ப நாடி அதற்குத்தக ஒறுத்தல்.

தண்டனை என்பது ஒழுக்க நெறிக்கும் , வழக்கு நெறிக்கும் ஒத்துப் போகாதவர்களை  அந்த வழியில் நிறுத்தும் பொருட்டு செய்வது. 

இன்றைய தண்டனை பற்றிய சிந்தனை என்னவென்றால் , ஒருவனுக்கு கொடுக்கப்  படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது.

பரிமேலழகர்   எழுதுகிறார்,தண்டனை என்பது வழி தவறியவர்களை சரியான  
வழியில் செலுத்த செய்யும் வழி முறைகள் என்று. 

அறம் என்பது பற்றி என்ன ஒரு தெளிவான சிந்தனை....!







இராமாயணம் - பாதம் அல்லது பற்றிலர்

இராமாயணம் - பாதம் அல்லது பற்றிலர் 



இராமாயணத்தில் இறை வணக்கம் மூன்று பாடல்களில் உள்ளது. இந்த மூன்று பாடலுக்கும் உரிய எழுதுவது என்றால் அதற்காக ஒரு தனிப் புத்தகமே  போடலாம்.

முதல் பாடல் - உலகம் யாவையும் என்று தொடங்கும் பாடல்.

மூன்றாவது பாடல்....

ஆதி. அந்தம். அரிஎன. யாவையும்
ஓதினார். அலகு இல்லன. உள்ளன.
வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் - பற்று இலார்.

பல பொருள்களை உள்ளடக்கிய பாடல். கம்பன் வேண்டும் என்றே இப்படி எழுதினானா அல்லது அப்படி அமைந்து விட்டதா என்று  தெரியாது.

பொருள்


ஆதி. அந்தம். அரிஎன. யாவையும் ஓதினார்  =  தொடக்கம், முடிவு என்று அரியன யாவையும் ஓதியவர்கள்

அரியன என்றால் அரிதாக உள்ளவை என்று ஒரு பொருள்.

ஆதியும் அந்தமும் அரி (ஹரி) என யாவையும் ஓதினார் = ஆதியும், அந்தமும் ஹரி தான் என்று எல்லாவற்றையும் ஓதியவர்கள்

வேதம் முதலிய பாடங்களை படிக்கும் போது "அரி " என்று சொல்லி ஆரம்பித்து பின் அரி என்று சொல்லி முடிப்பது ஒரு  வழக்கம்.

அரி ஓம் என்று சொல்லும்போது அறிவோம் என்று நம்பிக்கை  பிறக்கிறது.

அலகு இல்லன. உள்ளன வேதம் என்பன  = அலகு என்றால்  அளவு.அளவு உள்ளது, இல்லாதது. அது என்ன உள்ளது, இல்லாதது ? வேதங்கள் இத்தனை என்று எண்ணிச் சொல்லி  விடலாம். ஆனால் அதில் உள்ள அர்த்தங்களை எண்ணிச் சொல்ல  முடியாது.


மெய்ந் நெறி = உண்மையான வழி

நன்மையன் பாதம் அல்லது பற்றிலர் - பற்று இலார் = நன்மை தரக் கூடியவனின் பாதம் அல்லது வேறு ஒன்றையும் பற்ற மாட்டார்கள்


தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்று முதல் பாடலில் சொன்னான்.

நாங்கள் சரண் அடைவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. வேறு யாரெல்லாம்  அவன் பாதங்களை சரண் அடைகிறார்கள் என்று  கம்பன் சொல்லுகிறான்.

ஆதியும், அந்தமும், அரியன எல்லாம் ஓதி உணர்ந்த பெரியவர்கள் அவன்  பாதத்தை சரண் அடைகிறார்கள். 

அப்புறம், வேதங்கள் அவனை சரண்  அடைகின்றன.

மூன்றாவது, பற்றற்ற துறவிகள் அவன் பாதத்தையே பற்றுகிறார்கள்.

சரண் அடைவதில் நமக்கு ஏதேனும் தயக்கம் வந்து விடக் கூடாது என்று கம்பன்  இந்தப் பாடலை  தந்தான்.

Wednesday, September 4, 2013

திருக்குறள் - ஒழுக்கம் - பரிமேல் அழகர் உரை

திருக்குறள் - ஒழுக்கம் - பரிமேல் அழகர் உரை 


வாழ்வின் நோக்கம் இன்பம், வீடு பேறு , இறைவனை அடைவது என்றும், அவற்றை அடைய அறம் உறுதியான வழி என்றும் அந்த அறத்தின் வழி மனிதன் போவதற்கு இன்பமும், அதற்காக பொருளும் வேண்டும் என்றும் பார்த்தோம்.

அறம் என்றால் மனு முதலிய நூல்களில் சொன்னவற்றை செய்வதும், அவை செய்யக் கூடாது என்று சொல்பவற்றை செய்யாமல் இருப்பதும் என்றும் பார்த்தோம்.

அறத்திற்கு மூன்று கூறுகள் உண்டு - ஒழுக்கம், வழக்கு, தண்டம்.

ஒழுக்கம், வழக்கு தண்டனை என்றால் என்று பரிமேல் அழகர் கூறுகிறார்.

அவற்றுள் ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

ஒழுக்கம் என்றால் என்ன என்று இந்த ப்ளாகில் பார்ப்போம்.

மேலே சொன்ன வாக்கியத்திற்கு என்ன பொருள் ?

ஒரு graph ஷீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் X axis க்கு பதில் வருணம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

அதில் Y axis க்கு பதில் ஆச்சிரமம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது வருணம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள். அந்தணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என்றும்.

ஆசிரமம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள் - பிரமச்சாரியம், கிரகச்சாரம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம்

ஒவ்வொரு மனிதனும் இந்த 4 x 4 கட்டத்திருக்குள் ஏதோ ஒரு கட்டத்தில் இருந்தே ஆக வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கடமை உண்டு.

மனிதனுக்கு இரண்டு கூறுகள் உண்டு - ஒன்று தனிமனிதன், இன்னொன்று சமுதாயத்தில் அவன் ஒரு அங்கம்.

தனி மனிதனாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

ஒரு சமுதாயத்தின் அங்கமாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

சமுதாயக் கடமை - சூத்திரனாகவோ, வைசியனாகவோ,  கஷத்ரியனாகவோ,அந்தனனாகவோ அவனுக்கு சில கடமைகள் உண்டு.

அது போல தனி மனிதனாக பிரமச்சாரியாக, இல்லறத்தில் , வான பிரச்த்தத்தில், துறவறத்தில் அவனுக்கு சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த இரண்டு கூறுகளைத்தான் பரிமேல் அழகர் இங்கே கூறுகிறார்:


அந்தணர் முதலிய வருணத்தார், - இது சமுதாயக் கடமை 

தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று = இது தனி மனிதக் கடமை 

அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல். = அவரவர்க்கு ஓதிய அறங்கள் என்று கூறவில்லை. அவ்வவற்றிற்கு என்று கூறுகிறார். ஏன் ? மேலே கூறிய 4 x 4 கட்டத்திற்கு என்று வகுத்த அறங்கள். எனவே  அவ்வவற்றிற்கு என்று கூறினார். 

இது ஒழுக்கம்.

அடுத்து வருவது வழக்கும் தண்டமும்.

திருக்குறள் எப்படி எழுதப் பட்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் பரிமேல் அழகர்.

திருக்குறளுக்கு முன்னுரை.

எவ்வளவு ஆழம். ? எவ்வளவு நுணுக்கம். எவ்வளவு சிந்தனை இதற்குப் பின்னால்  இருந்து இருக்கிறது ?

பிரமிப்பாக இருக்கிறது.