Sunday, September 15, 2013

இராமாயணம் - துரிசு இல்லாத் திருமனத்தான்

இராமாயணம் - துரிசு இல்லாத் திருமனத்தான் 


இராமனைத் தேடி பரதன் கங்கை கரை அடைகிறான். பரதனை சந்தேகப் படுகிறான் குகன். ஒருவேளை இராமனை கொல்லத்தான் வந்திருகிறானோ என்று சந்தேகம் வருகிறது.

இராமாயணத்தில் , மிக மிக பாவப்பட்ட பாத்திரம் என்றால் பரதன் தான். அவனை யாருமே புரிந்து கொள்ளவில்லை. பெற்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. தந்தை புரிந்து கொள்ளவில்லை. உடன் பிரிந்த இலக்குவன் புரிந்து கொள்ளவில்லை. ஏன்,  கோசலை கூட அவனை ஒரு இடத்தில் சந்தேகித்தாள்.

அவ்வளவு நல்லவன். ஆனாலும் காப்பியும் முழுவதும் துன்பப்படுகிறான்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் என்றார்  வள்ளுவர். நல்லவனுக்கு ஏன் இவ்வளவு துன்பம் ?

கங்கை கரை அடைந்த பரதன் அங்கு நின்ற குகனை காட்டி அவன் யார் என்று சுமந்தரனிடம்  கேட்டான்.

சுமந்திரன் குகனைப் பற்றி பல விஷயங்கள் கூறுகிறான் ...அதோடு ஒரு வரி  "உங்கள் குல தனி நாதற்கு உயிர் துணைவன்" என்று  குறிப்பிடுகிறான்.

அதை கேட்ட பரதன்  ரொம்ப மகிழ்ந்தான்...." அப்படியா,என் அண்ணனுக்கு துணைவனா ? அப்படினா நானே போய் அவனைப் பார்க்கிறேன்" என்று எழுந்தான். பரதன் பெரிய அரசன்.  குகன் ஒரு சிற்றரசன். படகுகள் ஓட்டும் மக்களுக்குத் தலைவன். பரதன் நினைத்திருந்தால், குகனை இங்கே அழைத்து வாருங்கள் என்று சொல்லி  இருக்கலாம்.

இராமனின் நண்பன் என்று சொன்னவுடன் பரதனுக்கு எல்லாம் மறந்து போயிற்று. தான் யார், குகன் யார் என்பதெல்லாம் அவனுக்கு பொருட்டு  இல்லை.  நானும் இராமனின் தொண்டன். அவனும் இராமனின் தொண்டன் ...எங்களுக்குள் என்ன உயர்வு தாழ்வு என்று நினைத்தான்.

இறைவன் சந்நிதியில் எல்லோரும் ஒன்று....

பாடல்


தன் முன்னே, அவன் தன்மை,
     தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
     துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
     கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
     யானே சென்று’ என எழுந்தான்.


பொருள்


தன் முன்னே = தன்  முன்னே நின்ற குகனை பற்றி

அவன் தன்மை = அவனுடைய தன்மைகளை

தந்தை துணை = தந்தையின்  (தசரதனின்) துணை (துணைவன் சுமந்திரன்)

முந்து உரைத்த சொல் = முன்னால் சொன்ன சொல் (உங்கள் குல நாயகற்கு உயிர் தோழன் என்று சொன்ன சொல்)

சொல் முன்னே உவக்கின்ற = இது ஒரு ஆச்சரியமான வரி. சொல்வதற்கு முன்னே மகிழ்ந்தான். எப்படி சொல்வதற்கு முன்னேயே மகிழ்ச்சி வரும். சில பேரை கண்டால், இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் கொப்பளிக்கும். யார் என்று தெரியாது, என்ன பேர், என்ன ஊர் எதுவும் தெரியாது. இருந்தாலும் ஏதோ ரொம்ப நாள் பழகின மாதிரி ஒரு எண்ணம் தோன்றும். சுமந்திரன் சொல்வதற்கு முன்னாலேயே பரதனுக்கு மனதிற்குள் ஒரு சந்தோஷம். 

துரிசு இலாத் திரு மனத்தான் = மனதில் ஒரு குற்றமும் இல்லாதவன். வள்ளுவர் சொன்ன மாதிரி "மனதிற்கன் மாசு இலன்" . மனதில் கூட குற்றம் இல்லாதவன். அவ்வளவு நல்லவன். 

‘மன் முன்னே தழீஇக் கொண்ட = நம் மன்னவனான இராமனை தழுவிக் கொண்ட

மனக்கு இனிய துணைவனேல் = மனதுக்கு இனிய துணைவன் என்றால்

என் முன்னே  அவற் காண்பென்  யானே சென்று’ என எழுந்தான். = அவனுக்கு முன்னால் நானே போய் அவனைப் பார்ப்பேன் என்று பரதன் எழுந்தான்

பரதனும், குகனும் சந்தித்த இடத்தில் கம்பனின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டும் பாடல்கள்.

நேரம் இருப்பின் மூல நூலை படித்துப் பாருங்கள்.



2 comments:

  1. கம்பர் கவிநயம் சும்மா அதிருது!

    ReplyDelete
  2. உண்மை. பாடல்கள் அல்ல, இப்பகுதியின் ஒவ்வொரு வரியும் தேன்சுவை. அதில் ஒன்று நமெக்கெல்லாம் தெரிந்த 'எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு' . குகன் பரதனைப் பற்றிய இரண்டாவது ஆனால் சரியான விமர்சனம். இதுவரை தெரியாத பரதனைப் பற்றி எப்படி குகன் விமர்சனம் செய்ய முடியும்?

    குகன் நினைத்தான் ' என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கே பல நல்ல குணங்கள், ஸ்ரீ ராமனுடன் பழகிய இரண்டு நாட்களிலேயே ஏற்படுமானால், என் தலைவனின் உடன் பிறந்த சகோதரர் எப்படி தவறு இழைக்க முடியும்?' என்று தன் நிலையிலிருந்து பரதனை தீர்மானிக்கிறான் என்று கிருபானந்த வாரியார் சுவாமிகள் விளக்கமளிப்பார்.

    முற்றிலும் பரதனைப் பற்றித் தெரிந்த பின் குகன் கூறுவதுதான் 'ஆயிரம் ராமர் நின் கீழ் ஆவரோ'?. இதன் அடிப்படையில் முக்கூர் ஸ்வாமி சொல்லுவார் ' அளக்கும் பொருளை விட அளக்கப்படும் பொருளே மதிப்பு வாய்ந்தது ( ஸ்கேலும் துணியும்) இவ்வரியில் அளக்கும் பொருள் ஸ்ரீ ராமன், அளவிடப்படும் பொருள் பரதன். எனவே பரதனே உயர்ந்தவன்' என்பார்.

    ReplyDelete