Saturday, September 28, 2013

இராமாயணம் - குகன் அறிமுகம்

இராமாயணம் - குகன் அறிமுகம் 


குகன், இராமன் இருக்கும் இடம் வருகிறான். வாசலில் காவல் நிற்கும் இலக்குவன் கேட்டான் "நீ யார்" என்று. 

குகன் என்ன சொன்னான் என்பது  ஒரு புறம் இருக்கட்டும். 

நம்மை யாராவது "நீங்கள் யார் " என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ? 

நம் படிப்பு, வேலை, திறமை , சொத்து என்று நம் பெருமைகளை சொல்லுவோம். 

குகன் கங்கை கரை நாட்டுக்கு அரசன், ஆயிரம் படகுகளுக்குச் சொந்தக்காரன், எவ்வளவு பணிவாய் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் பாருங்கள்.....

பாடல் 

கூவா முன்னம், இளையோன் குறுகி, 'நீ
ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;
'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான்.

பொருள்

கூவா முன்னம் = குகன் அழைப்பதற்கு முன்னே 

இளையோன் குறுகி = இளையவனான இலக்குவன் அவனை சென்று அடைந்து 

'நீ ஆவான் யார்?' என = நீ  யார் என 

அன்பின் இறைஞ்சினான் = அன்போடு கெஞ்சிக் கேட்டான். இறைஞ்சினான் என்கிறான் கம்பன். 

'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென் = தேவா, உன் திருவடிகளைச் வணங்குவதற்கு வந்தேன் என்றான்.  குகன் இதுவரை இராமனைப் பார்த்தது கிடையாது. இலக்குவனைப் பார்த்து அவன் தான் இராமன் என்று நினைத்த்துக் கொண்டான். உன்னை சேவிக்க வந்தேன் என்றான். உண்மையில் அவன் சேவிக்க வந்தது இராமனை 

நாவாய் வேட்டுவன் = படகுகள் ஓட்டும்  ஒரு வேடன் 

நாய் அடியேன்' என்றான் = நாய் போல அடிமையானவன் என்கிறான். 

என்ன ஒரு பணிவு. 

அடக்கம் அமரருள் உய்கும் என்றான் வள்ளுவன். தன்னை இவ்வளவு பணிவாக அறிமுக படுத்திக் கொண்டவன் யாரும் இல்லை இந்த உலகில். 

பெரியவர்களிடம் இந்த அடக்கம் எப்போதும் நிறைந்து கிடக்கிறது. 

மாணிக்க வாசகரிடம் இருந்தது - நம்மையும் ஓர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று வித்து என்பார். 
அபிராமி பட்டரிடம் இந்த அடக்கம் இருந்தது - அடியேனுடைய நாய்த் தலையே என்பார். 

குகனிடம் அவ்வளவு அன்பு.. அவ்வளவு அடக்கம். 


3 comments:

  1. இப்படி ஒருவரை ஒருவர் பண்பில் மிஞ்சி விட்டால், இனிமேல் யாராலும் அவர்களை மிஞ்ச முடியாது!

    ReplyDelete
  2. பணியுமாம் என்றும் பெருமை... என்றான் வள்ளுவன். பணிவுக்கு குகனிடம் ஆதர்சம் உள்ளது என்பதை இச்செய்யுள் மூலம் தெளியலாம். - கலைமகன் பைரூஸ்

    ReplyDelete
  3. பணியுமாம் என்றும் பெருமை... என்றான் வள்ளுவன். பணிவுக்கு குகனிடம் ஆதர்சம் உள்ளது என்பதை இச்செய்யுள் மூலம் தெளியலாம். - கலைமகன் பைரூஸ்

    ReplyDelete