Tuesday, September 17, 2013

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு

நற்றிணை - நீர் இன்றி அமையா உலகு 


நற்றிணை , 400 தனிப் பாடல்களை கொண்டது. அந்த கால தமிழர்களின் வாழ்கையை படம் பிடித்து  காட்டும்  நூல்.

அதில் ஒரு பாடல்.....

தலைவி அவளுடைய தோழியிடம் கூறுகிறாள்.

"..அவன் சொன்ன சொல் தவற மாட்டான். எப்போதுமே இனியவன். கட்டி அணைக்கும் என் தோள்களை என்றும் பிரியாதவன். தேன் போல இனிமையானவன். எப்படி இந்த உலகம் நீர் இல்லாமல் வாழ முடியாதோ, அது போல அவன் இல்லாமல் நான் வாழ முடியாது என்று அவன்  அறிவான். அவன் என்னை பிரியும் அந்த சிறுமையான செயலை ஒரு போதும் செய்ய மாட்டான். "

பாடல்


நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!


பொருள்

நின்ற சொல்லர் = சொன்ன சொல் தவறாதவன். அவன் சொன்ன சொல் என்றும் நிலைத்து இருக்கும்.  ஒரு தடவை ஒன்று சொன்னால் அதில் இருந்து மாற மாட்டான்.

நீடு தோறு இனியர் = ரொம்ப இனிமையானவன். நீடு என்றால் நீண்ட, ரொம்ப நாள், என்று பொருள். 

என்றும் என் தோள் பிரிபு அறியலரே = என் தோள்களை விட்டு பிரியவே மாட்டான்


தாமரைத் = தாமரை மலரில் 

தண் = குளிர்ச்சியான

தாது ஊதி = மகரந்தப் பொடிகளை ஊதி. ஊதி என்றால் துளைத்து, நுழைந்து, உறிஞ்சி  என்று பொருள்

மீமிசைச் = உயர்ந்த இடத்தில்

சாந்தில் = சந்தன மரத்தில்

தொடுத்த தீம் தேன் போல = சேர்த்து வைத்த சுவையான தேனைப் போல

புரைய மன்ற = நிச்சயமாக உயர்ந்தது

புரையோர் கேண்மை = உயர்ந்த அவனின் நட்பு அல்லது உறவு

நீர் இன்று அமையா உலகம் போலத் = நீர் இல்லாமல் அமையாத உலகம் போல

தம் இன்று = அவன் இன்றி


அமையா நம் நயந்தருளி = அமையாத நம்முடைய நன்மையைக் கருதி, அருள் செய்து

நறு நுதல் பசத்தல் அஞ்சிச் = என் நெற்றி பசலை நிறம் அடையும் என்று அஞ்சி

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! = என்னை பிரியும் அந்த சிறிய செயலை  செய்வானா ? அவனுக்கு அதைச் செய்யத் தெரியாது

சந்தன மரத்தில் உள்ள தேன் போல அவன் காதல் உயர்ந்தது. கெட்டுப் போகாதது. 

6 comments:

  1. ஒன்பது வரிகளில் எத்தனை அர்த்தங்கள்! முதலில், அவர் பெருமை. அப்புறம் குளிர்ந்த தாமரையையும், சந்தன மரத் தேனையும் வைத்து ஒரு உவமையுடன் தனது காதலின் சிறப்பு, அப்புறம் நீரின்றி அமையா உலகு என்ற உவமையுடன் பிரிவு என்ற கருத்து, ... அர்த்தங்களை அடைத்து வைத்திருக்கிறது இந்தப் பாடல்.

    "நீரின்றி அமையா உலகு" என்பது திருக்குறளிலும் உண்டோ?

    ReplyDelete
  2. அருமை அருமை... மிகுபயன் உடையது
    தங்கள் பொழிப்புரை கோடி பயன் கொடுக்கிறது. தொடர்ந்து பதிவிடுக.

    ReplyDelete
  3. அருமையான பதிவு நல்ல பயன் அளிக்கிறது தொடர்ந்து பதிவிடுக

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  5. பாடல் எண்ணைக் குறிப்பிடவும்

    ReplyDelete