Tuesday, September 3, 2013

வில்லி பாரதம் - கண்டவை

வில்லி பாரதம் - கண்டவை 


தருமன் சமாதனமாகப் போவோம் என்று சொன்னது  பீமனுக்கு  பிடிக்கவில்லை.

மலை போன்ற என் கதாயுதத்தை கண்டும், அர்ஜுனனின் வில்லை  கண்டும், நகுல சகாதேவர்களின் திறமைகளை கண்டும், நமக்காக நிற்கும் கண்ணனின் நிலை கண்டும், திரௌபதியின் விரித்த குழல் கண்டும், எதிரிகளை கொலை  செய்து அதைக் கண்டு மகிழாமல் அவன் குடைக் கீழ் உயிர் வாழ நினைக்கிறாயே என்று தருமனை பார்த்து இகழ்ந்து  கூறுகிறான்.

பாடல்

'மலை கண்டதென என் கைம் மறத் தண்டின் வலி 
                  கண்டும், மகவான் மைந்தன் 
சிலை கண்டும், இருவர் பொரும் திறல் கண்டும், 
                  எமக்காகத் திருமால் நின்ற 
நிலை கண்டும், இவள் விரித்த குழல் கண்டும், 
                  இமைப்பொழுதில் நேரார்தம்மைக் 
கொலைகண்டு மகிழாமல், அவன் குடைக் கீழ் உயிர் 
                  வாழக் குறிக்கின்றாயே!'

பொருள்

மலை கண்டதென = மலையை போன்ற உறுதியான

என் கைம் = என்  கையில் உள்ள

மறத் தண்டின் = வீரமான கதாயுதத்தின்

வலி கண்டும் = வலிமையைக்  கண்டும்

மகவான் மைந்தன் = இந்திரன் மைந்தன் (மகம்  என்றால் யாகம்.  இந்திர பதவி   என்பது நிறைய யாகங்கள் செய்து கிடைப்பது)  அர்ஜுனனின்

சிலை கண்டும் = வில்லைக் கண்டும்

இருவர் பொரும் திறல் கண்டும் = நகுல சகாதேவர்களின் போர் ஆற்றலைக் கண்டும்

எமக்காகத் = எங்களுக்காக

திருமால் நின்ற நிலை கண்டும் = திருமால் நிற்கும் நிலை கண்டும்

இவள் விரித்த குழல் கண்டும் = திரௌபதியின் விரித்த குழலை கண்டும்

இமைப்பொழுதில் = கண்ணிமைக்கும் நேரத்தில்

நேரார்தம்மைக் = எதிரிகளை 

கொலைகண்டு மகிழாமல் = கொலை செய்து மகிழாமல்

அவன் குடைக் கீழ் உயிர் வாழக் குறிக்கின்றாயே! = அவன் குடைக் கீழ் உயிர் வாழ நினைகின்றாயே

என்று  குமுறுகிறான்.



1 comment:

  1. என்ன அருமையான, உணர்ச்சி ததும்பும் பாடல்கள்! இப்போதுதான் வில்லி பாரதம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete