Friday, September 6, 2013

இராமாயணம் - பாணி வில்லுமிழ்

இராமாயணம் - பாணி வில்லுமிழ் 


நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

நல்லவர்கள், அவர்களுக்கு கோபம் வந்தால் அதை ஒரு கணத்தில் மறந்து விடுவார்கள்.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

என்பார் வள்ளுவர். குணத்தில் நல்லவர்கள், கோபம் வந்தால், அது அவர்களிடம் ஒரு கணம் கூட நிற்காது.

ஆனால் கெட்டவர்களுக்கு கோபம் வரும் படி நாம் நடந்து கொண்டால், அதை அவர்கள் ஆயுள் உள்ள வரை மறக்க மாட்டார்கள்...எப்படியாவது நம்மை பழி தீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பார்கள்.

அன்று எனக்கு செய்தானே, அன்று எனக்கு செய்தானே என்று கருவிக் கொண்டே இருப்பார்கள்.

சிறு வயதில் இராமன் கூனியின் மேல் மண் உருண்டை உள்ள அம்பை எய்தான். அதை அவள் மறக்க வில்லை. மனதில் வைத்து கருவிக் கொண்டே இருந்தாள் . எப்படியாவது இராமனுக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்று காத்து இருந்தாள் .

பாடல்

தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள்-வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள். 

பொருள்

தொண்டைவாய்க் = சிவந்த இதழ்களை கொண்ட

கேகயன்  தோகை = கேகய மன்னனின் மகள் (கைகேயி)

கோயில்மேல் = மாளிகைக்கு

மண்டினாள் = அடைந்தாள்

வெகுளியின் மடித்த வாயினாள் = கோபத்தால் உதட்டைக் கடித்துக் கொண்டு

பண்டைநாள் = முன்பு ஒரு நாள்

இராகவன் = இராமனின்

பாணி = பாணி என்றால் கை. பாணிக் கிரகணம் என்றால் கையை பிடித்துக் கொள்ளுதல்.

வில்லுமிழ் = வில் உமிழ்ந்த

உண்டை = உருண்டை

உண்டதனைத் = அடி வாங்கியதை

தன் உள்ளத்து உள்ளுவாள் = தன் மனத்தில் நினைப்பாள்

தீயவர்கள் என்றும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். 

எப்போதோ சின்ன வயதில் செய்ததை, தெரியாமல் செய்ததை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். 

எனவே தீயவர்களிடம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். 

அவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று அவர்களோடு உறவாடக் கூடாது.  தெரியாமல், விளையாட்டாக நாம் ஏதோ ஒன்று சொன்னாலும், செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு   பின் நமக்கு பெரிய தீமையாக செய்து விடுவார்கள்.  

எனவேதான் அவ்வை, தீயாரை காண்பதும் தீது என்றாள் . அப்புறம் அல்லவா பழகி, பின் அவர்களை திருத்தி, நல்வழிப் படுத்துவது. அவர்களைப்  பற்றி    நினைப்பதும்  கூட தீது என்கிறார்  அவ்வையார்.

சரி அது  ஒரு புறம் இருக்கட்டும்....நீங்கள் எப்படி ?

மற்றவர்கள் உங்களுக்குச் செய்த தீமைகளை நினைத்துக் கொண்டே இருப்பீர்களா  அல்லது உடனே மறந்து விடுவீர்களா ?

எவ்வளவு நாள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அவ்வளவு கெட்டவர்கள் நீங்கள் என்பது  பாடம். 

நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்பது வள்ளுவம். 

தீமைகளை அன்றே மறக்கப் படியுங்கள். 

2 comments:

  1. அருமையான விளக்கம்!

    ReplyDelete
  2. விளக்கம் மிக நன்றாக இருக்கிறது.

    கூனி மேல் அடித்ததற்கு, கைகேயிக்கு ஏன் இவ்வளவு கோபம்??

    ReplyDelete