Saturday, October 19, 2013

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான்

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான் 


புகழ் அடைவதற்கு தானம் செய்வது சிறந்த வழி. தானம் என்பது பொருளாக இருக்க வேண்டும் என்று அல்ல. நல்ல சொல், கல்வி தானம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

திருக்குறளில் புகழ் என்று ஒரு அதிகாரம். அது ஈகை என்ற அதிகாரத்தின் பின் வருகிறது. வள்ளுவர் ஏன் அப்படி வைத்தார் என்பதற்கு பரிமேலழகர் உரை எழுதுகிறார் 

"புகழ் என்பது இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் , அதன்பின் வைக்கப்பட்டது" 

ஈதலினால் புகழ் வரும். 

கர்ணனுக்கு எவ்வளவுதான் வலிமை இருந்தாலும், வித்தை இருந்தாலும் தன் குலம் பற்றி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. தகப்பன் பெயர் தெரியாதவன் என்று அவன் மேல் உள்ள பழி இருந்து கொண்டே இருந்தது. உள்ளுக்குள் அது அவனை அரித்துக் கொண்டு இருந்தது. 

அந்த பழியை போக்கி, புகழ் அடைய கர்ணன் தானம் செய்யத் தொடங்கினான். நாளடைவில் அது அவனது இயற்கை குணமாகி விட்டது. கடைசியில், உயிர் போகும் நேரத்தில், செய்த தானம் அத்னையும் கண்ணனுக்கு தானம் செய்தான். 

இது உண்மையா ? கர்ணன் தன் பழி போக்கவா தானம் செய்தான் ? அது அவனது பிறவி குணம் இல்லையா ? பழி போக்கவா தானம் செய்தான் ?

வில்லி புத்துராழ்வார் சொல்கிறார்..."புறம் சுவர் கோலம் செய்வான்" என்று. உள்ளுக்குள் ஆயிரம் அழுக்கு , வெளி சுவரை அழகு படுத்தி வைப்பது மாதிரி, என்று அர்த்தம். 

துரியோதனன் சபை. கண்ணன் தூது வரப் போகிறான் என்ற செய்தி வந்திருக்கிறது. என்ன செய்வது என்று ஆலோசனை நடக்கிறது. அப்போது கர்ணன் சொல்கிறான் என்று ஆரம்பிக்கிறார் வில்லியார்...

பாடல் 

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து, எதிர்ந்த வேந்தர் 
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில், 
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும் 
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:

பொருள் 

இறைஞ்சிய = அடி பணிந்த 

வேந்தர்க்கு = அரசர்களுக்கு 

எல்லாம் = எல்லோருக்கும் 

இருப்பு அளித்து = (துரியோதனன்) அவர்கள் அமர இருக்கை தந்து 

எதிர்ந்த வேந்தர்  = துரியோதனை எதிர்த்த வேந்தர்களின் 

நிறம் செறி குருதி வேலான் = மார்பில் தன் வேலைப் பாய்ச்சி, அதனால் சிவந்த வேலைக் கொண்ட துரியோதான் 

நினைவினோடு இருந்தபோதில் = சிந்தித்துக் கொண்டு இருந்த போது  

அறம் செறி தானம் = அறம் நிறைந்த தானம். அதாவாது கெட்ட காரியத்துக்கு தானம் செய்து உதவ மாட்டான் கர்ணன் 

வண்மை = வீரம் அல்லது தியாகம் 

அளவிலாது அளித்து = அளவு இல்லாமல் அளித்து. இவ்வளவு தானம் செய்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ள மாட்டான் கர்ணன். 

நாளும் = ஒவ்வொரு நாளும் 

புறம்  சுவர் கோலம் செய்வான் = வெளிச் சுவரை அழகு படுத்தும் கர்ணன் 

பூபதிக்கு உரைக்கலுற்றான் = அரசனான துரியோதனுக்கு சொல்லத் தொடங்கினான் 

1 comment:

  1. உள்ளுக்குள் அழுக்கு என்பதைவிட, உள்ளுக்குள் குறை என்று வைத்துக்கொள்ளலாம். தகப்பன் பேர் தெரியவில்லை என்ற குறை. அதைத் தவிர, அவனுள்ளே இன்னும் அழுக்கு இருந்ததா என்பது வாததுக்குரியது.

    ReplyDelete