Friday, October 25, 2013

இராமாயணம் - நின்னும் நல்லன்

இராமாயணம் - நின்னும் நல்லன் 


நெடு முடி புனைவதற்கு இடையூறு உண்டோ  கேட்ட கோசலையிடம் இராமன் சொன்னான் , நெடு முடி புனைய தடை ஒன்றும் இல்லை. எனக்கு பதில் உன் அன்பு மகன் , பங்கமில் குணத்து என் தம்பி பரதனே துங்க மா முடி சூட்டுகின்றான் என்றான்.

போன ப்ளாகில் சொன்ன மறந்து போனது பரதன் முடி சூட்டுகிறான் என்று இராமன்  சொல்லவில்லை.பரத'னே' முடி சூட்டுகிறான் என்றான். ஏகாரம் உயர்வு சிறப்பு. அவன் மட்டும் தான் முடி சூட்டுகின்றான்.

சரி, இராமன் சொல்லி விட்டான்.

கோசலை அதற்கு என்ன மறு மொழி சொன்னாள் ?

நம் வீட்டில் வந்து "என்னை வேலையை விட்டு போகச் சொல்லி விட்டார்கள்" என்று ஒரு மகனோ, கணவனோ தாயிடமோ, மனைவியிடமோ சொன்னால் என்ன நடக்கும் ?

அவர்களும் கவலைப் பட்டு, அவனையும் கவலைப் படுத்தி, பயப்பட்டு, மற்றவர்களை திட்டி சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விடுவார்கள்.

ஒருவர் நம்மிடம் ஒரு துக்க செய்தியை சொல்கிறார் என்றால் அவரை மேலும் பயப் படுத்தக் கூடாது.  காயப் படுத்தக் கூடாது.

அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று அந்த துக்க செய்தியின் தாக்கத்தை குறைக்க முயல வேண்டும்.

கோசலை சொல்கிறாள் ...."முறை என்று ஒன்று உண்டு. அதைத் தவிர்த்துப் பார்த்தால், பரதன் உன்னை விட மூன்று மடங்கு உயர்ந்தவன் , நின்னும் நல்லவன், எந்த குறையும் இல்லாதவன் " என்று கூறினாள் ...

அப்படி கூறியது யார் ? நான்கு சகோதரர்களுக்கும்  அன்பைச் செலுத்தி அவர்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்றிய கோசலை என்றான் கம்பன்.

பாடல்

‘முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
     நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
     கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
     வேற்றுமை மாற்றினாள்.

பொருள்





‘முறைமை அன்று  = மூத்தவன் முடி சூட்டாமல் இளையவன் முடி சூட்டுவது முறைமை அன்று 

என்பது ஒன்று   உண்டு = என்பது ஒன்று உண்டு

மும்மையின் நிறை குணத்தவன் = மூன்று மடங்கு நிறைந்த குணத்தவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன் = ஒரு குறையும் இல்லாதவன்

எனக் கூறினள் = என்று கூறினாள்

நால்வர்க்கும் = நான்கு சகோதரர்களுக்கும்

மறு இல் அன்பினில் = குற்றமற்ற அன்பினால்

வேற்றுமை மாற்றினாள் = வேற்றுமையை மாற்றினாள்

ஒரு வேளை கோசலை சற்று மாற்றி "அது எப்படி மூத்தவன் இருக்க இளையவன் மூடி  சூட்டலாம் " என்று சொல்லி இருந்தால் சகோதர்களுக்கு இடையே  பகை மூண்டிருக்கும், குடும்பம் சிதறி இருக்கும், குடும்பச் சண்டை அரசாங்கச் சண்டையாக  மாறி இருக்கும், தசரதனின் வாக்குக்கு விலை இல்லாமல்  போய் இருக்கும்.

ஒரு வாக்கியம் மிகச் சிறந்த அந்த குடும்பத்தை நடுத் தெருவுக்கு இழுத்து வந்து இருக்கும்.

பேசும்போது, அதன் தாக்கம் அறிந்து பேச வேண்டும்.

சிந்தித்துப் பேச வேண்டும். உணர்ச்சி வசப் பட்டு பேசக் கூடாது.

கோசலை கற்று தரும் பாடம்.

குடும்பத்தை கட்டி காக்கும் மிகப் பெரிய பொறுப்பு பெண்கள் கையில் இருக்கிறது. அவர்கள் அதை மிக மிக கவனமாக கையாள வேண்டும்.

கோசலை அதோடு நிற்கவில்லை ...இன்னும் ஒரு படி மேலே போகிறாள்


No comments:

Post a Comment