Sunday, October 27, 2013

தேவாரம் - கொடுமைபல செய்தன நான்அறியேன்

தேவாரம் - கொடுமைபல செய்தன நான்அறியேன்


நமக்கு துன்பம் வரும்போது எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று நாம் வருந்துகிறோம். நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கு ஏன் இந்த துன்பம், இந்த வருத்தம் வந்தது என்று கவலைப் படுகிறோம்.


ஒரு செயலை செய்தால் அதற்கு ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவு நாம் எதிர் பார்த்ததாய் இருக்கலாம் அல்லது வேறு மாதிரி கூட அமையலாம். ஆனால் வினைக்கு விளைவு என்று ஒன்று உண்டு.

அதையே மாற்றி சிந்தித்தால் ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு வினை இருக்க வேண்டும்.

இன்று ஒரு துன்பம் நமக்கு இருக்கிறது என்றால் அதற்கு நாம் ஏதோ செய்திருக்க வேண்டும்.  அதன் விளைவு தான் இந்தத் துன்பம் என்று அறிய வேண்டும்.

நமக்கு நினைவு தெரிந்து நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்திருக்க மாட்டோம். அல்லது நாம் செய்தது சரியா தவறா என்று கூட நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

துன்பம் என்று வந்து விட்டால் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நாம் செய்த வல் வினை என்று இருக்க வேண்டும்.

நாவுக்கரசருக்கு பொறுக்க முடியாத வயிற்று வலி வந்தது. என்னனவோ செய்து பார்த்தார் .....வலி குறைவதாய் இல்லை.

இறைவனிடம் முறையிடுகிறார்.

இந்த வலி வந்ததற்கு காரணம் நான் ஏதோ கொடுமை செய்திருக்க வேண்டும். என்ன கொடுமை என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் உன் திருவடிகளையே வணங்கி வந்திருக்கிறேன். அப்படி இருக்க எனக்கு ஏன் இந்த பொறுக்க முடியாத வலி ? இந்த வலியை நீக்கி என்னை காக்க வேண்டும்

பாடல்

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பொருள்


கூற்றாயின வாறு = கூற்று ஆயினவாறு. கூற்றுவன் என்றால் எமன். உயிரையும் உடலையும் கூறு செய்வதால் அவன் கூற்றுவன். எனக்கு வந்த இந்த நோய் எமனைப் போல என்னை வருத்துகிறது. வலி உயிர் போகிறது.

விலக்ககிலீர் = விலக்கி அகற்றி அருளவில்லை

கொடுமைபல செய்தன = நான் பல கொடுமைகளை செய்திருக்கலாம்

நான்அறியேன் = அவை என்ன கொடுமைகள் என்று நான் அறிய மாட்டேன்

ஏற்றாய் = எருதின் மேல் அமர்ந்தவனே

அடிக்கே = உன் திருவடிகளுக்கே

இரவும் பகலும் = இரவும் பகலும்

பிரியாது = இடை விடாமல்

வணங்குவன் எப்பொழுதும் = எப்போதும் வணங்குவேன்

தோற்றாது என் வயிற்றின் = என் வயிற்றில் தோன்றிய

அகம்படியே = உள்ளும் புறமும்

குடரோடு = குடலோடு

துடக்கி = துடக்கி என்றால் தீட்டு. பெண்களுக்கு மாதவிடாய் வரும்போது அதை தீட்டு என்று சொல்லுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு வற்றில் ஒரு வலி வரும். துடக்கி என்றால் அந்த சமயத்தில் வரும் வலி போல என்று கொள்ளலாம். ஒரு ஆணால் அறிந்து கொள்ள முடியாத வலி அது. நாவுக்கரசர் சொல்கிறார்.

முடக்கியிட = என்னை முடக்கிப் போட

ஆற்றேன்  அடி யேன் = என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை

அதிகைக் = திரு வதிகை என்ற ஊரில்

கெடில = கெடில நதிக் கரையில்  உள்ள

வீரட்டா னத்துறை = எட்டு வீரட்டானத் துறைகளில் ஒன்றான அந்த ஊரில் உறையும் 
 
அம்மானே = அம்மானே

1 comment: