Thursday, October 31, 2013

இராமாயணம் - நீ என் பிழைதனை ?

இராமாயணம் - நீ என் பிழைதனை ?


பிள்ளைகள் அம்மாவிடம் வந்து அப்பா திட்டினார், அப்பா அடித்தார் என்று குற்றச் சாட்டு கூறினால் பெரும்பாலான அம்மாக்கள் என்ன ஏது என்று கேட்காமல் அப்பாவை திட்டத் தொடங்கி  விடுவார்கள்.

அப்பா என்று இல்லை, பிள்ளை யாரைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டு வந்தாலும், உடனே அவன் யார் பேரில் குற்றம் சொல்கிறானோ அவனை வைய வேண்டியது.

என்னை காடு போ என்று அரசன் சொன்னான் என்று இராமன் சொன்னவுடன் கோசலை வருந்தினாள்.

ஆனால் உடனே இராமனிடம் கேட்டாள் "உன் மேல் அன்பு கொண்ட அரசன் உன்னை கானகம் போகச் சொல்லும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய் " என்று.

இராமன் தவறு செய்திருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும், அவள் கேட்கிறாள்.

உணர்ச்சி வசப் படக் கூடாது. வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் "நீ என்ன செய்தாய் " என்று கேட்கிறாள்.

கோசலையின் வருத்தம் பற்றி கம்பன் கூறுகிறான்

ஏழை ஒருவன் கொஞ்சம் பொன் பெற்று பின் அதை இழந்தால் எப்படி வருந்துவானோ அப்படி வருந்தினாள் என்று கூறுவான்.

பிள்ளை இல்லாமல் பல காலம் இருந்து பெற்ற பிள்ளை, இப்போது இழக்கப் போகிறாள்.

வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்....ஏழைக்கு லாட்டரியில் பாத்து கோடி  பரிசு விழுந்தது. தன்  வறுமை எல்லாம் போய் விட்டது. இனி வாழ்வில் வசந்தம் தான் என்று இருந்தவனுக்கு , பரிசுச் சீட்டு தொலைந்து போனால் எப்படி இருக்கும்  ? அப்படி வருந்தினாள் கோசலை.


பாடல்

‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை? ‘என்று நின்று ஏங்குமால்;
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்கப் பொதிந்தனர் போலவே.


பொருள் 



‘அன்பு இழைத்த மனத்து = உன் மேல் அன்பை இழைத்த

அரசற்கு = அரசனான தசரத சக்ரவர்த்திக்கு 

 நீ = நீ (இராமனே)

என் பிழைத்தனை?  = என்ன பிழை செய்தாய்

என்று = என்று

நின்று = தன்  முன்னால்  நிற்கும்

ஏங்குமால் = இராமனை கண்டு ஏங்கினாள்

முன்பு இழைத்த = முன்பு செய்த பாவத்தால் 

வறுமையின் = வறுமையில், ஏழ்மையில்

முற்றினோர் = வாடுபவர்கள்

பொன் பிழைக்கப் = சேர்த்து வைத்த பொன்னை 

பொதிந்தனர் போலவே. = இழந்தவர்கள் போல (வருந்தினாள் )

கவலையான நேரத்திலும் தெளிவான சிந்தனை.

கம்பன் கற்றுத் தரும் பாடம். படித்துக் கொள்வோம்.




1 comment:

  1. "கண்ணிழந்தார் பெற்று இழந்தார்" என்று ஒரு பாடலில் கேட்டது நினைவுக்கு வருகிறது - "வறியவர் பொன் பெற்று இழந்தார்" என்று படிக்கும் போது. அருமையான உவமை. பிள்ளை இல்லாமல் வருந்தி, யாகத்தால் வந்த பிள்ளை, இப்போது காடு போகப் போகிறான் என்பதை எவ்வளவு அழகாகக் கவிஞர் சொல்லி இருக்கிறார்!

    ReplyDelete