Saturday, November 2, 2013

இராமாயணம் - நோக்கியதும் கண்டதும்

இராமாயணம் - நோக்கியதும் கண்டதும் 


இராமனும் சீதையும் கானகதில் போய் கொண்டிருக்கிறார்கள். நாட்டுப் பிரச்னை இல்லை, வீட்டுப் பிரச்சனை இல்லை. அவனும் அவளும் மட்டும். துணைக்கு இலக்குவன்.

அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கம்பன் காட்டுகிறான்.

அன்புள்ளவர்கள் அருகில் இருந்தால் கானகம் கூட சொர்க்கம் தான்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியில் நிறைய தாமரை மலர்கள் பூத்து இருக்கின்றன. அந்த ஏரியில் சக்கர வாகம் என்ற பறவைகள் தங்களுடைய வளைந்த கழுத்துகளை வளைத்து கண் மூடி உறங்கிக் கொண்டிருகின்றன. அதன் அந்த வளைந்த உருவத்தை பார்க்கும் போது இராமனுக்கு சீதையின் மார்புகளை பார்க்கும் எண்ணம் வருகிறது. அங்கிருந்த பெரிய குன்றுகளை பார்க்கும் போது சீதைக்கு இராமனின் உயர்ந்த தோள்கள் நினைவுக்கு வருகிறது. அந்த தோள்களின் மேல் தன் கண்ணை வைத்தாள் ....

தலைவனும் தலைவியும், தனிமையில் ஒருவரை ஒருவர் கண்டு இரசித்து இன்புற்றதை கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்கிறான்....


பாடல்



நாளம்கொள் நளினப் பள்ளி, 
     நயனங்கள் அமைய, நேமி 
வாளங்கள் உறைவ கண்டு, 
     மங்கைதன் கொங்கை நோக்கும், 
நீளம்கொள் நிலையோன்; மற்றை 
     நேரிழை, நெடியநம்பி 
தோளின்கண் நயனம் வைத்தாள், 

     சுடர்மணித் தடங்கள் கண்டாள்.

பொருள்



நாளம் கொள் = நாளம் என்றால் தண்டு. நீண்ட தண்டினை கொண்ட 

நளினப் = மென்மையான

பள்ளி = படுக்கை. தாமரை மலர்களால் ஆன படுக்கை.


நயனங்கள் = கண்கள்

அமைய = அமைதி உற ...அதாவது தூங்க

நேமி வாளங்கள் = சக்ர வாகம் என்ற ஒரு வகை நீர் பறவை

உறைவ கண்டு = இருப்பதைக் கண்டு

மங்கைதன் கொங்கை நோக்கும்  = சீதையின் மார்பை நோக்கினான் இராமன்

நீளம் கொள் நிலையோன் = நீண்ட வில்லை கொண்ட இராமன்

மற்றை நேரிழை = அப்போது சீதை

நெடிய நம்பி = உயர்ந்த இராமனின்

தோளின் கண் நயனம் வைத்தாள் = தன் பார்வையை அவன் மேல் வைத்தாள்

சுடர்மணித் = ஒளி வீசும்

தடங்கள்  = குன்றுகளை

கண்டாள் = பார்த்தாள் 


1 comment:

  1. என்ன ஒரு அன்னியோன்னியமான நெருக்கம்.

    ஆமாம், ஜொள்ளு பாடல் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டதே?!

    ReplyDelete