Friday, February 28, 2014

நீத்தல் விண்ணப்பம் - நினைப் பிரிந்த வெரு நீர்மையனை

நீத்தல் விண்ணப்பம் - நினைப் பிரிந்த வெரு நீர்மையனை 


குழந்தை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் கழித்து அதற்கு அந்த பொம்மைகளின் மேல் சலிப்பு வரும். அம்மாவை தேடும். அம்மாவைக் காணாவிட்டால் அழும். அம்மாவைக் கண்டவுடன் ஓடி சென்று அவளின் காலைக் கட்டிக்  கொள்ளும். அப்போதுதான் அதற்கு நிம்மதி, சந்தோஷம்.

குழந்தை மட்டுமா ?

நாமும் தான்.

பொம்மைகள் வேறு அவ்வளவுதான்.

நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.  பொங்கி வரும் கங்கை நீரில்  மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கை விட்டு விடாதே.

பாடல்


பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே


கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டு ஆங்கு  நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரு நீர் மடுவுள் மலைச் சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை வானக் கொழு மணியே


பொருள் 

பெரு நீர் = பெரிய நீர். பெருகி வரும் நீர்

அறச் = அற்றுப் போக.

சிறு மீன் = சிறிய மீன்

துவண்டு = நீரின்றி துவண்டு

ஆங்கு = அங்கு துடிப்பதைப் போல

 நினைப் பிரிந்த = உன்னை விட்டுப் பிரிந்த

வெரு = பயம் கொள்ளும் (வெருட்சி = பயம் )

நீர்மையேனை = கொள்ளும் என்னை 

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

வியன் கங்கை பொங்கி = பெரிய கங்கை பொங்கி

வரு நீர் = வெள்ளம் வருகின்ற போது

மடுவுள் = தேங்கிய நீரில்

மலைச்  = மலைத்து நிற்கும்

சிறு தோணி வடிவின் = சிறு தோணி போல

வெள்ளைக் குரு நீர் மதி = வெண்மையான பிறைச் சந்திரனை

பொதியும் = பொதிந்து வைத்து இருக்கும்

சடை = சடையைக் கொண்ட

வானக்  = வானில் உள்ள

கொழு மணியே = சிறந்த மணி போன்றவனே


அது ஏன் பிறை சந்திரன் ?

ஒரு முறை சந்திரன் தவறு செய்தான். நாளும் ஒரு கலையாக தேய்ந்து அழியும்படி  சபிக்கப் பட்டான். 

மூன்றே கலைகள் இருக்கும் போது கடைசியில் சிவனை தஞ்சம் அடைந்தான். 

அவர், அவனை மன்னித்து தன் தலையில் சூடிக் கொண்டார். அவன் அழிவு தவிர்க்கப் பட்டது. 

எவ்வளவு தவறு செய்து இருந்தாலும், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் , பாவ விமோசனம் தருவான் அவன்.

காலில் விழுந்த சந்திரனை தலையில் தூக்கி  வைத்தார்.

இதைச் சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார், நிலவு உலாவிய நீர் மலி வேணியன் என்றார்.  நிலவு உலவுகிரதாம். ஏன் உலவமாட்டான் ? சிவனின் தலையில் அல்லவா இருக்கிறான் ? உலாத்தலுக்கு என்ன குறைச்சல் ? 

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; 
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
 
 

Wednesday, February 26, 2014

நீத்தல் விண்ணப்பம் - புலனால் அரிப்புண்டு

நீத்தல் விண்ணப்பம் - புலனால் அரிப்புண்டு 
நாங்கூழ் புழு என்று ஒரு புழு  உண்டு.மண் புழு  என்று வைத்துக் கொள்ளுங்களேன். அந்த புழுவை எறும்புகள் சூழ்ந்து கொண்டு அதை கடித்து கடித்து தின்னும். அந்த புழுவால் ஓடவும் முடியாது. எறும்புகளை எதிர்த்து போராடவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக, வலி கொண்டு, துடித்து துடித்து சாகும். அந்த எறும்புகளுக்கே இரையாகும்.

அது போல இந்த ஐந்து புலன்கள் என்ற எறும்புகள் நம்மை நாளும் அந்த புழுவை எறும்பு தின்பது போல அரித்து  தின்கின்றன.

என்ன செய்வது என்று அறியாமல் அலைகின்றோம்.

அப்படி தனியாக அலையும் என்னை கை விட்டு விடாதே.

மார்கண்டேயனை அந்த கூற்றுவன் பற்ற வந்த போது உன் மலர் பாதங்களால் கூற்றுவனை உதைத்து அவனை ஒடுங்கப் பண்ணினாய்  நீ.

உணர்வு உள்ளவர்கள் பெறும் பெரியவனே. அடியார்கள் உன்னை விட்டு என்றும் நீங்காத பெருமை உள்ளவனே.

பாடல்

எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க,
உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.


பொருள் 

எறும்பிடை = எறும்புகளிடையே

நாங்கூழ் = நாங்கூழ் என்ற புழு


என = அகப்பட்டது போல

புலனால் அரிப்புண்டு = புலன்களால் நாளும் அரிக்கப்பட்டு

அலந்த = அலைந்த

வெறும் தமியேனை = ஒன்றும் இல்லாத தனிமையானவனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெய்ய கூற்று ஒடுங்க = கொடுமையான கூற்றுவன் ஒடுங்கும்படி

உறும் கடிப் போது = அடக்கிய மணம் பொருந்திய மலரை போன்ற திருவடிகளை உடையவனே . போது என்றால் மலர். கடி என்றால் சிறந்த, உயர்ந்த என்று அர்த்தம்

அவையே = அந்த திருவடிகளே

உணர்வு உற்றவர் = ஆழ்ந்த உணர்வு உள்ளவர்கள்

உம்பர் உம்பர் = உயர்ந்தவர்களுக்கு உயர்ந்தவர்கள்

பெறும் பதமே = அடையும் பதமே

அடியார் பெயராத பெருமையனே = அடியார்கள் உன்னை விட்டு என்றும் விலகாத  பெருமை உடையவனேTuesday, February 25, 2014

பட்டினத்தார் பாடல் - எல்லாம் பகை

பட்டினத்தார் பாடல் - எல்லாம் பகை 


நம் நோக்கத்திற்கு தடையாய் இருப்பவர்கள் எல்லோரும் பகை தானே ?

காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் எல்லோரும் நமக்கு பகையே.

அன்பின் பெயரால், கடமையின் பெயரால், காதலின் பெயரால் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார்கள்.

இவர்களை எல்லாம் கடந்து எப்படி அவனை அடைவது என்று ஏங்குகிறார் பட்டினத்தார்.

ஓர் இரவில் கட்டிய மனைவியை, மகனை, அகன்ற அரசை அனைத்தையும் விடுத்து சென்றான் சித்தார்த்தன்...

மாட மாளிகை, கணக்கில் அடங்கா செல்வம் என்று அனைத்தையும் காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே என்ற ஒரு வாக்கியம் கண்டவுடன் விட்டு விட்டு சென்றார் பட்டினத்தார்...

அவரின் பாடல்

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே

பொருள்

தாயும்பகை = தாயும் பகை. தாய் பகை அல்ல, தாயும் பகை. உலகிலேயே நம் மீது பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுபவர் தாய்தான்.

தாயினும் சாலப் பரிந்து என்பார் மணிவாசகர்.

அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே என்பார் வள்ளலார்.

அப்பன் நீ , அம்மை நீ என்பார் அப்பர்.

அந்தத் தாயும் பகை என்கிறார் பட்டினத்தார்.

கொண்ட பெண்டீர் பெரும்பகை = மனைவி பெரும் பகை. ஒரு புறம் அவளின் சுயநலம்.  இன்னொரும் புறம் பிள்ளைகளை காக்க வேண்டுமே என்ற எண்ணம். இவற்றால் கணவனின் நேரத்தை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொள்ளும் மனைவி பெரும் பகை. பட்டினத்தார் சொல்கிறார்.

தன்னுடைய சேயும்பகை = பிள்ளைகளும் பகை. அவர்கள் பெரியவர்களாக ஆகும் வரை நம்மை ஒரு விதம் அசைய விட மாட்டார்கள். வாழ்வில் பெரும் பகுதி அவர்களை ஆளாக்குவதிலேயே போய் விடுகிறது.

யுறவோரும் பகை = உறவோரும் பகை.

யிச்செகமும் பகை = இச் செகமும் பகை. இந்த உலகமே பகை

ஆயும் பொழுதில் = ஆராயும் பொழுதில். உங்களுக்கு இது எல்லாம் பகை என்று தெரியாவிட்டால், இன்னும் சரியாக ஆராயவில்லை என்று அர்த்தம். ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். அது எப்படி தாய், மனைவி, பிள்ளைகள், உறவு, உலகம் எல்லாம் பகையாக முடியும் என்று கேட்கிறீர்களா ? 

அருஞ்செல்வம் நீங்கில் = அருமையான செல்வம் நீங்கினால் எல்லோரும் பகையே. செல்வம் இருக்கும்  வரை தான் அவர்களின் அன்பும், நட்பும், உறவும், காதலும். செல்வம் நீங்கினால் உண்மை தெரியும்.  நாலு காசு சம்பாதிக்காதவனை மனைவியும், பிள்ளைகளும், உறவும் எப்படி மதிக்கும் ? அவன் உறவு யாருக்கு வேண்டும் ? 

இவர்கள் அனைவருக்கும் வேண்டியது நீங்கள் அல்ல, உங்கள் செல்வம்.

இக்காதலினாற் தோயுநெஞ்சே = இவர்கள் மேல் காதலினால் நாளும் தோய்ந்து கிடக்கும் நெஞ்சே

மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே = திரு மருதுரீல் வாழும் சிவனின் பொன் போன்ற பாதங்களே விடுதலை தரும்.

ஜீரணிக்க கொஞ்சம் கடினம்தான். அது எப்படி என்று சண்டை பிடிக்கத்தான் தோன்றும். "ஆயுங்கால்"....ஆராயுங்கள்.


Monday, February 24, 2014

பட்டினத்தார் பாடல் - அல்லல் அற்று என்று இருப்பேன் ?

பட்டினத்தார் பாடல் - அல்லல் அற்று என்று இருப்பேன் ?


வேலைக்குப் போனால் மேலதிகாரி சொல்வதை கேட்டு தலை ஆட்ட வேண்டும். பல்லைக் காட்ட வேண்டும். அவர் சொல்வது சரியோ, கேட்டுக் கொள்ள வேண்டும்.

தொழில் செய்யலாம் என்றால் வாடிக்கையாளர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதர்க்கெல்லாம் தலை ஆட்ட வேண்டும்.

அரசாங்க அதிகாரிகளின் கெடு பிடி...

இப்படி நாளும் பலரின் நெருக்கடிகள். நிம்மதியாக எங்கே இருக்க முடிகிறது.

இந்த தொல்லைகள், பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாமல் என்று இருப்பேன் என்று அங்கலாய்கிறார் பட்டினத்தார்.....

பாடல்

செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே

பொருள்

செல்வரைப் = செல்வந்தர்களை

பின்சென்று = பின்னால் சென்று

சங்கடம் பேசித் = மனதுக்கு பிடிக்காததை கடமைக்கு பேசி

தினந்தினமும் = தினமும்

பல்லினைக் காட்டிப் = பல்லினைக் காட்டி

பரிதவியாமற் = பறிதவிக்காமல்

பரமானந்தத்தின் = மிகப் பெரிய ஆனந்தத்தின்

எல்லையிற் புக்கிட = எல்லையில் புகுந்திட

வேகாந்தமாய் = ஏகாந்தமாய்

எனக்காம் இடத்தே = எனக்கு ஆகும் இடத்தில்


அல்லல் அற்று = துன்பங்கள் அற்று

என்றிருப் பேனத்தனே = என்று இருப்பேன் அத்தனே

 கயிலாயத்தனே = கைலாய மலையில் இருப்பவனே


நீத்தல் விண்ணப்பம் - புலன் நின் கண் போதல் ஒட்டா

நீத்தல் விண்ணப்பம் - புலன் நின் கண் போதல் ஒட்டா 


நம் புலன்கள் நம்மிலிருந்து வெளியே செல்வது மட்டும் அல்ல, வெளியில் இருப்பவற்றை உள்ளே இழுத்துக் கொண்டு வருகின்றன. நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்பைப் போல புலன்கள் நம் மேல் சதா சர்வ காலமும் பற்றி ஏறி நம்மை காலி செய்கின்றன.

இந்த புலன்களால் என்ன செய்கிறோம் ?

இல்லாத பொய்களின் பின்னால்  போகிறோம்.உண்மையானவற்றை விட்டு விடுகிறோம்.

ஆசை. ஆசைப் பட்டதை அடைந்தவுடன் ஒரு ஆரவாரம். கிடைக்க வில்லை என்றால் சோகம். இப்படி புலன்களால் அலைகிறோம் .

அது மட்டும் அல்ல, இந்த புலன்கள் தப்பித் தவறி கூட நம்மை இறைவன் பக்கம் திருப்பாது. எப்போதும் சின்ன சின்ன சந்தோஷங்களின் பின்னேயே நம்மை விரட்டிக் கொண்டு இருக்கும்.


பாடல்


உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்? வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா,
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே.


பொருள் 

உள்ளனவே நிற்க =  நிலையாக உள்ளவை ஒரு புறம் நிற்க

இல்லன செய்யும் = நிலை இல்லாதவற்றை செய்யும்

மையல் துழனி = ஆசை மற்று ஆரவாரம்

வெள்ளனலேனை = வெண்மை இல்லதாவனை. வெண்மை என்றால் தூய்மை. தூய்மை இல்லாதவனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வியன் மாத் தடக் கைப் = பெரிய கை

பொள்ளல் = துளை உள்ள

நல் வேழத்து = நல்ல யானையின்

உரியாய் = தோலை உரித்து அதை உடையாக கொண்டவனே

புலன் = என் புலன்கள்

நின்கண் = உன்னிடம்

போதல் ஒட்டா = செல்வதற்கு விடாது

மெள்ளெனவே மொய்க்கும் = மெள்ள மெள்ள மொய்க்கும்

நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே = நெய்க் குடத்தை மொய்க்கும் எறும்பைப் போல

குடம்  பெரிது.எறும்பு  சின்னது.இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக எறும்புகள் குட நெய்யையும் காலி பண்ணி விடுவது போல புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை காலி செய்து விடுகின்றன.

நெய் குடம் பற்றி ஆழவார் பாடல் ஒன்று இந்த ப்ளாகில் இருக்கிறது. தேடிக் கண்டு பிடியுங்கள்.....


Sunday, February 23, 2014

நீத்தல் விண்ணப்பம் - பிழையே பெருக்கி

நீத்தல் விண்ணப்பம் - பிழையே பெருக்கி 


எதை கொடுத்தாலும் அதை வைத்து மேலும் மேலும் பிழை செய்வது மனித இயல்பு. கிடைத்ததை வைத்து நல்லது செய்வது கிடையாது. மேலும் மேலும்  .தவறு செய்வது.

அது  .மட்டும் அல்ல. நாளும் நம் அன்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. எத்தனை பேரிடம் அன்பு செய்கிறோம் ? எவ்வளவு அன்பு செய்கிறோம் ?

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்  வள்ளலார்.அது அவரின் அன்பின் வீச்சு.

நாம் , நமக்கு நெருங்கியவர்களைக் கூட   முழுவதும் அன்பு செய்கிறோமா ?

இறைவா, நீ தந்ததை எல்லாம் பெற்றுக் கொண்டு, நாளும் தவறுகளையே செய்து, என் அன்பை சுருக்கி வாழும் இந்த வெற்று அடியேனை விட்டு விடாதே. நீ என்னை கை விட்டு விட்டால் நான் கெட்டுப் போவேன். உன்னை விட்டால் என்னை தாங்குபவர் யாரும் இல்லை. என் வாழ்வின் முதலே. எனக்கு என்று உள்ளவன் நீ மட்டும் தான்.....

பாடல்

பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.


பொருள் 

பெற்றது கொண்டு = என்னவெல்லாம் கிடைக்குமோ அதை எல்லாம் பெற்றுக் கொண்டு

பிழையே பெருக்கி = நாளும் பிழைகளை பெருக்கி

சுருக்கும் அன்பின் = அன்பினைச் சுருக்கி

வெற்று அடியேனை = ஒன்றும் இல்லாத வெறுமையான அடியேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா?

விடிலோ = நீ என்னை கை விட்டு விட்டால்

கெடுவேன் = நான் கெட்டுப் போவேன்

மற்று = மேலும்

அடியேன் தன்னை = அடியவனாகிய என்னை

தாங்குநர் இல்லை = தாங்குபவர் யாரும் இல்லை

என் வாழ் முதலே = என் வாழ்வின் ஆதாரமான முதல் பொருளே

உற்று = துன்பங்களை உற்று , அனுபவித்து

அடியேன் = அடியவனாகிய நான்

மிகத் தேறி நின்றேன் = இந்த உலகம் இன்னது என்று அறிந்து தெளிந்து நின்றேன்

எனக்கு உள்ளவனே = எனக்கென்று உள்ளவன் நீயே 

எல்லாம் முடியாவிட்டாலும் அன்பை மட்டுமாவது பெருக்கிப் பாருங்கள். 


Saturday, February 22, 2014

நாச்சியார் திருமொழி - இது ஒரு பெருமையா ?

நாச்சியார் திருமொழி - இது ஒரு பெருமையா ?

அவனைக் காணாமல் அவளுக்கு துக்கம்  பொங்குகிறது.யாரிடம் சொல்வாள் அவள் ?

மேகத்தினிடம் முறை இடுகிறாள்.

வானிலே கம்பளம் விரித்தது போல இருக்கும் மேகங்களே. என் திருமால் அங்கு வந்தானா ? என் கண்ணீர் என் முலையின் மேல் விழுந்து நான் சோர்ந்து போகின்றேன். நான் அப்படி சோர்ந்து போவது அவனுக்கு ஒரு பெருமையா ?

பாடல்

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பொருள்

விண்ணீல = விண் + நீல = நீல நிற வானத்தில்

மேலாப்பு = மேல் ஆடை

விரித்தாற்போல் மேகங்காள் = விரித்ததைப் போல உள்ள மேகங்களே

தெண்ணீர் = தெளிந்த தீர்த்தங்கள்

பாய் = பாய்கின்ற

வேங்கடத்து = திருவங்கடத்தில் உள்ள 

என் திருமாலும் போந்தானே = என் திருமாலும் போனானே

கண்ணீர்கள் = கண்ணீர்கள்

முலைக்குவட்டில் = முலையின் நுனியில்

 துளி சோரச் = துளியாக விழ

சோர்வேனை = சோர்ந்து இருக்கும் என்னை

பெண்ணீர்மை யீடழிக்கும் = பெண்ணின் குணங்களை இப்படி அழிப்பது

இதுதமக்கோர் பெருமையே? = இது அவனுக்கு ஒரு பெருமையா ?

குறுந்தொகை - சொல்லோ, பிறவாயினவே

குறுந்தொகை - சொல்லோ, பிறவாயினவே 
பெண்ணுக்கு காதல் சங்க காலம் தொட்டு இன்று வரை சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

குறுந்தொகைப் பெண்ணின் மனம் படும் பாட்டை இந்த பாடல் விளக்குகிறது.

காதலன் போய் விட்டான். என்ன ஆனான் என்று தெரியவில்லை.

 ஏதோ சொல்லிவிட்டு போய் இருக்கிறான். அந்த சொல்லை அவன்  காக்கவில்லை.

அது என்ன சொல் என்று பாடல் சொல்ல வில்லை. நம் கற்பனைக்கு விட்டு விடுகிறது.

ஒரு வேளை "ஒரு மாதத்தில் வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பானோ ?"

தெரியாது.அப்படி எதுவாவது இருக்கலாம்.

அவள், தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

"என் உடல் வருத்தத்தில் மெலிகிறது. என் வளையல்கள் நெகிழ்ந்து விழுகின்றன. இந்த நோய் என் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தால் நான் எப்படி உயிர் வாழ்வேன். இந்த நண்டுகளைப் பார். இங்கு விளையாடும் பெண்கள் அதைப் பிடித்து விளையாட நினைக்கிறார்கள். அவர்களுக்கு பயந்து அது கடலை நோக்கி ஓடுகிறது. நல்ல வேளை , கடல் அந்த நண்டை தனக்குள் இழுத்துக் கொண்டு அதன் துயர் தீர்க்கிறது. அவனோ சொன்ன சொல் மாறி விட்டது"ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்      
நோய்மலி வருத்த மன்னை யறியின்  
உளெனோ வாழி தோழி விளியா  
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை  
ஓரை மகளி ரோராங் காட்ட  
ஆய்ந்த வலவன் றுன்புறு துனைபரி  
ஓங்குவரல் விரிதிரை களையும்  
துறைவன் சொல்லோ பிறவா யினவே. 

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை 
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.

எல்லோரும் அறிந்த குறள் தான். தெய்வத்தை வணங்க மாட்டாள். கொண்ட கணவனை வணங்கி எழுவாள். அவள், பெய் என்றால் மழை பெய்யும். 

வள்ளுவர் இவ்வளவு சாதரணமாக ஒரு குறளை எழுத மாட்டாரே. இதில் ஆழமான அர்த்தம் எதுவும் இருக்குமா ?

தொழுது எழுவாள் - அது எப்படி முடியும் ? எழுந்து தொழுவாள் என்று தானே இருக்க வேண்டும். தூக்கத்தில் இருந்து எழுந்து, பின் தொழ முடியும். தொழுதுகொண்டே எப்படி எழ முடியும்? 

ஒரு செயலை நாம் நம் உடலுக்கு வழக்கப் படுத்தி விட்டால் பின் அது நாம் நினைக்காமலேயே, சொல்லாமலேயே செய்து விடும். 

சுந்தர மூர்த்தி நாயனார் தன் நாவுக்கு நமச்சிவாய என்ற மந்திரத்தை பழக்கப் படுத்தி  வைத்தார்.

"சொல்லு நா நமச்சிவாயவே"

நான் மறந்தால் கூட என் நாக்கு மறக்காதுஎன்றார் 

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.நான் மறந்தாலும் என் நா மறக்காது  என்கிறார்.

அது போல் அவளுக்கு அவன் மேல் அவ்வளவு மதிப்பு, மரியாதை. அந்த மதிப்பும் மரியாதையும்  அவனைக் கண்டபோது மட்டும் அல்ல, காணாத போதும்   அது இருக்கும். தூக்கத்தில் கூட அந்த மரியாதை இருக்கும். எனவே, துயில்  எழும் போதே வணங்கி எழுவாளாம். தொழுது எழுவாள். 

தெய்வத்தை தொழ மாட்டாள் ஆனால் கணவனை தொழுது எழுவாள் என்றால் அவ்வளவு சரியாக இல்லையே. கடவுளை விட மனிதன் உயர்வா ? வள்ளுவர் அப்படி எழுதுவாரா ?

பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்...

தெய்வந் தொழுதற்கு மனந் தெளிவது துயிலெழுங் காலத்தாகலின் 'தொழுதெழுவா' ளென்றார். 

தெய்வத்தை தொழுவதற்கு மனம் தெளிவாக இருக்க வேண்டும். தூங்கி எழும் காலத்தில் அவ்வளவு தெளிவு இருக்காது. எனவே முதலில் கணவனை தொழுது எழுந்து , பின் நீராடி, பூஜை செய்து கடவுளை பின் தொழுவாள் என்று அர்த்தம். 

பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை எவ்வளவு இனிமையானது ? நமக்கு  வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவு வேண்டிய இடத்தில் பெய்யும் மழை எவ்வளவு சுகமானது ?

கணவனை தொழுது எழும் பெண் அப்படிப் பட்ட மழைப் போன்றவள். 

வெள்ளமாக வந்து ஊரைக்  கெடுக்காது.

காலத்தில் வரமால் இருந்து பயிரைக் கருக்காது. 

பெய் என்று சொன்னால் பெய்யும் மழை போன்றவள் அந்தப் பெண்.நீத்தல் விண்ணப்பம் - உடம்பையும், எலும்பையும் உருக்கி

நீத்தல் விண்ணப்பம் - உடம்பையும், எலும்பையும் உருக்கி 
இரண்டு யானைகள் சண்டை போடுகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த சண்டையில் அங்கு இருக்கும் சின்ன சின்ன செடிகள் என்ன ஆகும் ?

இரண்டு அல்ல, ஐந்து யானைகள் சண்டை போடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் சின்ன செடிகளின் நிலை என்ன ஆகும் ?

அது போல இந்த ஐந்து புலன்களும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் அகப்பட்ட குறுஞ் செடிகளாக நாம் கிடந்து அல்லல் படுகிறோம்.

ஒன்று நல்ல ருசியான உணவு வேண்டும் என்கிறது.
ஒன்று உடை வேண்டும், இசை வேண்டும், வீடு வாசல் வேண்டும், உடல் சுகம் வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று நம்மை பாடாய் படுத்துகிறது. அவைகளுக்கு தீனி போட நாம் கிடந்து அழைக்கிறோம்.


அப்படி கிடந்து அல்லல் படும் என்னை கை விட்டு விடாதே. என் மனதினில் இன்பத்தை வார்த்தவனே, என் உடலையும், எலும்பையும் உருக்கியவனே என்று உருகுகிறார்  மணிவாசகர்.

பாடல்

ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத்
தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து,
ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.


பொருள் 

ஆனை = யானைகள்

வெம் போரில் = ஈடுபட்ட பெரிய கொடிய போரில்

குறும் தூறு = குற்றுச் செடிகள்

எனப்  = என

புலனால் = புலன்களால்

அலைப்பு உண்டேனை = அலைக்கழிக்கப் பட்ட என்னை

எந்தாய் = என் தந்தையே

விட்டிடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வினையேன் மனத்துத் = வினை உள்ள என் மனதில்

தேனையும் = தேனையும்

பாலையும் = பாலையும்

கன்னலையும் = கரும்பின் சாற்றையும்

அமுதத்தையும்  ஒத்து  = அமுதம் போல சேர்த்து

ஊனையும் = ஏன் உடலையும்

என்பினையும் = எலும்பையும்

 உருக்காநின்ற = உருக்கி நின்ற

ஒண்மையனே = ஒளி மயமானவனே


இறைவனை தனிமையில் சிந்தித்தால் இனிமை வரும். அந்த இனிப்புக்கு முன்னால் மற்ற இனிப்புகள் எல்லாம் கசந்து போகும்.

"....மெய் அன்பினால் மெள்ள மெள்ள உள்ள...கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து  அறக்கைத்ததுவே" என்பார் அருணகிரிநாதர்.Friday, February 21, 2014

நீத்தல் விண்ணப்பம் - கொம்பர் இல்லா கொடி போல்

நீத்தல் விண்ணப்பம் - கொம்பர் இல்லா கொடி போல் 


 

நமக்குத் துணை யார் ?

முதலில் பெற்றோரை பற்றி இருக்கிறோம். பின் உடன் பிறப்புகள், நண்பர்கள், துணைவன்/துணைவி, பிள்ளைகள் என்று இது விரிந்து கொண்டே போகிறது.

இவர்கள் எல்லாம் நமக்கு சிறந்த பற்றுகோல்களா ? இல்லை.

அவர்களே நமக்குத் துணையாவார் யார் என்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆகாய விமானத்தில் இருந்து தவறி விழுந்தவன் , அவன் கூடவே விழுந்த ஒரு காகிதத்தை துணைக்கு பற்றிக் கொண்ட மாதிரி.


 ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே 
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே! 

என்பார் பட்டினத்தார்.

எது நிரந்தரமோ அதை பற்றிக் கொள்ள வேண்டும்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்பது அபிராமி பட்டர் வாக்கு.  அபிராமியை துணையாகக் கொண்டார் பட்டர்.


ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

உன் அருளைப் பெற ஒரு ஆதாரமும் இல்லாமல் தவிக்கிறேன் என்றார் அருணகிரி.


பற்றிப் படர ஒரு கொழு கொம்பு இல்லா கொடி போலத் தவிக்கிறேன். என்னை கை விட்டு  விடாதே. விண்ணவர்களும் அறியாத நீ, பஞ்ச பூதங்களும் ஆனவன் நீ என்று உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை.

பாடல்

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.

பொருள் 

கொம்பர் = பற்றி படர ஒரு கொம்பு

இல்லாக் கொடிபோல் = இல்லாத ஒரு கொடி போல

அலமந்தனன் = வழி தெரியாமல் அலைந்தேன்

 கோமளமே = இளமையானவனே

வெம்புகின்றேனை = வெம்புகின்ற என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

விண்ணவர் = தேவர்களும்

நண்ணுகில்லா = அணுக முடியாத இடத்தில்

உம்பர் = உயர்ந்த இடத்தில்
உள்ளாய் = உள்ளாய்

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

அம்பரமே = வானே

நிலனே = நிலமே

அனல் = தீயே

காலொடு = காற்றே

அப்பு = நீரே

ஆனவனே = ஆனவனே


Thursday, February 20, 2014

திருக்குறள் - நாணும் மறந்தேன்

திருக்குறள் - நாணும் மறந்தேன் 


பெண்ணின் மனதை, அவளின் காதலை, அவளின் நாணத்தை வள்ளுவரை போல இன்னொரு கவிஞரால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

வள்ளுவர் குறள் ஒரு பக்கம் என்றால் பரிமேல் அழகரின் உரை இன்னொரு பக்கம்  மெருகூட்டுகிறது.

அவளும் எவ்வளவு நாள் தான் மறைத்து மறைத்து வைப்பாள் தன் காதலை. நாளும் நாளும் அது மனதில் பெருக்கிக் கொண்டே வருகிறது. அவள் தான் என்ன செய்வாள் பாவம். தன் தோழியிடம் தன் காதலைச் சொல்லுகிறாள். வெட்கம் தான், நாணம் தான், என்ன செய்ய. சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. பாழாய்ப்போன இந்த மனம் படுத்தும் பாடு.

நாணத்தையும் மறந்து விட்டேன். அவரை மறக்க முடியாத இந்த மட நெஞ்சினால் என்று வெட்கப் படுகிறாள்.


பாடல்


நாணும் மறந்தேன்-அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு.

பொருள்

நாணும் மறந்தேன் = நாணத்தை மறந்தேன் என்று சொல்லவில்லை. நாணத்தை"யும்" மறந்தேன் என்கிறாள். அப்படியென்றால் நாணத்தோடு கூட அச்சம், மடம் , பயிர்ப்பு என்ற பெண்மைக்கே உரிய குணங்களையும் மறந்தேன் என்று பொருள். 

அவர் மறக்கல்லா = அவரை மறக்க முடியாத 

என் = என்னுடைய

மாணா = மாட்சிமை இல்லாத

மட நெஞ்சின் பட்டு = மட நெஞ்சோடு சேர்ந்து.

இந்த பாடலுக்கு பரிமேல் அழகரின் உரை இதன் சிறப்பை எங்கோ கொண்டு செல்லுகிறது.

பரிமேல் அழகரின் உரை சற்று கடினமானது. கொஞ்சம் எளிமை படுத்தி  தருகிறேன்.

நாணம் என்றால் என்ன ?  வெட்கம்.

வெட்கம் என்றால் ?

முதன் முதலில் ஒரு பெண், தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆணோடு பேசும்போது ,  பழகும் போது உண்டாகும் ஒரு வித கூச்சம் கலந்த பயம் என்று  சொல்லலாம். ஆனால் அது நாள் ஆக நாள் ஆக குறைய வேண்டும் அல்லவா ? அதுதான் இல்லை என்கிறார் பரிமேல் அழகர். ஒவ்வொரு முறை பழகும் போதும்  அந்த உணர்ச்சி இருந்து கொண்டே  இருக்குமாம்.


பரிமேல் அழகரின் உரை

நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல்,

எவ்வளவு நாள் கூடி வாழ்ந்தாலும், ஏதோ அன்றைக்குத் தான் முதன் முதலாக பார்ப்பவர் போல புலன்களை ஒடுக்கி இருத்தல் என்கிறார்.  அடக்கம்.கூச்சம். பயம். என்ற அனைத்தின் கலவை இந்த நாணம்.மடமை என்றால் ஏதோ முட்டாள் தனம் என்று நினைத்துக்  கொண்டிருக்கிறோம்.பெண்களுக்கு இயல்பாகவே கொஞ்சம் மடத்தனம் இருக்கும் என்று ஒரு நினைப்பு  நமக்கு.

பரிமேல் அழகர் அதற்கு விளக்கம்  தருகிறார்.

மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல்.

புரிகிறதா ? கொஞ்சம் அடர்த்தியான வாக்கியம்.

எளிமைப் படுத்துவோம்.

பெண்கள், தங்கள்  காதலனோ,கணவனோ இல்லாத போது  அல்லது வரத் தாமதம் ஆனால் அவர்களையே நினைத்துக்  கொண்டிருப்பார்கள்.என்ன இன்னும் காணமே, இப்ப வர்ற நேரம்  தானே, ஒரு வேளை ஏதாவது பிரச்சனையா , அவருக்கு ஆபத்தா என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்  அவர்களுக்கு. வரட்டும் , இன்னைக்கு பேசிக்கிறேன் என்று கொப்பிப்பார்கல்.

அந்த கணவனோ, காதலனோ வந்து விட்டால் பின் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் சிறிது நேரத்தில்.


கண்டவழி நினைந்து = பார்க்கும் போது நினைத்து

காணாதவழி மறக்குந் = பார்க்காத போது மறக்கும் 

தவற்றைக் = அந்தத் தவற்றை

காணாவழி நினைந்து  = காணாத போது நினைத்து

கண்டவழி மறத்தல் =   காண்கின்ற போது  மறந்து விடுவார்கள்.

எழுதும் போது கோல் காணாக் கண் போல் என்பார் வள்ளுவர் மற்றொரு இடத்தில்இதைப் படிக்கும் ஆண்களுக்கு, இன்னும் அர்த்தம் புரியவில்லை என்றால் உங்கள்   ,காதலியிடமோ, மனைவியிடமோ இதை வாசித்துக் காட்டி சரிதானா என்று  கேளுங்கள். அவர்களின் உதட்டோரம் மலரும் ஒரு புன்னகை, இது சரிதான் என்பதற்கு ஒரு அத்தாட்சி முத்திரை.
நீத்தல் விண்ணப்பம் - வினைக் காட்டை எரிக்க

நீத்தல் விண்ணப்பம் - வினைக் காட்டை எரிக்க 
நம் வினைகளை நாம் தான் செய்கிறோம். நாமே செய்வதில்லை. தூண்டப் பட்டு செய்கிறோம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள், சமுதாயம், நம் துணைவன்/துணைவி என்று ஆயிரம் பேரால் தூண்டப் பட்டு வினைகளை செய்கிறோம்.

பல வினைகள் ஆராய்ந்து  .இல்லை. அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு ஏதேதோ செய்து கொண்டு போகிறோம்.

நம் வினைகள் தோட்டம் போல அல்ல, காடு போல வளர்ந்து கிடக்கின்றன. இந்த காட்டை வெட்டி சீர் படுத்த முடியாது. இதை மாற்ற வேண்டும் என்றால் மொத்தமாக கொளுத்த வேண்டும். எரிந்து கரிந்து சாம்பல் ஆன பின், முதலில் இருந்து சரியாக தோட்டம் வளர்க்கலாம்.

இவ்வளவு பெரிய காட்டை எப்படி எரிப்பது. என்னால் ஆகாத காரியம். இறைவா, நீயே என் வல் வினைக் காட்டை எரித்து விடு. உன்னால் முடியாதது எதுவும் இல்லை. கஜமுகாசுரன் என்ற கொடிய யானையை கொன்று அதன் தோலை உரித்து போர்த்துக் கொண்டவன் ஆயிற்றே நீ. உன்னால் முடியாதா ?

என்கிறார் மணிவாசகர்....

பாடல்


மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க, என்தன்னை விடுதி கண்டாய்?என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே


பொருள் 


மடங்க = அழிந்து போக 

என் வல் வினைக் காட்டை = என்னுடைய வினையான காட்டினை 

நின் = உன்னுடைய 

மன் = நிலைத்த 

அருள் தீக் கொளுவும் = அருளினால் தீயிட்டு கொளுத்தவும் 

விடங்க = வீரம் உள்ளவனே 

என்தன்னை = என்னை 

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே 

என் பிறவியை = என் பிறவியை 

வேரொடும் களைந்து = வேரோடு களைந்து. அதாவது மீண்டும் முளைக்காமல்  

ஆண்டுகொள் = என்னை ஆட்கொள் 

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

கொடும்  = கொடுமையான 

கரிக்குன்று = கருமையான குன்றைப் போல் இருக்கும் யானையை 

உரித்து = அதன் தோலை உரித்து 

அஞ்சுவித்தாய் = அச்சத்தை அவித்தாய் 

வஞ்சிக் கொம்பினையே = வஞ்சிக் கொடி  போன்ற உமை அம்மையின்

 

Wednesday, February 19, 2014

நாலடியார் - பேரும் பிறிதாகி தீர்த்தமாம்

நாலடியார் - பேரும் பிறிதாகி தீர்த்தமாம் 


ஊருக்குள் சாக்கடை இருக்கும். கழிவு நீர் எல்லாம் அதன் வழியாகச் செல்லும். கிட்ட போக  முடியாது.துர் நாற்றம்  வீசும்.

அந்த சாக்கடை சென்று கங்கையில் கலக்கும். பின் அந்த கங்கை கடலில் சேரும்.

அப்படி கங்கையில் சேர்ந்த பின் , கடலில் சேர்ந்த பின் அது தீர்த்தம் என்றே அறியப்படும். கங்கை எது, கடல் எது, சாக்கடை எது என்று தெரியாது.

அது போல , நாம் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் நல்லவர்களோடு சேரும் போது , அவர்களோடு பழகும் போது நம் குறைகள் மறைந்து நாமும் தீர்த்தமாவோம்.

அவர்கள் சொல்வது நம் காதில் விழும். அவர்கள் செய்யும் செயல்கள் நம்மையும் அவர்கள் போல இருக்கத் தூண்டும். அல்லவை விலகி நல்லவை வந்து சேரும்.

எனவே நல்லவர்கள் மத்தியில் இருக்க வேண்டும்.

பாடல்


ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓரும்
குல மாட்சியில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து.

பொருள் 

ஊரங்கணநீர் = ஊர் + அங்கண + நீர் = அங்கணம் என்றால் கழிவு, சுத்தம் செய்யும் இடம். அப்படி வரும் கழிவு நீர்

உரவு நீர் = வலிமையான நீர். கடல் என்று கொள்ளலாம். அல்லது கங்கை போன்ற பாவம் தீர்க்கும் நீர் என்றும் கொள்ளலாம்.

சேர்ந்தக்கால் = சேர்ந்த பின்

பேரும் பிறிதாகித் = சாக்கடை என்ற பேர் மாறி 

தீர்த்தமாம் = தீர்த்தம் என்று அறியப்படும் 

ஓரும் = மதிக்கத்தக்க 

குல மாட்சியில்லாரும் = குல மாட்சி இல்லாரும். குலப் பெருமை இல்லாதவர்களும்

குன்றுபோல் நிற்பர் = குன்றைப் போல உயர்ந்து நிற்பார்கள். உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக உயர்ந்து நிற்பார்கள். 

நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து = நல்ல குணம் உள்ள நல்லவர்களை சார்ந்து இருக்கும்போது

சாக்கடை தீர்த்தம் ஆகும் என்றால், நாம் நல்லவர்களாக மாட்டோமா ?

உங்களைச் சுற்றி உள்ளவர்கள், நீங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று ஒரு முறை  நினைத்துப் பாருங்கள்.


Tuesday, February 18, 2014

நீத்தல் விண்ணப்பம் - ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை

நீத்தல் விண்ணப்பம் - ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை
 நமக்கு ஒரு பொருள் சொந்தம் என்றால் அதை நாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் அல்லவா ?

அதை அனுபவிக்கலாம், விக்கலாம், அடமானம் வைக்கலாம்...நம் இஷ்டம் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்.

தன்னையே இறைவனுக்கு கொடுத்துவிட்ட மாணிக்க வாசகர்  சொல்கிறார்.

"இனி நான் உன் பொருள். என்னை நீ ஆண்டுகொள், விற்றுக் கொள், அடமானம் வை...என்ன வேண்டுமானாலும் செய்து கொள். இந்த பிறவிப் பிணிக்கு மருந்து போன்றவனே, என்னை கை விட்டு விடாதே " என்று கெஞ்சுகிறார்.

பாடல்

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.


பொருள் 

இருந்து என்னை = இங்கிருந்து என்னை

ஆண்டுகொள் = ஆட்கொள்

விற்றுக்கொள் = விற்றுக் கொள்

ஒற்றி வை = ஒத்தி வைப்பது என்றால் அடமானம் வைப்பது

என்னின் அல்லால் = இது போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்

விருந்தினனேனை = விருந்து என்றால் எப்பவாவது வருவது. அடிக்கடி வருவது விருந்து அல்ல. நாம் பக்தி செய்வது, கோவிலுக்குப் போவது எல்லாம் எப்பவாவது தானே. எனவே விருந்தினேனை  என்றார்.


(இராமாயணத்தில் இராம இலக்குவனர்களை ஜனகனுக்கு அறிமுகம் செய்யும் போது "விருந்தினர்" என்று அறிமுகம் செய்வான். இவர்கள் வைகுந்தத்தில் இருப்பவர்கள். எப்பவாவது இந்தப் பக்கம் வருவார்கள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில்


இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி,
அருந் தவனை அடி வணங்கி, 'யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்!' என்ன,
'விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி காணிய வந்தார்; வில்லும் காண்பார்;

பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்' என, அவர் தகைமை பேசலுற்றான்)


 விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

 மிக்க நஞ்சு = ஆலகால விஷத்தை

அமுதா அருந்தினனே= அமுதம் போல அருந்தியவனே. நான் கெட்டவன் தான். ஆனால் நீ தான் விஷத்தையே அமுதமாக ஏற்றுக் கொண்டவன் ஆயிற்றே. என்னையும் ஏற்றுக் கொள்.

 மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

மருந்தினனே = மருந்து போன்றவனே

பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே = பிறவி என்னும் பிணியில் கிடந்து உழல்பவர்கே

நோய், பிணி என்று இரண்டு சொல் உண்டு.

நோய் வந்தால் போய் விடும்.

பிணி போகாது.

பசிப் பிணி என்பார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

பிறவியும் ஒரு பிணி தான். மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். அந்த பிறவிப் பிணிக்கு மருந்து அவன்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் 
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே! 

பணியேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.

என்பார் அபிராமி பட்டர்


Monday, February 17, 2014

நீத்தல் விண்ணப்பம் - மெய்ம்மையார் விழுங்கும் அருளே

நீத்தல் விண்ணப்பம் - மெய்ம்மையார் விழுங்கும் அருளேமுந்தைய பாடலை பொருளே என்று முடித்தார். இந்த பாடலை பொருளே என்று  ஆரம்பிக்கிறார்.


"பொருளே, நான் வேறு எங்கு போவேன் உன்னை விட்டு. உன்னை விட்டால் எனக்கு ஒரு புகலிடம் இல்லை. உன் புகழை இகழ்பவர்களுக்கு அச்சம் தருபவனே, என்னை விட்டு விடாதே. உண்மையானவர்கள் விழுங்கும் அருளே. உத்திர கோச மங்கைக்கு அரசே, இருளே. வெளியே. இம்மை மறுமை என்று இரண்டுமாய் இருப்பவனே. "

பாடல்

பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

பொருள் 

பொருளே = பொருளே. "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே"

தமியேன் = தனியனாகிய  நான்

புகல் இடமே = புகல் அடையும் இடமே

நின் புகழ் இகழ்வார் = உன் புகழை இகழ்பவர்களுக்கு

வெருளே = அச்சமே

எனை விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விடாதே

மெய்ம்மையார் = உண்மையானவர்கள்

விழுங்கும் அருளே = விழுங்கும் அருளே

அணி பொழில் = அழகிய சோலைகள் நிறைந்த

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

இருளே = இருளே

வெளியே = வெளிச்சமே

இக = இம்மை

பரம் = மறுமை

ஆகி இருந்தவனே = ஆகிய இரண்டுமாய் இருப்பவனே

அது என்ன அருளை விழுங்கும் அன்பர்கள் ? 

அவ்வளவு ஆர்வம். அவளை கண்ணாலேயே விழுங்கினான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா. அவளைத் தனக்குள் இருத்திக் கொள்ள விரும்புகிறான். அவளை விட்டு எந்நேரமும் பிரிய மனமில்லை அவனுக்கு. அதற்காக  அவளை வாயில் போட்டு விழுங்கவா முடியும். விழியால் விழுங்கினான். 

அது போல இறைவன் அருளை விழுங்கினார்கள் என்றார். பின்னொரு பாடலில்  "விக்கினேன் வினையுடையேன்" என்பார். 

தாகம் எடுத்தவன், நீரைக் கண்டவன் அவசரம் அவசரமாக பருகத் தலைப் படுவான். கொஞ்சம் கொஞ்சாமாக குடிக்க மாட்டான். அவன் உடலில் ஒவ்வொரு அணுவும்  "நீர் நீர் " என்று தவிக்கும். தண்ணீரைக் கண்டவுடன் அப்படியே எடுத்து விழுங்குவான். அது போல அருள் வேண்டித் தவிப்பவர்கள் அது கிடைத்தவுடன்  எடுத்து விழுங்கினார்கள். 

இருளே வெளியே : இருள் வெளிச்சம் என்பது எல்லாம் குறியீடுகள். ஆன்மீக உலகில்  இருள் என்பது அறியாமை. வெளிச்சம் என்பது ஞானம், அறிவு. 

அவன் எல்லாமாக இருக்கிறான் என்றால் அறியாமையாகவும் இருக்கிறான். 

குழந்தை அப்பாவின் முதுகில் யானை ஏறி விளையாடும். குழந்தைக்குத் தான் தெரியாது. அப்பாவுக்குமா தெரியாது. நானாவது யானையாவது என்று குழந்தையிடம்  சண்டை பிடிப்பது இல்லை. அவரும் யானை போல  நடிப்பார்.வெளியில் இருந்து  பார்த்தால் அப்பாவுக்கு அறிவில்லை என்று தான் தோன்றும். குழந்தையின் மகிழ்ச்சிக்கு அவர் தன் அறிவை சற்று விலக்கி வைத்து   நடிக்கிறார்.

குழந்தை பொம்மை கேட்கும். இந்த பொம்மையில் என்ன இருக்கிறது என்று அப்பா குழந்தையிடம்  கேள்வி கேட்பது இல்லை. 

புலன் இன்பங்கள் நமக்கு பொம்மைகள். அந்த பொம்மை இல்லாமல் குழந்தை வளர முடியாது. 

விளையாடி விட்டு தூக்கி வைத்து விட வேண்டும். 

இறைவன் ஏன் நமக்கு அறியாமையை தந்தான் என்று கேட்க்கக் கூடாது. வளர்ச்சியில் அதுவும் ஒரு படி. 

இருளே வெளியே இக பரமாக இருந்தவனே....


Sunday, February 16, 2014

கந்தர் அலங்காரம் - கூற்றுவன் பிடிக்கும் போது அஞ்சல் என்பாய்

கந்தர் அலங்காரம் - கூற்றுவன் பிடிக்கும் போது அஞ்சல் என்பாய் 


ஒரு ஊருக்குப் போக வேண்டும் என்றால் இரயிலிலோ, விமானத்திலோ முன் பதிவு செய்து கொள்வது புத்திசாலித்தனம். இல்லை என்றால் கடைசி நேரத்தில் இருக்க இடம் கிடைக்காமல் அல்லல் பட நேரிடும்.

வேறு ஏதாவது காரியம் செய்ய வேண்டும் என்றால் முன் கூட்டியே அதைப் பற்றி திட்டமிட்டு செய்வது நலம்.

மரணம் என்று ஒன்று வரும்.  அதற்கு என்ன திட்டம் இட்டு வைத்து இருக்கிறோம் ? ஏதோ அப்படி ஒன்று நிகழவே போவது இல்லை என்று அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அருணகிரியார் நமக்கு அதை நினைவு  படுத்துகிறார்.

மரணம் வரும். கூற்றுவன் வருவான். பாசக் கயிறை வீசுவான். அப்போது அவனிடம் இருந்து யார் நம்மை காக்க முடியும் ? முருகா, நீ தான் எனக்கு "அஞ்சாதே" என்று ஆறுதல் சொல்ல முடியும். அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு திருப்புகழை படித்து போற்றுவேன்.

பாடல்

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை

இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.

பொருள்

படிக்கும் = படிக்கும்

திருப்புகழ் = திருப்புகழ், சிறந்த புகழ், என்று அழியாத புகழ்

போற்றுவன் = போற்றுவேன்

கூற்றுவன் = உடலையும் உயிரையும் கூறு போடுபவன், கூற்றுவன்

பாசத்தினாற் = பாசக் கயிற்றால்

பிடிக்கும் பொழுது = என்னை வந்து பிடிக்கும் போது

வந்து = என் எதிரில் வந்து

அஞ்லென் பாய் = அஞ்சல் என்பாய்

பெரும் பாம்பினின்று = பெரிய பாம்பின் மேல் நின்று

நடிக்கும் = நடனமாடும்

பிரான் = கண்ணன், திருமால்

மருகா = மருமகனே

கொடுஞ் = கொடுமையான

சூரனடுங்க = சூரன் நடுங்க

வெற்பை = மலையை


இடிக்கும் = இடிக்கும், பொடித்து துகள் துகளாக்கும் 

கலாபத் = தோகை  உள்ள

தனி மயில் = தனித்துவம் உள்ள மயில் (special )

 ஏறும் இராவுத்தனே = ஏறும் இராவுத்தனே 

இராவுத்தன் என்றால் முஸ்லிம் அல்லவா ? குதிரை விற்பவனை , குதிரை வண்டி ஓட்டுபவனை இராவுத்தன் என்று சொல்லலாம். முருகன் மயில் மேல் அல்லவா வருகிறான் ? அவனை எப்படி இராவுத்தன் என்று சொல்லலாம் ?

ஒரு காலத்தில், மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான் குதிரை விற்பவனாக  வந்து குதிரை  விற்றார். அந்த தகப்பனுக்கு மகன் தானே  இவன்.எனவே குதிரை விற்பவனின் மகன்  இராவுத்தன். 

எதற்கு சம்பந்தம் இல்லாமல் பாம்பின் மேல் ஆடும் மருகன், மயில் மேல் வரும் முருகன் என்று  சொல்கிறார் ?

இவை எல்லாம் ஒரு குறியீடுகள்.

பாம்பு புஸ் புஸ் என்று சீரும். பெரிதாக காற்றை வெளியே விடும். அப்படி புஸ் புஸ் என்று சீரும்  பாம்பை அடக்கி வைப்பது மயில். 

பிராண வாயுவின் ஓட்டத்தை கட்டுப் படுத்தினால் மரண பயம் வராது. 

மூச்சு சீரானால் , கட்டுப் பட்டால் மனம்  வசமாகும்.

மனம் வசமானால் பயம் நீங்கும். பயத்தில் பெரிய பயம் மரண பயம். அதுவும் நீங்கும். 

திருக் கோத்தும்பீ - பொய்யான செல்வம்

திருக் கோத்தும்பீ - பொய்யான செல்வம் 


செல்வம் வேண்டும் என்று நாளும் அலைகிறோம் . அதற்குத்தானே இத்தனை ஓட்டமும். அலைச்சலும்.

செல்வம் கிடைத்து விட்டால் நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி எல்லாம் வந்துவிடும் என்று நினைக்கிறோம்.

அப்படி, ஓடி ஆடி அலைந்து செல்வத்தை பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் ?

அது அவர்களுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் தந்திருக்கிறதா ?

பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்தவர் மாணிக்க வாசகர். பணமும், அதிகாரமும் தேவைக்கு அதிகமாகவே இருந்திருக்கும்.

அதையெல்லாம் பொய் என்கிறார் மணிவாசகர்.

பாடல்

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பொருள்


பொய்யாய = பொய்யான

செல்வத்தே = செல்வங்களை

புக்கழுந்தி = புக்கு அழுந்தி

நாள்தோறும் = நாள் தோறும்

மெய்யாக் கருதிக் = உண்மைய என்று கருதி

கிடந்தேனை = இருந்தவனை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

ஐயா = ஐயா 

என் ஆரூயிரே = ஏன் ஆருயிரே

அம்பலவா  = அம்பலத்தில் ஆடுபவனே

என்றவன்றன் = என்று அவன் தன்

செய்யார் மலரடிக்கே = சிவந்த தாமரை போன்ற மலரடிகளுக்கே

சென்றூதாய் = சென்று ஊதாய் 

கோத்தும்பீ. = கோ+தும்பீ = அரச தும்பியே

செல்வம் நில்லாதது. அதனால் தான் அதற்கு "செல்வம்" ...எப்ப வேண்டுமானாலும் செல்வோம் என்று அது சொல்லாமல் சொல்கிறது.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

என்பது வள்ளுவம்.கம்ப இராமாயணம் - நாள் படா மறைகள்

கம்ப இராமாயணம் - நாள் படா மறைகள் அனுமன் , இராமனையும் இலக்குவனையும் முதன் முதல் சந்திக்கிறான். அவர்களுக்குள் அறிமுகம் நடக்கிறது. இராமனும் அனுமனும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கிறார்கள்.

அனுமன் தன் விஸ்வரூபத்தை காட்டுகிறான்.

இராமாயணத்தில் இராமனுக்கு விஸ்வரூபம் இல்லை. அனுமனுக்கு இருக்கிறது.

அனுமனின் விஸ்வரூபத்தை கண்டபின் , இராமன் அனுமனை பரம்பொருள் என்கிறான். பரம்பொருள் என்று நேரடியாக கூறவில்லை....பரம்பொருள் தத்துவம் என்று கூறுகிறான்.

அருமையான பாடல்


தாள்படாக்கமலம் அன்ன தடங் கணான், தம்பிக்கு, 'அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர் படாது ஆகி, என்றும்
நாட்படா மறைகளாலும், நவை படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய! குரக்கு உருக்கொண்டது' என்றான்.


பொருள்

தாள்படாக்கமலம் அன்ன தடங் கணான் = தாள் என்றால் தண்டு. இராமனின் கண்கள் தாமரை மலர் போல் இருக்கிறது. ஆனால் தண்டு இல்லாத தாமரை. ஏன் என்றால், தண்டு உள்ள தாமரை ஒரே இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும். இராமனோ எல்லா இடங்களிலும் இருக்கிறான். எனவே, தாள் படா கமலம்.


 தம்பிக்கு = இலக்குவனுக்கு

அம்மா! = ஆச்சரியக் குறி

கீழ்ப் படாநின்ற நீக்கி = கீழான குணங்களை நீக்கி

கிளர் படாது ஆகி = ஒளி கெடாமல். கிளர்ந்து எழும் ஞான ஒளி குறையாமல்

என்றும் = என்றென்றும்

நாட்படா மறைகளாலும் = காலத்தால் அழியாத, என்றும் புதுமையாக இருக்கும் வேதங்களாலும்

 நவை படா ஞானத்தாலும் = குற்றம் இல்லாத ஞானத்தாலும்

கோட்படாப் பதமே = அறிந்து கொள்ள முடியாத பதமே

ஐய! = ஐயனே

குரக்கு உருக்கொண்டது' என்றான் = குரங்கு உருக் கொண்டது என்றான்

வேதங்களாலும் அறிந்து கொள்ள முடியாத பாதம் அனுமனின் பாதம்.

சொல்லியது இராமன்.


Saturday, February 15, 2014

திருப்பாவை - அருள் எனும் வெள்ளம்

திருப்பாவை - அருள் எனும் வெள்ளம் காதல் என்பது கொடுப்பது. பெறுவது அல்ல.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு பால் அமுது ஊட்டுவது போல. அந்த கைக் குழந்தையிடம் அவள் என்ன எதிர்பார்ப்பாள் ? ஒன்றும் இல்லை. அவளின் அளவு கடந்த அன்பினால் அந்த குழந்தைக்கு அவள் பால் தருகிறாள்.

சில சமயம் குழந்தை உடல் நலக் குறைவால் பால் குடிக்காது. குழந்தை பால் அருந்தாத அந்த நாட்களில் அந்த தாய் படும் வேதனை அவளுக்குத்தான் தெரியும். குழந்தைக்கென்று சுரந்த பால், குழந்தை குடிக்காவிட்டால் மார்பில் கட்டிக் கொள்ளும். அவளுக்கு மிகுந்த வேதனையைத் தரும். சில சமயம், அந்தப் பாலை கிண்ணத்தில் பெற்று தூர ஊத்தி விடுவது கூட உண்டு. பால் தராமல் அவளால் இருக்க முடியாது.

அது போல, பிள்ளைகளுக்குத் தருவதற்கு என்று ஆண்டவன் அருளை தன் மனம் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். பல சமயம் நாம் தான் அவற்றை பெற்றுக் கொள்வதில்லை. பால் அருந்தாத குழந்தையைப் போல.

அருள் வெள்ளம் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.

ஆண்டாள் அந்த அருளின் பல வடிவங்களை காட்டுகிறாள்..எப்படி அது உயிர்களுக்கு உறுதி செய்கிறது என்று. அவள் பார்வையில் இறைவனின் அருள் எங்கும் பொங்கி பரவிக் கிடக்கிறது.

பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்

ஓங்கி உலகளந்த = ஓங்கி உலகை அளந்த

உத்தமன் பேர்பாடி = உத்தமனாகிய திருமாலின் பேரைப் பாடி

நாங்கள் = நாங்கள் 

நம் = நம்முடைய

பாவைக்குச் சாற்றி = பாவைக்கு நோன்பு மேற்கொண்டு

நீ ராடினால் = நீராடினால்

தீங்கின்றி = ஒரு தீங்கும் இன்றி

நாடெல்லாம் = நாடெங்கும்

திங்கள்மும் மாரிபெய்து = மாதம் மூன்று முறை மழை பொழிந்து

ஓங்கு பெறும்செந் நெல் = ஓங்கி வளர்ந்த நெல் பயிர்களின்

ஊடு = ஊடே , இடையில் 

கயலுகளப் = கயல் என்ற மீன் அசைந்து ஓட

பூங்குவளைப் போதில் = குவளை மலரில்


பொறிவண்டு கண்படுப்பத் = வண்டுகள் கண் அயர்ந்து தூங்க

தேங்காதே = அஞ்சி, பயந்து 

புக்கிருந்து = உள்ளிருந்து  

சீர்த்த முலைபற்றி வாங்க  = சீரிய முலைகளைப் பற்றி

 குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் = குடங்களை நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் = என்று நீங்காத செல்வம் 

நிறைந்தேலோர் எம்பாவாய். = நிறையட்டும் என் பாவையே

மழை நன்றாகப் பெய்கிறது. வயல்கள் எல்லாம் நிறைந்து விட்டன. நெல் வயல்களில்  மீன்கள் விளையாடுகின்றன. இருந்தும் அவை குவளை மலர்களை  தொந்தரவு செய்யவில்லை. அதில் வண்டுகள் நிறைய தேன் குடித்து விட்டதால் கண் அயர்ந்து தூங்குகின்றன.

மழை நன்றாகப் பெய்ததால் ஊரில் புல் நன்றாக விளைந்திருக்கும். அவற்றை உண்ட பசுக்கள் மடி நிறைய பாலை சுமந்து கொண்டிருக்கும்.

பசுக்களின் மடியைத் தொட்டால் எங்கே அவை பாலை குடம் குடமாக தந்து அவை வழிந்து இல்லமெல்லாம் சேறு ஆகி விடுமோ என்று தயங்கி தயங்கி அவற்றின் மடியைப் பற்றினால், உடனே அவை குடங்களை நிறைத்து விடுமாம்.

இறைவனிடம் கொஞ்சம் கேட்டால் போதும் அவன் குடம் குடமாக நிறைத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.

அருளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான் ? கேளுங்கள்.கம்ப இராமாயணம் - இலை கூடத் துடிக்காது

கம்ப இராமாயணம் - இலை கூடத்  துடிக்காது 


வாலியின் அரசாட்சி நடக்கிறது. எப்படி தெரியுமா ?

அவனுக்கு சத்தம் கேட்டால் பிடிக்காது.

அதனால், அவன் ஊரில் மழை பெய்யும் போது இடி இடிக்காது.

அங்கு, குகைளில் உள்ள சிங்கங்கள் கர்ஜனை செய்யாது. அந்த சிங்கங்களுக்கு வாலியின் மேல் பயம்.

எங்கே காற்றடித்து அதனால் இலைகள் அசைந்து அந்த சத்தம் கேட்டால் வாலி கோவிப்பானோ என்று பயந்து காற்று கூட இலைகள் வேகமாக அசையாமல் மெல்ல அசையும் படி வீசுமாம்.

அப்படி ஒரு பலசாலி

பாடல்


மழைஇடிப்பு உறா; வய
     வெஞ் சீய மா
முழை இடிப்பு உறா;
     முரண் வெங்காலும் மென்
தழை துடிப்புறச் சார்வு
     உறாது; - அவன்
விழைவிடத்தின்மேல்,
     விளிவை அஞ்சலால்.


பொருள்

மழை இடிப்பு உறா = மழை பெய்யும் போது இடி இடிக்காது 

வய = வலிமை மிக்க

வெஞ் = வெம்மையான

சீய மா = சிங்கம் போன்ற கொடிய விலங்குகள் 

முழை  = குகையில்

இடிப்பு உறா = கர்ஜனை செய்யாது

முரண் = வலிய

வெங் காலும் = பலமாக வீசும் காற்று (கால் என்றால் காற்று)

மென் தழை = மென்மையான தளிர் இலைகள் 

துடிப்புறச் = துடித்தால்

சார்வு உறாது = பக்கத்தில் கூட வராது

அவன் = வாலி

விழை விடத்தின்மேல் = விழைந்து (விரும்பி) இருக்கும் இடத்தின் மேல்

விளிவை அஞ்சலால் = முடிவை எண்ணி அஞ்சுவதால் (வாலியின் கோபத்தால்)

அவ்வளவு பெரிய ஆள் - வாலிநீத்தல் விண்ணப்பம் - நீ பயப்படாதே

நீத்தல் விண்ணப்பம் - நீ பயப்படாதே 


எதில் எதிலேயோ நமக்கு பயம்.

எதிர் காலம் பற்றி, பிள்ளைகள் பற்றி, கணவன் மனைவி பற்றி, செய்யும் வேலை, நாம் சேமித்து வைத்திருக்கும் செல்வம், அதன் பாதுகாப்பு, நம் ஆரோக்கியம், நம்மைச் சேர்ந்தவர்களின் ஆரோக்கியம் என்று ஆயிரம் பயம்.

இப்படி ஆகி விடுமோ, அப்படி ஆகி விடுமோ என்ற பயம்.

சில நிஜமான பயங்கள் , பல கற்பனையில் உள்ள பயங்கள்....

நம் பயத்தை யார் போக்குவார்?...யாரிடம் போனாலும் அவர்கள் தங்கள் பயங்களோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் போனால் அவர்கள் தங்கள் பயங்களை நம்மிடம் கொட்டுவார்கள்.

என்ன செய்வது ? யாரிடம் போவது ? பல சமயங்களில் ரொம்பத் தனியாக விடப் பட்டதை போல உணர்வோம் ....

அதைப் போல தவிக்கிறார் மணிவாசகர்...

"பயப்படாதே என்று சொல்ல எனக்கு யாரும் இல்லை. எனக்கு நீ தான் தாயும் தந்தையும். நீ தான் என் பயத்தை நீக்கி எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் " என்று  வேண்டுகிறார்.

பாடல்  

என்னை `அப்பா, அஞ்சல்,' என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்;
மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய்? உவமிக்கின், மெய்யே
உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!

பொருள் 


என்னை  = என்னை

`அப்பா, அஞ்சல்,' = பயப்படாதே

என்பவர் இன்றி = என்று சொல்ல யாரும் இன்றி

நின்று = தனித்து நின்று

எய்த்து = தேடி

அலைந்தேன் = அலைந்தேன்

மின்னை ஒப்பாய் = மின்னலை போன்றவனே (ஒளி பொருந்தியவன் )

விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விடாதே

உவமிக்கின், = உனக்கு உவமை சொல்ல வேண்டும் என்றால்

மெய்யே = உண்மையானவனே

உன்னை ஒப்பாய் = உனக்கு நீயே உவமையானவன்

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

அன்னை ஒப்பாய்; = எனக்கு தாய் போன்றவன் நீ

எனக்கு அத்தன் ஒப்பாய் = எனக்கு தந்தை போன்றவன் நீ

என் அரும் பொருளே! = என்னுடைய சிறந்த பொருளே


பொருள் என்றால் ஏதோ கடையில் வாங்கும் ஒன்று அல்ல. நம் வாழ்வின் முதல் பொருள் அவன்.

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்லுவார்

போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு

ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம்

சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


அபிராமி அந்தாதியில்,  அபிராமி பட்டர் கூறுவார்..உலகில் எல்லா பொருளும் அவள் தான், அந்த பொருள்கள் தரும் இன்பங்களும் அவள் தான்,  

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

நாச்சியார் திருமொழி - இரண்டில் ஒன்று

நாச்சியார் திருமொழி - இரண்டில் ஒன்றுஅவள்: போகணுமா ?

அவன்: ம்ம்ம்ம்...

அவள்: அப்புறம் எப்ப ?

அவன்: சட்டுன்னு வந்துர்றேன்....

அவள்: ம்ம்ம்...

அவன்: திரும்பி வர்ற வரை உன் ஞாபகமா ஏதாவது தாயேன்

அவள்: என்ன வேணும் ? என் கைக் குட்டை ? என்ன வேணும் ?

அவன்: உன் வளையல்ல ஒண்ணு தா...உன் ஞாபகம் வரும் போதெல்லாம் அதை பாத்துக்குறேன்....

அவன் முன்னே தன் இரண்டு கைகளையும்  நீட்டி "நீயே எடுத்துக்கோ " என்றாள் .

அவள் விரல்களைப் பிடித்து, மென்மையாக அவளின் ஒரு வளையலை அவன் எடுத்துச் சென்றான்.

போய் ரொம்ப நாள் ஒண்ணும் ஆகலை. இவளுக்கு அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

குயிலிடம் கொஞ்சுகிறாள் ..."ஏ குயிலே, இந்த காதல் அவஸ்தையை என்னால் தாங்க முடியவில்லை....நீ போய் ஒண்ணு அவனை வரச் சொல், இல்லைனா என்னோட வளையலையாவது வாங்கிட்டு வா ...எனக்கு இரண்டில ஒண்ணு வேணும் "


பாடல்

பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லேகுறிக் கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.

சீர் பிரித்த பின்

பைங் கிளி வண்ணன் ஸ்ரீதரன் என்பதோர் பாசத்தில் அகப்பட்டு இருந்தேன்

பொங்கும் ஒளி வண்டு இறைக்கும் பொழில் வாழ் குயிலேகுறி கொண்டு இது  நீ கேள்

சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்

இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும்.


பொருள் 


பைங் கிளி = பசுமையான கிளி

வண்ணன் = அதை போன்ற வண்ணம் உள்ளவன்

ஸ்ரீதரன் = வான் பேரு ஸ்ரீதரன்

என்பதோர் = என்ற அவனின்

பாசத்தில் அகப்பட்டு இருந்தேன் = காதலில் நான் அகப்பட்டுக் கொண்டேன்

பொங்கும் ஒளி = ஒளி பொருந்திய 

வண்டு இரைக்கும் = வண்டுகள் இரைச்சலாக சப்தமிடும்

பொழில் = இந்த சோலையில்

வாழ் குயிலே = வாழும் குயிலே

குறி கொண்டு = குறித்துக் கொண்டு, கவனமாக 


 இது  நீ கேள் = இதை நீ கேள்

சங்கொடு சக்கரத்தான் = சங்கையும் சக்கரத்தையும் உள்ள அவன்

வரக் கூவுதல் = வரும்படி கூவு , அது இல்லைனா

பொன்வளை கொண்டு தருதல் = என்னுடைய பொன்னால் ஆன வளையலை கொண்டு தரச் சொல்


இங்குள்ள காவினில் வாழக் கருதில் = இந்தக் காட்டில் நீ வாழ வேண்டும் என்றால்

இரண்டத்து ஒன்றேல் = இரண்டில் ஒன்று

திண்ணம் வேண்டும். = நிச்சயமாக வேண்டும்

அது என்ன, அவன் வேண்டும் இல்லை என்றால் என் வளையல் வேண்டும் என்ற கோரிக்கை?

அவளுக்கு சந்தேகம். ஒரு வேளை தன்னை அவன் மறந்திருப்பானோ என்று. அவனுக்கு இருக்கும் ஆயிரம்  வேலையில் தன்னை நினைக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது. எப்பவாவது ஞாபகம் வந்தால் என்னோட வளையலை எடுத்துப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வான்.

அந்த வளையலை திருப்பிக் கேட்டால்,

ஒன்று, "அடடா ...அவளை மறந்தே போயிட்டேனே " என்று என் நினைப்பு வந்து உடனே வருவான்

இல்லை என்றால், என் வளையலும் இல்லை என்றால் என் நினைப்பு வரும் போது என்ன செய்வான் ? என்னை பார்க்க நேரில் வந்து தானே ஆக வேண்டும் என்று  அவள் நினைக்கிறாள்.

அவனுக்காவது என் வளையல் இருக்கிறது ....எனக்கு என்ன இருக்கிறது ? அவனையே வரச் சொல்  என்கிறாள்.

இந்த காட்டில் வண்டுகளின் இரைச்சல் ரொம்ப இருக்கிறது. எனவே, குயிலே , நான் சொல்வதை கவனமாக குறித்துக் கொள் என்கிறாள். 

  

Friday, February 14, 2014

நாச்சியார் திருமொழி - அவனை என்ன செய்யறேன் பாரு

நாச்சியார் திருமொழி - அவனை என்ன செய்யறேன் பாரு ஆண்டாள் குயிலை தூது போகச் சொல்கிறாள்.

குயில் கேட்கிறது, உனக்காக நான் தூது போனால் எனக்கு என்ன இலாபம் என்று.

ஆண்டாள் சொல்கிறாள், "யாரிடமும் சொல்லாதே, எனக்கும் அவனுக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அது வேறு யாருக்கும் தெரியாது. நானும் அவனும் மட்டுமே அறிந்த இரகசியம். நீ அவனை இங்கே வரச் சொன்னால், நான் அவனை என்ன செய்கிறேன் என்பதை நீ காணலாம் "

என்ன செய்வாள் கோதை ? அவனோடு சண்டை பிடிப்பாளோ ? ஊடல் கொள்வாளோ? கூடலும் கொள்வாளோ? என்ன செய்வேன் என்று சொல்லவில்லை.

குயிலின் (நமது) கற்பனைக்கு விடுகிறாள்...


பாடல்

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்  அவனைநான் செய்வன காணே

சீர் பிரித்த பின்

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் 
நாங்கள் எம் இல் இருந்து ஓட்டிய  கச்சங்கம் நானும் அவனும் அறிதும் 
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றி யாகில்  அவனை நான் செய்வன காணே

பொருள்

சார்ங்கம் = சார்ங்கம் என்ற வில்லை

(ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று
அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
)வளைய = வளையும்படி

வலிக்கும் = நாண்  ஏற்றும்

தடக்கைச் = பெரிய கைகள் 

சதுரன் = திறமையானவன் . அவன் இங்கே வர வேண்டும் என்று நினைத்தால் அது ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை அவனுக்கு. பெரிய வீரன். சாமர்தியமானவன் என்று சொல்லாமல் சொல்கிறாள் கோதை.

பொருத்தம் உடையன் = எனக்கு நல்ல பொருத்தம் உடையவன்

நாங்கள் = நாங்கள் (நானும் அவனும் )

எம் = எங்களுடைய

இல் = இலத்தில், வீட்டில்

இருந்து = இருந்து

ஓட்டிய = செய்து கொண்ட

கச்சங்கம் = இரகசிய ஒப்பந்தம்

 நானும் அவனும் அறிதும் = நானும் அவனும் மட்டும் அறிவோம்

தேங்கனி = தேன் போல் இனிக்கும் கனிகள்

மாம்பொழில் = மாங்கனிகள் நிறைந்த

செந்தளிர் = மரத்தில் உள்ள சிவந்த தளிர்களை

கோதும் = கொத்தும் (என் அவஸ்தை உனக்கு புரிய மாட்டேன் என்கிறது குயிலே. நீ பாட்டுக்கு மரத்துல உக்காந்துகிட்டு இந்த இலைகளை கோதிக் கொண்டு இருக்கிறாய்)

சிறு குயிலே = சிறு குயிலே

திருமாலை = திருமாலை


ஆங்கு = இங்கு

விரைந்து = உடனே

ஒல்லை = சீக்கிரம். (இராமாயணத்தில் இராமன் மிதிலை வருகிறான். அந்த ஊரின் கோட்டை மேல் உள்ள கொடிகள் எல்லாம் இராமனை சீக்கிரம் சீக்கிரம் வா என்று அழைப்பது போல அசைந்ததாம்.

மையறு மலரின் நீங்கி  யான்செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று  செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்  கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாஎன்று  அழைப்பது போன்ற தம்மா")

கூகிற்றி யாகில் = நீ வரும்படி கூவினால்

அவனை நான் செய்வன காணே = நான் அவனை என்ன செய்வேன் என்று நீ காணலாம்

Thursday, February 13, 2014

நீத்தல் விண்ணப்பம் - கலந்தருள வெளி வந்திலேனே

நீத்தல் விண்ணப்பம் - கலந்தருள வெளி வந்திலேனே இறைவன் திருவடியில் இருக்க வேண்டும், பரம பதம் போக வேண்டும், வைகுண்டம் போக வேண்டும், கைலாசம் போக வேண்டும் என்று பக்தி செய்வார்கள்.

நாளையே இறைவன் அவர்கள் முன் வந்து, "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம், கிளம்பு என்னோடு, நீ விரும்பிய அந்த இடத்துக்கு போகலாம் " என்று கூப்பிட்டால் எத்தனை பேர் கிளம்பிப் போவார்கள் ?

"வர்றேன்...ஆனால் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன்...பெண்டாட்டி பிள்ளைகளை விட்டு விட்டு எப்படி வருவது, பிள்ளைகளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டு வருகிறேன், நான் இல்லாம என் பெண்டாட்டி தனியாக எப்படி குடும்பத்தை சமாளிப்பாள், அவளுக்கு ஒரு வழி பண்ணிவிட்டு வருகிறேன்...." என்று சொல்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.


குடும்ப பொறுப்பு ஒரு புறம் இருந்தாலும், இந்த உலகை விட்டு போக ஆசை இல்லை. எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும், இதில் ஒரு சுகம் இருக்கிறது.

எத்தனை ஆயிரம் அற நூல்கள் வந்து  விட்டன.ஒன்றை ஒழுங்காக கடைப் பிடித்திருந்தால் கூட எவ்வளவோ உயர்ந்திருப்போம். "...படிக்க நல்லாத்தான் இருக்கு....இது எல்லாம் நடை முறைக்கு சரிப் பட்டு வராது " என்று நாம் நம் வழியில் போய்  விடுகிறோம்.

மாணிக்க வாசகர் இந்தப் போராட்டத்தை படம்  பிடிக்கிறார்.

இறைவன் தெரிகிறது. அவன் அருள் தெரிகிறது. அது வேண்டும் என்று தெரிகிறது. ஆனால், உலகப் பற்றை விட முடியவில்லை.  தவிக்கிறார்.

பாடல்

களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய்? மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே,
எளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே!

பொருள் 


களி வந்த சிந்தையொடு = மகிழ்ச்சியான  மனதுடன்.மனதுடன்

உன் கழல் கண்டும் = உன் திருவடிகளை கண்டும் 

கலந்தருள = கலந்து உன் அருளைப் பெற

வெளி வந்திலேனை = இந்த உலகப் பாசங்களை விட்டு வெளியே வராத என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

மெய்ச் சுடருக்கு = உண்மையான ஒளிக்கு

எல்லாம் ஒளிவந்த பூம் கழல் = எல்லாம் ஒளி தரும் திருவடிகளை உடைய

 உத்தரகோசமங்கைக்கு அரசே =  உத்தரகோசமங்கைக்கு அரசே

எளிவந்த எந்தை பிரான் = உன்னை அடைவது ஒன்றும் ரொம்ப கடினம் இல்லை. நீ மிக எளிமையானவன். என் தந்தை போன்றவன். என்னை விட்டு என்றும்  பிரியாதவன்.

என்னை ஆளுடை என் அப்பனே! = என்னை ஆண்டு கொள் என் தந்தை போன்றவனே

நானே வர மாட்டேன். நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொள்.  என்னை விட்டால் , இந்த உலகிலேயே கிடந்து உழன்று கொண்டிருப்பேன். எப்படியாவது  என்னை ஆண்டு கொள்.Wednesday, February 12, 2014

நாச்சியார் திருமொழி - உனக்கு புண்ணியமாய் போகும்

நாச்சியார் திருமொழி - உனக்கு புண்ணியமாய் போகும் 


இந்த ஆண்டாள் ஓயாமல் குயிலை பார்த்து இதைச் செய் , அதைச் செய் என்று சொல்லிக் கொண்டே  இருக்கிராள் . பார்த்தது அந்தக் குயில். அவள் காணாத வண்ணம் மறைந்து கொண்டது. கோதை விடுவதாய் இல்லை.

"ஏய், அழகான குயிலே, அவனோடு சேரும் ஆசையினால் என் கொங்கைகள் கிளர்ந்து எழுந்து, குதுகலமாக இருக்கிறது. அவனைக் காணாமல் என் ஆவியோ சோர்கிறது. அவன் இங்கே வரும்படி நீ கூவினால், உனக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும் " என்று குயிலிடம் வேண்டுகிறாள்.


பாடல்

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி

சீர் பிரித்த பின்

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலஞ் செய்யும்
அங் குயிலே.உனக்கென்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ  சாலத் தருமம் பெறுதி


பொருள் 

பொங்கிய பாற்கடல் = பொங்கிய பாற்கடல். பாற்கடல் ஏன் பொங்கிற்று ? ஆண்டாள் மனதில் ஒரே சந்தோஷம். காதல் தரும் பர பரப்பு. அவளுடைய பர பரப்பினால், அவளுக்கு அந்த பால் கடலும் பொங்குவது போலத் தெரிகிறது.

பள்ளி கொள்வானைப் = பள்ளி கொண்டிருப்பவனை

புணர்வதோர் ஆசையினால் = புணரும் ஆசையினால் 

என் கொங்கை = என் மார்புகள் 

கிளர்ந்து = கிளர்ச்சி அடைந்து 

குமைத்துக்   = அடர்ந்து. அதாவது ஒன்றோடு ஒன்று உரசி

குதுகலித்து = ஆனந்தப் பட்டு 

ஆவியை ஆகுலஞ் செய்யும் = உனது உயிரை வருத்தும்


அங் குயிலே = அழகிய குயிலே

உனக்கென்ன = உனக்கு என்ன

மறைந்து உறைவு = மறைந்து உறைகிறாய். மறைந்து வாழ்கிறாய் 

ஆழியும் = சக்கரமும்

சங்கும் = சங்கும்

ஒண் தண்டும் = கையில் கதையும்

தங்கிய கையவனை = எப்போதும் கொண்டு இருப்பவனை

வரக் கூவில் நீ = நீ வரும்படி கூவினால்

சாலத் தருமம் பெறுதி = உனக்கு ரொம்ப புண்ணியமாகப் போகும். 

நாச்சியார் திருமொழி - தலை அல்லால் கைம் மாறிலேனே

நாச்சியார் திருமொழி - தலை அல்லால் கைம்  மாறிலேனே 
எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே

 இப்படியும் கூட காதலிக்க முடியுமா என்று வியக்க வைக்கும்  பாடல்.

"அவனை இப்போது வரச் சொல். அவன் வரா விட்டால், நாளடைவில், வயதாகி,  என் சிவந்த இதழ்களும், என் மார்புகளும் அழகு அழிந்து போகும். அப்படி அழகு அழிந்து போனால் அவனுக்குத் தான் நஷ்டம். அதனால் அவனை இப்போதே வரச் சொல்.

அவனுக்கு என்ன கல்  நெஞ்சம்.என்னை வருத்த வேண்டும் என்றே புன் முறுவல் மட்டும் காட்டி விட்டு வரமால்  போகிறான். போகட்டுமே. எனக்கு என்ன. பின்னாடி எப்பவவாவது நான் வேண்டும் என்று வருவான் அல்லவா ...அப்போது இந்த இதழ்களும் என் மார்புகளும் அழகு அழிந்து போய் இருக்கும். யாருக்கு நட்டம் ?

அதனால் அவனை இப்போதே வரக் கூவுவாய் குயிலே...அப்படி நீ அப்படி கூவுவாயாகில் என் தலையையே உனக்கு நான் தருவேன் "

 என்கிறாள்.


பாடல், சீர் பிரித்த பின்

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீ கேசன் வலி செய்ய
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இல்லேனே 

பொருள்

எத்திசையும் = அனைத்து திசைகளிலும் உள்ள

அமரர் = தேவர்கள்

பணிந்து = பணிந்து

ஏத்தும் = புகழ் பாடும்

இருடீ கேசன் = தன்னைக் கண்டவர்களின் புலன்களை கொள்ளை கொள்ளுபவன்

வலி செய்ய = எனக்கு துன்பம் செய்ய

முத்தன்ன =  முத்துப் போன்ற

வெண் = வெண்மையான

முறுவல் = புன்முறுவல்

செய்ய = செய்துவிட்டுப் போனான், நானோ 

வாயும் = என் சிவந்த இதழ்களும்

முலையும் = முலையும்

அழகு அழிந்தேன் நான் = அழகு அழிந்தேன் நான்

கொத்து = கொத்து கொத்தாக

அலர் = மலர்ந்து இருக்கும்

காவில் = கானகத்தில்

மணித்தடம் = அழகான இடத்தில்

கண் படை கொள்ளும் = கண் மூடித் தூங்கும்

இளம் குயிலே = இளம் குயிலே

என் = என்னுடைய

தத்துவனை = தத்துவனை. தத்துவம் என்பது உண்மை. அதுதான் பொருள். அதுதான் நம்பிக்கை. அவன் தான் அவளுக்கு எல்லா  தத்துவங்களும்,அவற்றின் பொருளும்.

வரக் = வரும்படி

கூகிற்றியாகில் = நீ கூவுவாயானால்

தலை அல்லால் கைம்மாறு இல்லேனே = என் தலையைத் தவிர தருவதற்கு ஒன்றும்  இல்லை  என்னிடம். தலையை தருவேன் என்றால் தலையை வெட்டித் தருவேன் என்று அல்ல. என்னையே தருவேன் என்று ஒரு பொருள். தலை என்பது  அறிவு, அதனால் வரும் அகங்காரம், நான் என்ற அகந்தை இவற்றின்  இருப்பிடம். அவன் வருவது என்றால் இதை எல்லாம் விட்டு விடுவேன் என்கிறாள். மாற்றி யோசித்தால், இதை எல்லாம் விட்டால் தான் அவன் வருவான் என்பது  புலனாகும். அகந்தை போன இடத்தில் அவன் வருவான். இராவணன் மலையைத் தூக்க முடியும் என்று அகந்தை கொண்டான். அது முடியாது என்று அகந்தை போன இடத்தில் அவன் வந்தான்.

கோவிலில் போய் முடி காணிக்கை செலுத்துகிரோமே எதற்கு ?

முடி ஒரு அழகு. அழகு அழியும். அந்த முடி இல்லாவிட்டால் நம்மை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள். ஒரு நாள் இந்த முடி தாங்க  உதிரும்.அப்போது நம் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு வெள்ளோட்டம். நம்  ,மரியாதை, மதிப்பு நம் முடியில் இருக்கிறது !

இரண்டாவது, முடியை எடுக்கும் போது நம் சாயலே மாறிப் போகிறது. நான் என்பது யார் ? அந்த முடியா ? முடியில்லாத நானும், முடியுள்ள நானும் வேறு வேறு  ஆட்களா ?

 மூன்றாவது,நம்மால் தலையைத் தர முடியாது...முடியைத் தருகிறோம். ரொம்ப ஒன்றும் தூரம் இல்லை....


Tuesday, February 11, 2014

நாலடியார் - தழீஇம் தழீஇம் தண்ணம் படும்

நாலடியார் - தழீஇம் தழீஇம் தண்ணம் படும்


யாரோடு வேண்டுமானாலும் சண்டை இட்டு வென்று விடலாம்....ஒரே ஒரு ஆளைத்  தவிர.அந்த ஒரு ஆளை இது வரை வென்றவர் யாரும் இல்லை. அவர் தான் எமன். கூற்றுவனை வென்றவர் யாரும் இல்லை. எல்லோரும் ஒரு நாள் அவனிடம் தோற்றுத்தான் போவோம்.

அவன் வந்து நம்மை வேண்டு, நம்மை கட்டி இழுத்துக் கொண்டு போவான். அப்போது தண்ணம் என்ற பறை தழீஇம் தழீஇம் என்று கொட்டும். (டண்டனக்கா மாதிரி ).

நம்முடைய நாள் அளவு கடந்தது அல்ல. அதற்கு ஒரு எல்லை உண்டு. அது முடியும் போது அவர் வந்து  விடுவார்.

அவர் வருவதற்குள் நிறைய பொருள் சேர்த்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.  எல்லாவற்றையும் கொண்டா போகப் போகிறீர்கள்.

பாடல்

இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.


பொருள் 

இழைத்தநாள் = வாழ் நாள்

எல்லை இகவா = எல்லை கடந்து அல்ல

பிழைத்தொரீஇக் = பிழைத்தது இல்லை

கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை = கூற்றுவனொடு சண்டை இட்டு தப்பித்தவர் இங்கு இல்லை. எங்கு குதித்து, என்ன பாய்ச்சல் காட்டினாலும் பிடித்துக் கொள்வான் 

ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் = நிறைய பொருள் சேர்த்து வைத்து உள்ளவர்கள்

வழங்குமின் = மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்

 நாளைத் = நாளை

தழீஇம் தழீஇம் =  தழீஇம் தழீஇம் என்ற ஒலியோடு 

தண்ணம் படும் = தண்ணம் என்ற  இழவு பறை ஒலிக்கும்நீத்தல் விண்ணப்பம் - களியாத களி எனக்கே

நீத்தல் விண்ணப்பம் - களியாத களி எனக்கே 


ஒருவன் தெளிந்த நீர் ஓடும் ஆற்றில் நின்று கொண்டிருக்கிறான். தாகம் எடுக்கிறது. ஓடும் நீரை அள்ளிப் பருக வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு , ஐயோ, தாகம் எடுக்கிறதே, உயிர் போகிறதே, யாராவது எனக்கு நீர் தாருங்களேன் என்று அவன் கூவினால்  அவனைப் பற்றி என்ன  நினைப்போம் ?

அறியாத மூடன் என்று தானே நினைப்போம்.

அவன் இருக்கட்டும் அங்கேயே.

நம் வாழ்வில் எத்தனை துன்பங்கள். பணம், தொழில், பிள்ளைகள், கணவன்,மனைவி, அலுவலகம், அண்டை அயல், எதிர் காலம், ஆரோக்கியம் என்று ஆயிரம் கவலைகள்.

நம்ம சுற்றி உள்ள நல்லவற்றை நாம் பார்க்கிறோமா என்றால் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைத்திருக்கின்ற நன்மைகளை, நல்லவைகளை நினைத்துப் பார்த்தால் நம் துன்பம் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

நம்மைச் சுற்றி ஆற்றின் வெள்ளம் போல கணக்கில் அடங்காத இன்பங்கள் சூழ்ந்து  கிடக்கின்றன.அவற்றை காணாமல், தாகம் எடுக்கிறதே என்று துன்பப் படுகிறோம்.

நம்மை சந்தோஷமாக இருப்பதை தடை செய்வது யார் ? தண்ணீர் இருக்கிறது. முகந்து குடிப்பதை தடை செய்வது யார் ?

நம் அறியாமை.

மாணிக்க வாசகர் உருகுகிறார்....

"வெள்ளத்தின் நடுவில் நின்று கொண்டு நாக்கு வறண்டு தாகம் எடுக்கிறது என்று புலம்பும் மனிதனைப் போல உன் அருள் பெற்றும் துன்பத்தில் இருந்து விடுபடாமல் இருக்கும் என்னை கை விட்டு விடாதே. அடியார்கள் உள்ளத்தில் உள்ளவனே, தீராத இன்பத்தை எனக்கு தந்தருள்வாய் "

பாடல்

வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் [நின்]றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே.


பொருள் 

வெள்ளத்துள் = வெள்ளத்தின் நடுவில். இது ஏதோ குளம் குட்டை இல்லை. குடித்தால் குறைந்து போக. வெள்ளம். வந்து கொண்டே இருக்கும். புதிது புதியதாய் நாளும் இன்பம் வந்து கொண்டே இருக்கும்.

நா வற்றி = நாக்கு வறண்டு

ஆங்கு = அங்கு

 உன் அருள் பெற்றுத் = உன் அருளைப் பெற்றப் பின்னும்

துன்பத்தின் [நின்]றும் = துன்பத்தில் கிடக்கும் என்னை

விள்ளக்கிலேனை  = வெளி வராமல் தவிக்கும் என்னை

விடுதி கண்டாய்?= விட்டு விடுவாயா ?

 விரும்பும் அடியார் = விரும்பும் அடியார். ஏதோ கடமைக்கு, வேறு வழியில்லாமல் ஆன அடியார்கள் அல்ல. விரும்பி அடியார்கள் ஆனவர்கள்

உள்ளத்து உள்ளாய் = உள்ளத்தில் இருப்பவனே

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

கள்ளத்து உளேற்கு = கள்ளத்தனம் நிறைந்த எனக்கு

அருளாய் = அருளாய். என்ன அருள் வேண்டுமாம் ?

களியாத களி, எனக்கே = களியாத களி எனக்கே. தீராத இன்பம்.

Count your blessings என்று சொல்லுவார்களே அது போல.

இறை அருள் எங்கும் விரவிக் கிடக்கிறது. அள்ளிப் பருகுங்கள். யார் தடுப்பது உங்களை.

தண்ணீரில் நின்று கொண்டே தாகம் என்று சொல்லுவது அறியாமை.நாச்சியார் திருமொழி - அவனை இங்கே வரச்சொல்

நாச்சியார் திருமொழி - அவனை இங்கே வரச்சொல் 


பக்தி - காதல், இரண்டுக்கும் ரொம்ப வித்தியாசம் ஒன்றும் இல்லை.

பக்தி இறைவனை நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்லும்.

கோவில், குளங்கள் என்று அவனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். பக்தி செலுத்துங்கள். இறைவன் உங்களைத் தேடி வருவான்.

கோதை கொஞ்சுகிறாள். 

குயிலிடம் தூது விடுகிறாள்


"ஏ குயிலே , அவனை நான் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் என் கண்கள் தூங்கவே இல்லை. அந்த உலகலந்தானை இங்கே வரச் சொல். நீ அப்படி சொன்னால், உனக்கு அடிசில், பால் அமுது போன்றவற்றை தருவேன். அது மட்டும் அல்ல, அப்படி நீ கூவினால், என் வீட்டில் வளரும் கிளியை உனக்கு நட்பாக அறிமுகம் செய்து வைப்பேன்..."


பாடல்


மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்

சீர் பிரித்த பின்

மென் நடை அன்னம்  பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் 
பொன் அடி காண்பதோர் ஆசயினால் என் பொரு கயற் கண் இணை துஞ்சா
இன் அடிசிலோடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகு அளந்தான் வரக் கூவாய்

பொருள்

மென் நடை = மென்மையான நடையைக் கொண்ட
அன்னம்  =அன்னங்கள்
பரந்து விளையாடும் = எங்கும் விளையாடும்
வில்லிபுத்தூர் = ஸ்ரீ வில்லிபுத்தூர்

உறைவான் தன் = இருப்பவனின்

பொன் அடி = பொன் போன்ற திருவடிகளை

காண்பதோர் = காணவேண்டும் என்ற

ஆசையினால் = ஆசையினால்

என் = என்னுடைய

பொரு = ஒன்றோடு ஒன்று பொருந்திய

கயற் = மீன் போன்ற

கண் இணை = இரண்டு கண்களும்

துஞ்சா = தூங்க மாட்டேன் என்கின்றன

இன் அடிசிலோடு = இனிமையான அடிசிலொடு

பால் அமுது = பால் சோறு

 ஊட்டி எடுத்த = ஊட்டி வளர்த்த

என் கோலக் கிளியை = என் வீட்டில் வளரும் இனிய கிளியை

உன்னொடு தோழமை கொள்வன் = உனக்கு நட்பாக செய்து தருவேன்

குயிலே = குயிலே

உலகு அளந்தான் வரக் கூவாய் = உலகு அளந்தான் வரக் கூவுவாய்

ஆண்டாள் வீட்டில் இருந்து ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் ரொம்ப பக்கமாகத் தான்  இருந்திருக்கும். அவளின் தந்தை அந்த கோவிலில் பணி செய்கிறார். அவள் நினைத்தால் கோவிலிலேயே சென்று அவனைப் பார்த்து இருக்கலாம்.

அதெல்லாம் வேண்டாமாம், அவனை இங்கே வரச் சொல் என்கிறாள்.

அவன் வேண்டுமானால் உலகளந்த பெருமானாக இருக்கலாம். எனக்கு அவன் காதலன். என் வீட்டுக்கு அவனை வரச் சொல் என்கிறாள்.

காதல் கடவுளையும் உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தும்.

அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்பார் வள்ளலார்

உலகம் முழுவதும் காதலால் நிறைந்து இருப்பதை கண்டார் திரு நாவுக்கரசர்.

மனிதர்கள் மட்டும் அல்ல. விலங்குகளும் காதல் கொள்கின்றன. அந்த அன்பில், அந்த காதலில் இந்த உலகமே இன்பத்தில் நிறைந்து இருப்பதைக் கண்டார் நாவுக்கரசர். அந்த காதலே இறைவன் என்று பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

காதலியுங்கள்.

கஷ்டமா என்ன ?   Sunday, February 9, 2014

நீத்தல் விண்ணப்பம் - அமுதப் பெரும் கடலே

நீத்தல் விண்ணப்பம் - அமுதப் பெரும் கடலே 


தண்ணீருக்காக எவ்வளவோ கஷ்டப் படுகிறோம்.

இந்த கடல் நீர் அனைத்தும் நல்ல நீராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

அதுவும் தெளிந்த சுத்தமான நீராக இருந்தால் ?

தண்ணீரை விடுங்கள், கடல் முழுவதும் அமுதமாக இருந்தால் ?

அமுதம் கொஞ்சம் கிடைத்தால் கூட போதும். அது கடல் அளவு இருந்தால் ? இறைவனின் அருள், அன்பு, கடல் போல நம் முன்னால் விரிந்து கிடக்கிறது.
இருந்தும் நான் அதை விட்டு விட்டு என் புலன்கள் தரும் சிற்றின்பங்களின் பின்னால் அலைகிறேனே , இருந்தும் என்னை கை விட்டு விடாதே என்கிறார் மாணிக்க  வாசகர்.

மனிதனுக்குள் நித்தம் நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார் மணிவாசகர்.

ஒரு புறம் இறை உணர்வு உந்தித் தள்ளுகிறது. மறுபுறம் புலன் ஆசைகள் பற்றி இழுக்கின்றன. இதையும் விட முடியவில்லை, அதையும் விட முடியவில்லை.

தவிப்பு  தொடர்கிறது.

பாடல்

நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான், ஐம் புலன்கள் கொண்
விடும் தகையேனை விடுதி கண்டாய்? விரவார் வெருவ,
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே,
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுதப் பெரும் கடலே.


பொருள் 


நெடுந்தகை = பெருந்தன்மை கொண்டவனே

நீ = நீ

என்னை ஆட்கொள்ள = நீ என்னை ஆட்கொண்ட பின்பும்

யான் = நான்

ஐம் புலன்கள் = என் ஐந்து புலன்களும்

கொண் விடும் தகையேனை  = கொண்டு செல்லும் வழியில் செல்லும் தன்மை
உடையவனாய் இருக்கிறேன்

விடுதி கண்டாய்? - இருந்தும் என்னை கை விட்டு விடாதே

விரவார் வெருவ = பகைவர்கள் அஞ்சும்படி

அடும் = சண்டை இடும்

தகை வேல் வல்ல = வல்லமை பொருந்திய வேலைக் கொண்ட

உத்தரகோசமங்கைக்கு அரசே =  உத்தரகோசமங்கைக்கு அரசே

கடும் தகையேன் = கடுமையான தன்மை கொண்ட நான்

உண்ணும் = உண்ணும்

தெள் நீர் = தெளிந்த நீர்

அமுதப் பெரும் கடலே = அமுதம் நிறைந்த பெரும் கடலே


குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

Saturday, February 8, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் சேலையைத் தருவாய்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் சேலையைத் தருவாய் 


ஆண்டாளும் அவள் தோழிகளும் சூரியன் உதிக்கும் முன் குளத்தில் நீராட  வந்தார்கள். துணிகளை கரையில் வைத்து விட்டு குளிக்க இறங்கினார்கள். கண்ணன் அவர்கள் துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு தர மாட்டேன் என்கிறான். அவனிடம் கெஞ்சுகிறாள்  கோதை. "இனிமேல் இந்த குளத்துக்கு குளிக்க வரவே மாட்டோம், தயவு செய்து எங்கள் துணிகளைத் தருவாய் " என்று வேண்டுகிறாள்.

பாடல்

கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோம் இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே

பொருள்

கோழி = கோழி

அழைப்பதன் முன்னம் = கொக்கரித்து அழைக்கும் முன்

குடைந்து = மூழ்கி

நீராடுவான் போந்தோம் = நீராட வந்தோம்

ஆழியஞ் செல்வ னெழுந்தான் = சூரியனும் இப்போது வந்து விட்டான்

அரவணை மேல்பள்ளி கொண்டாய் = பாம்பணையில் பள்ளி கொண்டவனே

ஏழைமை யாற்றவும் பட்டோம் = ஏழைகளான நாங்கள் ரொம்பவும் கஷ்டப் படுகிறோம்

இனியென்றும் பொய்கைக்கு வாரோம் = இந்தப் குளத்திற்கு வரவே மாட்டோம்

தோழியும் நானும் தொழுதோம் = நானும், என் தோழிகளும் உன்னை தொழுகின்றோம். உடை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் இரண்டு கைகளையும் உயர்த்தி வணங்க முடியாது. எனவே இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு கையை சேர்த்து வணங்கினோம் என்று நயப்பு சொல்வாரும் உண்டு.

துகிலைப் = எங்கள் துணிகளை

பணித்தரு ளாயே = கொடுத்து அருள்வாய்

கந்தர் அலங்காரம் - கூத்தாட்டும் ஐவர்

கந்தர் அலங்காரம் - கூத்தாட்டும் ஐவர் 


துன்பத்திற்கு காரணம் பாசம் என்று சொல்லப் படுகிறது.

பாசம் எதன் மேல் ?

மனைவி, கணவன், பிள்ளகைள், பெற்றோர், சகோதரன், சகோதரி, என்று நட்பும் உறவும் இவற்றின் மேல் உள்ள பாசம். இதில் ஏற்படும் இழப்பு, இது ஒரு பாசம்.

இதைத்தான் நாம் பொதுவாக பாசம் என்று சொல்லுகிறோம்.

ஆனால், அருணகிரிநாதர் அதைவிட ஆழமான, நாம் அறியாத ஒரு பாசத்தைக் காட்டுகிறார்.

நம் மனம் புலன்கள் மேல் வைக்கின்ற பாசம், பிணைப்பு.

புலன்கள் தரும் இன்பம், இன்பத்தில் பிறக்கும் நினைவுகள், ஞாபகங்கள், அவற்றை விட்டு பிரிய வேண்டுமே என்ற ஏக்கம் இது பாசத்தில் பெரிய பாசம்.

இறக்கும் போது எது அதிகம் கவலை தருகிறது ? இந்த இன்பங்களை , இந்த நினைவுகளை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான் பெரிய கவலை.

மனதுக்கும் புலன்களுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு விடுமானால் வாழ்வில் மிகப் பெரிய இன்பம் கிடக்கும்.

உடல் வேலை செய்ய உணவு வேண்டும். உடல் தனது தேவைக்கு உண்கிறது என்று அந்த உணவின் மேல் பற்று இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். "ஹா, அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்கு..இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம்" என்று மனம் அதில் இலயிக்கும் போது பிரச்சனை தொடங்குகிறது .

உணவு என்பது உடல் தேவை என்பது மாறி உள்ளத் தேவையாகிப் போகிறது.

மனம், புலன், பொருள் (உயிர் உள்ளது, உயிர் அல்லாதது) என்ற இந்த பாசம் மனிதனை பாடாகப் படுத்துகிறது.

இதிலிருந்து என்னை காப்பாற்று என்று முருகனை  வேண்டுகிறார்.

பாடல்

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்

சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.

சீர் பிரித்த பின்

கு பாச வாழ்க்கையுள்  கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த 
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இரு நான்கு வெற்பும்
அப்பாதியாய்  விழ மேருவும் குலங்க விண்ணாரும் உய்ய 

சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடைய  சண்முகனே.

பொருள் 

கு = உலகு
பாச வாழ்க்கையுள் = உலகின் மேல் பாசம் கொண்ட வாழ்க்கையில்
கூத்தாடும்  ஐவரில் = கூத்தாடும் ஐந்து புலன்களும்
கொட்பு = சுழற்சி. ஒரு புலன் ஓய்ந்தால் அடுத்தது தலை தூக்கும். முதலில்  பசிக்கும். உணவு கிடைத்தவுடன், வேறு சுகம் தேடும். 
அடைந்த = அடைந்த 
இப்பாச நெஞ்சனை = இந்த பாச நெஞ்சம் உள்ளவனை
ஈடேற்றுவாய் = கரை ஏற்றுவாய்
இரு நான்கு = எட்டு. அஷ்ட திக்கு
வெற்பும் = மலைகளும்
அப்பாதியாய்  விழ = இரண்டாய் உடைந்து விழ
மேருவும் குலங்க = மேரு மலையும் குலுங்க
விண்ணாரும் உய்ய = தேவர்கள் உய்ய 

சப்பாணி கொட்டிய = சப்பாணி கொட்டிய
கை ஆறிரண்டு உடைய  சண்முகனே = பன்னிரண்டு கைகளை உடைய சண்முகனே


சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க

சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க 


சிவபுராணம் - மாணிக்க வாசகர் அருளிச் செய்தது.

அற்புதமான பாடல்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

முதல்  ஐந்து வரிகள் மேலே உள்ளவை.

பெரிய புத்தகங்களை படிக்கும் போது நல்ல கருத்துகள் நடுவிலோ, கடைசியிலோ இருந்தால் ஒரு வேளை நாம் அந்த புத்தகத்தை முழுமையாக படிக்காவிட்டாலோ அல்லது சரியாகப் படிக்கா விட்டாலோ, அந்த நல்ல கருத்தை நாம் அறியாமல் போகலாம்.

அதனால் எடுத்த எடுப்பிலேயே "நமச்சிவாய வாழ்க" என்று ஆரம்பிக்கிறார்.

நீங்கள் திருவாசகம் முழுதும் படிப்பீர்களோ இல்லையோ, முதல் வரியிலேயே நல்லதை சொல்லி ஆரம்பிக்கிறார்.

கம்பரும் அப்படித்தான்  செய்தார்."தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்று முதல்  பாடலிலேயே நம்மையும் சேர்த்து அவனிடம் சரண் அடையச் செய்தார்.

"நமச்சிவாய வாழ்க" என்று சொல்லி விட்டீர்களா ?

சில சமயம் நாம் பெரிய பக்தன் என்று கூட நம் தலையில் அகங்காரம் ஏறி விடும். நான் எத்தனை கோவில் போய் இருக்கிறேன், எவ்வளவு விரதம் இருந்து இருக்கிறேன், எவ்வளவு கோவில்களுக்கு எவ்வளவு நன்கொடை தந்திருக்கிறேன் என்று  பணிவில் கூட, நல்லது செய்வதில் கூட அகங்காரம் வந்து விடலாம்.

எனவே அடுத்து

"நாதன் தாள் வாழ்க" என்று அவன் திருவடிகளைப்  போற்றுகிறார். அடிபணிந்து இருக்க வேண்டும்  என்று சொல்லாமல்  சொல்கிறார்.

நம் வாழ்க்கை சிக்கல் நிறைந்தது. கோவிலுக்குப் போய் இறைவனை வழிபடும்  நேரத்திலும் வீட்டு நினைவு, அலுவலக நினைவு, என்று ஆயிரம் நினைவுகள். அதை எல்லாம் விட்டு விட்டாலும், பக்கத்தில் நிற்கும் பச்சை சேலை மனதை  அலைக் கழிக்கிறது.

அவன் நினைவு எங்கே வருகிறது.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"

எப்போதும் என் நெஞ்சில் இருப்பவன் என்கிறார்.

.....

இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் ஆயிரம் அர்த்தங்கள்....

நேரமிருப்பின், மூல நூலைப் படித்துப் பாருங்கள்...

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம்  விளங்கும்.

படித்துப் பாருங்கள்...உருகுகிறதா என்று தெரியும்.....


Friday, February 7, 2014

தேவாரம் - ஊர் கோபிக்கும் உடல்

தேவாரம் - ஊர் கோபிக்கும் உடல் 


பெரிய மனிதர், நல்லவர்,  படித்தவர், பண்புள்ளவர், பக்திமான் என்று கொண்டாடிய ஊர், உயிர் இந்த உடலை விட்டு போனவுடன் இந்த உடலை எவ்வளவு வெறுப்பார்கள். "என்ன இன்னும் எடுக்கவில்லையா, ஒரு மாதிரி நாத்தம் வருகிறதே, காலாகாலத்தில் எடுங்கள்" என்று இந்த உடல் இங்கே கிடப்பது கூட குற்றம் என்று கோபித்து பேசுவார்கள்.

அந்த நிலை வரும் முன்னால், இந்த உடலைக் கொண்டு சாதிக்க வேண்டியவற்றை சாதித்துக் கொள்ள வேண்டும்.

நாம் நிரந்தரமாக இங்கே இருக்கப் போவது இல்லை.

அது நமக்கு அடிக்கடி மறந்து போய் விடுகிறது.

நாவுக்கரசர் சொல்கிறார்

துன்பம் தரும் இந்த வாழ்வில் என்ன செய்தீர்கள் ? இடுகாட்டுக்கு இந்த உடல் செல்வது உறுதி. அவன் கை விட்டு விட்டால் இந்த உடலை ஊரார் கோபித்து எடுத்துச் செல்லும்படி சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடும்.

பாடல்


 நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்
              சுடலை சேர்வது சொற்பிர மாணமே
              கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
              உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பொருள் 

நடலை  = துன்பம்
வாழ்வு = நிறைந்த வாழ்கையை
கொண் டென்செய்தீர் = கொண்டு என்ன செய்தீர் ?
நாணிலீர் = வெட்கம் இல்லாதவர்களே
சுடலை = சுடுகாடு
சேர்வது  = சென்று அடைவது
சொற்பிர மாணமே = சத்தியமான சொல்லே
கடலின் = பாற்கடலில்
நஞ்சமு துண்டவர் = தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவர்
கைவிட்டால் = கை விட்டு விட்டால்
உடலி னார் = இந்த உடலை
கிடந் தூர்முனி பண்டமே = ஊரார் கோவிக்கும் நிலையில் இருக்கும் இந்த உடல் .


சிவன் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாக உண்டான். 

என்ன அர்த்தம் ?

அவ்வளவு கொடிய விஷத்தையே அவன் ஏற்றுக் கொண்டான். 

நீங்கள் அவ்வளவு கொடியவர்களா என்ன ?

உங்களையும் ஏற்றுக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்லும் கதை அது. 


திருவாசகம் - உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தேன்

திருவாசகம் - உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தேன்

நம் ஐந்து புலன்களும் நமக்கு இன்பத்தை தருவதாக ஏமாற்றி நம்மைத் துன்பத்தில் தள்ளி  விடுகின்றன.

நல்லா இருக்கும், சாப்பிடு சாப்பிடு என்று நாக்கு தூண்டி, முதலில் இன்பம் தருவது போல தந்தாலும் பின்னாளில் சர்கரை வியாதி, உடல் பருமன் என்று ஆயிரம் துன்பத்தில் நம்மை கொண்டு செலுத்தி விடுகின்றன.

இப்படி புலன்கள் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இருந்ததனால் உன்னை மறந்து விட்டேன். அதற்காக என்னை கை விட்டு விடாதே. திரு நீறு பூசி ஒளிவிடும் உடலைக் கொண்டவனே என்று இறைவனை வேண்டுகிறார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற இந்த பதிகம் முழுவதும் நமக்குள் அன்றாடம் நடக்கும் போராட்டங்களை அடிகள் படம் பிடித்து  காட்டுகிறார்.

இந்தப் பாடலில் புலன் இன்பங்களுக்கும், இறைவனை நாடும் நோக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார்.

பாடல்

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே
ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.

பொருள் 

மாறுபட்டு = என்னில் இருந்து மாறுபட்டு

அஞ்சு = ஏன் ஐந்து புலன்களும்

என்னை வஞ்சிப்ப = என்னை வஞ்சனையைச் செய்ய. நல்லது செய்வதாக தொடங்கி தீயதில் தள்ளி விடும் புலன்கள்.  "மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய" என்பார் அடிகள் சிவபுராணத்தில்

யான்  = நான்

உன் மணி மலர்த் தாள் = உன் மலர் போன்ற திருவடிகளை

வேறுபட்டேனை  = விட்டு வேறுபட்டு நின்றேன்

விடுதி கண்டாய்? = என்னை கை விட்டு விடாதே. புலன் இன்பங்களும் வேண்டும், இறைவன் அருளும் வேண்டும். அல்லாடுகிறார் அடிகள். அதையும்  விட முடியவில்லை. இதையும் விட முடியவில்லை.

வினையேன் மனத்தே = வினை உடையவனாகிய என் மனதில்

ஊறும் மட்டே = ஊற்றாக பொங்கி வரும் தேனே. (மட்டு = தேன் ). இறைவனை நினைத்தால் உள்ளத்தில் உவகைத் தேன் ஊற்றெடுத்து பெருக வேண்டும். பெருகும்.

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

நீறு பட்டே = திரு நீறு அணிந்து

ஒளி காட்டும் = ஒளி விடும்

பொன் மேனி நெடுந்தகையே = பொன்னை போன்ற மேனியைக் கொண்ட பெருமை கொண்டவனே