Sunday, February 16, 2014

கம்ப இராமாயணம் - நாள் படா மறைகள்

கம்ப இராமாயணம் - நாள் படா மறைகள் 



அனுமன் , இராமனையும் இலக்குவனையும் முதன் முதல் சந்திக்கிறான். அவர்களுக்குள் அறிமுகம் நடக்கிறது. இராமனும் அனுமனும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கிறார்கள்.

அனுமன் தன் விஸ்வரூபத்தை காட்டுகிறான்.

இராமாயணத்தில் இராமனுக்கு விஸ்வரூபம் இல்லை. அனுமனுக்கு இருக்கிறது.

அனுமனின் விஸ்வரூபத்தை கண்டபின் , இராமன் அனுமனை பரம்பொருள் என்கிறான். பரம்பொருள் என்று நேரடியாக கூறவில்லை....பரம்பொருள் தத்துவம் என்று கூறுகிறான்.

அருமையான பாடல்


தாள்படாக்கமலம் அன்ன தடங் கணான், தம்பிக்கு, 'அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர் படாது ஆகி, என்றும்
நாட்படா மறைகளாலும், நவை படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய! குரக்கு உருக்கொண்டது' என்றான்.


பொருள்

தாள்படாக்கமலம் அன்ன தடங் கணான் = தாள் என்றால் தண்டு. இராமனின் கண்கள் தாமரை மலர் போல் இருக்கிறது. ஆனால் தண்டு இல்லாத தாமரை. ஏன் என்றால், தண்டு உள்ள தாமரை ஒரே இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும். இராமனோ எல்லா இடங்களிலும் இருக்கிறான். எனவே, தாள் படா கமலம்.


 தம்பிக்கு = இலக்குவனுக்கு

அம்மா! = ஆச்சரியக் குறி

கீழ்ப் படாநின்ற நீக்கி = கீழான குணங்களை நீக்கி

கிளர் படாது ஆகி = ஒளி கெடாமல். கிளர்ந்து எழும் ஞான ஒளி குறையாமல்

என்றும் = என்றென்றும்

நாட்படா மறைகளாலும் = காலத்தால் அழியாத, என்றும் புதுமையாக இருக்கும் வேதங்களாலும்

 நவை படா ஞானத்தாலும் = குற்றம் இல்லாத ஞானத்தாலும்

கோட்படாப் பதமே = அறிந்து கொள்ள முடியாத பதமே

ஐய! = ஐயனே

குரக்கு உருக்கொண்டது' என்றான் = குரங்கு உருக் கொண்டது என்றான்

வேதங்களாலும் அறிந்து கொள்ள முடியாத பாதம் அனுமனின் பாதம்.

சொல்லியது இராமன்.


No comments:

Post a Comment