Friday, April 25, 2014

நீத்தல் விண்ணப்பம் - கண் நெருப்பில் விழுவேனை

நீத்தல் விண்ணப்பம் - கண் நெருப்பில் விழுவேனை 



பெண்களின் கண்கள் நெருப்பு போன்றவை. பார்த்ததும் பற்றிக் கொள்ளும். ஆணின் மனம் மெழுகு போல், வெண்ணை போல் உருகும் அந்த கண் எனும் நெருப்பில்.

உருகும் மெழுகு பொம்மைக்கு தன்னை எப்படி காப்பாற்றிக்  கொள்வது என்று தெரியாது. அது போல மணி வாசகர் இருக்கிறார்.

நான் உருகுகிறேன், என்னை காப்பாற்று என்று இறைவனிடம் வேண்டுகிறார்.அது  மட்டும் அல்ல, ஒரு முறை காப்பாற்றி விட்டு விட்டால் மீண்டும் அங்கு தான் போவேன். என் குணம் அப்படி. எனவே, நான் அவ்வாறு போகாமால் இருக்க என்னை உன் அடியவர்கள் மத்தியில் விட்டு விடு. அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள் என்று  கூறுகிறார்.

அவராலேயே  முடியவில்லை.

பாடல்

முழுதயில் வேற்கண் ணியரென்னும் மூரித் தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வானத் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனை விடேலுடை யாய்உன்னைப் பாடுவனே.


பொருள்

முழு = முழுவதும்

அயில் = கூர்மையான

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே

என்பார் அருணகிரி நாதர்.

வேற் = வேல் போன்ற

கண்ணியரென்னும் = கண்களை கொண்ட பெண்கள் என்னும்

மூரித் = மூண்டு எழும்

தழல் = தீயில்

முழுகும் = முழுகும்

விழுதனை யேனை = வெண்ணை போன்றவனை

விடுதி கண் டாய் = விட்டு விடாதே

நின் = உன்னுடைய

வெறி மலர்த் தாள் = மணம் பொருந்திய மலர் போன்ற திருவடிகளில்

தொழுது = வணங்கி

செல் = செல்கின்ற

வானத் தொழும்பரிற் = வானத்தில் உள்ள அடியவர்கள் 

கூட்டிடு = என்னை சேர்த்து விடு 

சோத்து = வணங்கி

தெம்பிரான் =  எம்பிரான்

பழுது = குற்றங்கள்

செய் வேனை = செய்கின்ற என்னை

விடேலுடை யாய் = விடாமல் காக்கின்றவனே

உன்னைப் பாடுவனே = உன்னை நான் பாடுவேனே

மண்ணாசையும், பொன்னாசையும் விட்டு விடும்.

பெண்ணாசை விடாது  போலிருக்கிறது.

ஆண்டிகளையும் ஆட்டிவிக்கிறது.

துறவிகளையும் துரத்திப்  பிடிக்கிறது.

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருவது பெண் என்று வள்ளுவரும் ஜொள்ளி இருக்கிறார்.


No comments:

Post a Comment