Monday, June 9, 2014

கோயில் மூத்த திருப்பதிகம் - மேய்ப்பன் இல்லாத மாடு போல

கோயில் மூத்த திருப்பதிகம் - மேய்ப்பன் இல்லாத மாடு போல 


மேய்ப்பவன் இல்லாத மாடு என்ன செய்யும் ? அது பாட்டுக்கு போகும், கண்ணில் கண்டதை தின்னும், நிற்கும், போகும் இடம் தெரியாமல் அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும். ஒதுங்க இடம் கிடையாது.

அது போல நான் அலைகிறேன். என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. தினமும், வேலைக்குப் போகிறேன், சம்பாதிக்கிறேன், செலவழிக்கிறேன்...சேமிக்கிறேன்...எதுக்கு இதெல்லாம் செய்கிறேன் என்று ஒன்றும் தெரியவில்லை. நீ எனக்கு அருள்வாய் என்று நினைத்து இருந்தேன். அதுவும் பெரிய ஏமாற்றமாகப் போய் விடும் போல் இருக்கிறது. தயவு செய்து என்னை வா என்று அழைத்து எனக்கு அருள் புரிவாய் என்று குழைகிறார் மணிவாசகர்

பாடல்

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென் றருளாயே.



சீர் பிரித்த பின்

இரங்கும் நமக்கு அம்பலக்கூத்தன் என்றென்றே ஏமாந்து இருப்பேனை 
அருங் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார் இல்லாத மாடு ஆவேனோ நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று  அருளாயே.


பொருள்

இரங்கும் நமக்கு = நம் மேல் இரக்கப்பட்டு

அம்பலக்கூத்தன் = அம்பலத்தில் ஆடும் கூத்தன்

என்றென்றே = என்று என்றே. எப்போது எப்போது என்று

ஏமாந்து இருப்பேனை = ஏமாந்து இருப்பேனை
 
அருங் கற்பனை = அருமையான மந்திரம்

கற்பித்து = சொல்லித்தந்து

ஆண்டாய் = ஆட்கொண்டாய்

ஆள்வார் = மேய்ப்பவன்

இல்லாத மாடு ஆவேனோ = இல்லாத மாடு போல ஆவேனோ?

நெருங்கும் = உன் அருகில் இருக்கும்

அடியார்களும் = அடியவர்களும்

நீயும் = நீயும்

 நின்று  = இருந்து

நிலாவி = விளங்கி

விளையாடும் = விளையாடும்

மருங்கே சார்ந்து வர = அருகில் சேர்ந்து வர

எங்கள் வாழ்வே = எங்களின் வாழ்க்கை போன்றவனே

வா என்று  அருளாயே = வா என்று எங்களுக்கு அருள் புரிவாயே

மாடு என்பதற்கு செல்வம் என்று ஒரு பொருளும் உண்டு.  செல்வத்தை சரியான வழியில்   பராமரிக்கா விட்டால் அதனால் வரும் தீமைகள் அதிகம். 

நமக்கு கிடைத்த வாழ்க்கை ஒரு மிகப் பெரிய செல்வம். அதை சரி வர பயன் படுத்த  வேண்டும். 

செய்கிறோமா ?


1 comment:

  1. நல் வாழ்வு வாழ்வது என்றால் என்ன? சும்மா பூசை, புனஸ்காரம், கோவிலுக்குப் போவது, ... இதெல்லாம் மட்டும்தானா? இந்த மாதிரிப் பாடலில் ஏதோ குறைபாடு இருப்பதாகத் தோன்றவில்லையா? "சும்மா இறைவனைப் பூசை பண்ணு" என்றால் அதெல்லாம் ஒரு நல்ல வாழ்வா?! சக மனிதர்களுக்குத் தொண்டு செய்வது அதைவிட நூறு மடங்கு மேல். "ஏழைகளுக்குச் செய்யும் பணியை, இறைவனுக்குச் செய்யும் பணியாக எண்ணுகிறேன்" என்று மகாத்மா காந்தி சொன்னது போல, நூறு மணி நேரம் இறைவனுக்குப் பூசை செய்வதை விட, ஒரு மணி நேரம் யாருக்காவது உதவி செய்வது மேல்.

    ReplyDelete