Friday, August 8, 2014

சிவ புராணம் - ஈசன் அடி போற்றி - பாகம் 2

சிவ புராணம் - ஈசன் அடி போற்றி - பாகம் 2 


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! 15 

பொருள்

ஈசன் அடிபோற்றி = ஈசனின் திருவடிகள் போற்றி

எந்தை அடிபோற்றி = என் தந்தையின் அடிகள் போற்றி

தேசன் அடிபோற்றி = ஒளி வடிவானவனின் அடி போற்றி

 சிவன் சேவடி போற்றி = சிவனின் சிறந்த அடிகள் போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி = அன்பில் நின்ற தூயவனின் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி =  பிறப்பு என்ற மாயத்தை அறுக்கும் மன்னவனின் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி = சிறந்த திருப் பெருந்துரையுள் உள்ள நம்முடைய தேவனின் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி = தெவிட்டாத இன்பம் அருளும் மலை போன்றவனே போற்றி

சிவனைப் போற்றி  பாடுகிறார். இதில் வேறு என்ன இருக்கிறது. மேலே செல்வோம்  என்று அவசரப் படக் கூடாது. 

மணிவாசகரின் தமிழ் அவ்வளவு எளிய தமிழ். கவிதை நாவில்   கற்கண்டாய் கரையும்.  எப்போது வாயில் போட்டோம், எப்போது கரைந்தது , எப்போது உள்ளே  சென்றது என்று தெரியாது.

வாசித்துக் கொண்டே மேலே சென்று விடுவோம், அதன் ஆழ்ந்த அர்த்தங்களை  அறியாமலேயே.

இதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

----------------------

எத்தனை போற்றி சொல்கிறார் ?


  1. ஈசன் அடிபோற்றி 
  2. எந்தை அடிபோற்றி 
  3. தேசன் அடிபோற்றி 
  4. சிவன் சேவடி போற்றி 
  5. நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
  6. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
  7. சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி  
  8. ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
மொத்தம் எட்டு போற்றி சொல்கிறார்.

அது என்ன எட்டு கணக்கு ? ஒரு ஐந்து, அல்லது பத்து சொல்லி இருக்கலாம். அது என்ன எட்டு ?

அது அப்படி  இருக்கட்டும்.

இறைவணக்கம் சொல்ல வந்த வள்ளுவர்

கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.


கோளில் பொறியில் குணம் இலவே எண் குணத்தான் 
தாளை வணங்காத் தலை 

எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்;
கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல - பயன் படாதனவாம்.

அதாவது, கண் இருக்கிறது, ஆனால் இல்லை, காது இருக்கிறது ஆனால் கேட்காது என்றால் எப்படி இருக்குமோ அது போல எட்டு குணங்களை உடைய இறைவனை வணங்காத தலையும்  என்கிறார். அப்படிப் பட்ட தலைகள் இருந்தும் ஒரு பயனும் இல்லை. காணாத கண்ணும், கேளாத செவியும் போல, இறைவனை வணங்காத தலையும்.

எது என்ன எட்டு குணம் ?

இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் சொல்கிறார்

எண்குணங்களாவன:


  1. தன்வயத்தன் ஆதல். அதாவது தனக்கு மேல் ஒருவன் இல்லாத நிலை ,
  2. தூய உடம்பினன் ஆதல், 
  3. இயற்கை உணர்வினன் ஆதல், 
  4. முற்றும் உணர்தல், 
  5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், 
  6. பேரருள் உடைமை, 
  7. முடிவு இல் ஆற்றல் உடைமை, 
  8. வரம்பு இல் இன்பம் உடைமை 


இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது.

சரி, இதற்கும் சிவ புராணத்தில் வரும் எட்டு போற்றிகளுக்கும் என்ன தொடர்பு ?



  1. ஈசன் என்றால்  அரசன், தலைவன்.
  2. எந்தை என்றதனால் அருள் உடையவன். 
  3. தேசன் என்றதனால் தூய உடம்பைக் கொண்டவன்  , 
  4. சிவன் என்றதனால் இயற்கை உணர்வின் 
  5. நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன் 
  6. பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றல் உடையவன் 
  7. தேவன் என்றதனால் முற்றும் உணர்ந்தவன்  
  8. ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பம் உடையவன் 


என்ற இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார்.


 இராமன் அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தான். அதற்கு முன்னால் தாடகை என்ற அரக்கியை  கொன்றான்.

அரக்கியை கொன்றது அவன் கை வண்ணம்.

அகலிகையை காத்தது அவன் கால் வண்ணம்.

விஸ்வாமித்ரர் சொல்கிறார் ....


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
   இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
   துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
   மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
   கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’

எத்தனை வண்ணம் ?


  1. இவ்வண்ணம் 
  2. நிகழ்ந்த வண்ணம்;
  3. உய்வண்ணம்  அன்றி 
  4. துயர் வண்ணம் உறுவது உண்டோ?
  5. மை வண்ணத்து அரக்கி போரில்  
  6. மழை வண்ணத்து அண்ணலே! உன்
  7. கை வண்ணம் அங்குக் கண்டேன்;
  8. கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’


எட்டு வண்ணங்களை காட்டி இராமனை போற்றுகிறார்  கம்பர்.

பெரியவர்கள் சொல்லும் ஒவ்வொன்றிக்கும் பின்னால் ஆழ்ந்த அர்த்தங்கள்  இருக்கும்.

சிந்தித்துப்  பொருள் கொள்ள வேண்டும்.

காரண காரியம் இல்லாமல் அவர்கள் எதையும் சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் ஆழ்ந்த பொருள் பொதிந்து இருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது.


சைவ ஆகமங்கள், திருக்குறள், சிவ புராணம், கம்ப இராமாயணம் என்று எல்லாம் ஒன்றைத்தான் சொல்கின்றன . இவை ஒன்றுக்கொன்று காலத்தால்  வேறுபட்டவை.  இருந்தும், இவை ஒரே கருத்தை சொல்கின்றன.

மேலும் சிந்திப்போம். ....


3 comments:

  1. உன் தமிழுக்கு மொத்த உலகத்தையும் பரிசாக தரலாம். நாங்கள் என்ன தர போகிறோம். even மாணிக்கவாசகரே இவ்வளவு நினைத்து எழுதி இருப்பாரோ என்பது சந்தேகமே.

    ReplyDelete
  2. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை எல்லாம் விடுத்து, தமிழ்ச் சுவையைப் பருக வேண்டுமானால் உன் blog படிக்க வேண்டும். என்ன அற்புதமான உரை! நன்றி.

    ReplyDelete
  3. எட்டுக்கான விளக்கம் நன்று.

    ஆறு தடவை வாழ்கவும் ஐந்து தடவை வெல்கவும் உள்ளன.
    இதற்கு ஏதும் விளக்கம் தரவும்.

    ReplyDelete