Wednesday, August 13, 2014

இராமாயணம் - மகன் எனும் காதலன்

இராமாயணம் - மகன் எனும் காதலன் 


போரில் இறந்து போனான் இந்திரஜித்து. அந்த செய்தி கேட்டு புலம்புகிறான் இராவணன்.

மகன் என்று கூட சொல்ல வில்லை, காதலன் என்கிறான். அவ்வளவு அன்பு மகன் மேல்.

மகனே மகனே என்று பல முறை வாய் விட்டு அழைத்தான்.  ஒரு மானிடன் என் காதலனை கொன்று விட்டானே என்று அரற்றுகிறான்.

சீதை மேல் கொண்ட காமம், மகனை பலி கொண்டது.

இந்திரசித்து இறந்தான் என்ற செய்தி சொன்ன தூதர்களை வெட்டினான் இராவணன். அவர்களை கெட்டவர்கள் என்கிறான். கொன்றது மானிடர்கள் என்கிறான்.

அவன் அறிவுக்கு எட்டவில்லை - இத்தனை அழிவுக்கும் காரணம் அறம் பிறழ்ந்த அவன் வாழ்கை முறை என்று.


யார் யாரையோ நோகிறான்.

எல்லா துன்பத்திற்கும் காரணம் - எங்கோ அறம் பிறழ்ந்த வாழ்கை முறைதான். உடல் துன்பத்திற்கும், மன துன்பத்திற்கும் காரணம் அறம் தப்பிய வாழ்கை.

இராவணனுக்குத் தெரியவில்லை. இலக்குவன் தன் மண்கனை  கொன்றான் என்று நினைக்கிறான்.

நமக்கு வரும் துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் - நெறி அல்லா நெறி சென்ற வாழ்கை.

பாடல்

‘'கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு
கட்ட மானிடன் கொல்ல, என் காதலன்
பட்டு ஒழிந்தனனே!' எனும்; பல் முறை
விட்டு அழைக்கும்; உழைக்கும்; வெதும்புமால்.

பொருள்

கெட்ட தூதர் = என் மகன் இறந்தான் என்ற செய்தியை சொன்ன தூதர்கள் கெட்டவர்கள் 

கிளத்தினவாறு = சொல்லியவாறு

ஒரு கட்ட மானிடன் = துன்பம் தரும் ஒரு மானிடன்

கொல்ல = கொல்ல

என் காதலன் = என் காதலன்

பட்டு ஒழிந்தனனே!' = இறந்து போனானே

எனும்; = என்று சொல்வான்

பல் முறை = பல முறை

விட்டு அழைக்கும் = (வாய்) விட்டு அழைப்பான்

உழைக்கும்; வெதும்புமால் = வருந்துவான், நொந்துகொள்வான்



2 comments:

  1. மகனைக் காதலன் என்று சொல்ல வேண்டுமானால் எவ்வளவு ஆசை மகன் மேல் இருந்திருக்க வேண்டும்! அருமையான பாடல்.

    ReplyDelete
  2. காதலன் என்னும் சொல் மகன் என்னும் பொருளிலேயே கம்ப இராமாயணத்தில் உள்ளது

    ReplyDelete