Sunday, September 21, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 1

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 1 


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே 

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே

என்பார் திருஞானசம்பந்தர்.




No comments:

Post a Comment