Sunday, September 14, 2014

திருவிளையாடற் புராணம் - வந்தி அறிமுகம்

திருவிளையாடற் புராணம் - வந்தி அறிமுகம் 


வரலாறு என்பது அரசர்களின், மந்திரிகளின், சேனாதிபதிகளின் வாழ்க்கையைப் பற்றி பேசிய அளவுக்கு சாதாரண மக்களைப் பற்றிப் பேசுவது இல்லை.

யானைகள் சண்டை இட்டால், இடையில் கிடந்து நசுங்கும் செடிகளைப் பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள்.

மாணிக்க வாசகரின் பக்தியை, அவரின் தமிழை உலகுக்கு காட்ட நினைத்த இறைவன், வைகையில் வெள்ளப் பெருக்கு  வர  வைத்தார்.

வீட்டுக்கு ஒருவர் வந்து ஆற்றின் கரையை பலப் படுத்த வேண்டும் என்பது அரசனின் ஆணை.

தண்டோரா போட்டு சொல்லியாகி விட்டது.

அப்போது.....

அந்த ஊரில் (மதுரையில்) எல்லோருக்கும் ஆள் கிடைத்து விட்டது, ஒருத்தியைத் தவிர. அவள் பெயர் வந்தி . அவள் மதுரையின் தென் கிழக்கு திசையில் வசிப்பவள். மிக வயதானவள்.

பாடல்


இந் நிலை ஊரில் உள்ளார் யாவர்க்கும் கூலி யாளர் 
துன்னி முன் அளந்த எல்லைத் தொழில் முறை மூண்டு 
                                                       செய்வார் 
அந்நிலை நகரின் தென் கீழ்த் திசை உளாள் அளவில் 
                                                       ஆண்டு 

மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி பேர் வந்தி என்பாள்.


பொருள்

இந் நிலை = அந்த நிலையில்

ஊரில் உள்ளார் யாவர்க்கும் = ஊரில் உள்ள அனைவர்க்கும்

கூலி யாளர் = கூலி வேலை செய்பவர்கள் கிடைத்து, அவர்களும்

துன்னி = செறிதல் (ஒன்றாகக் கூடுதல்)

முன் அளந்த எல்லைத் = முன்பே யார் யாருக்கு எந்த இடத்தில் கரையை அடைக்க வேண்டும் என்று அளந்து கொடுத்த எல்லையில்

தொழில் முறை மூண்டு = தொழில் செய்ய ஆவலுடன்

செய்வார் = செய்வார்

அந்நிலை = அந்த நிலையில்

நகரின் = மதுரை நகரின்

தென் கீழ்த் திசை உளாள் = தென் கிழக்கு திசையில் உள்ளவள்

அளவில் = காலத்தில்

ஆண்டு மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி = ஆண்டுகள் பல கழிந்த நரை மூதாட்டி ஒருத்தி

 பேர் வந்தி என்பாள் = அவள் பேர் வந்தி.



No comments:

Post a Comment