Sunday, September 28, 2014

நளவெண்பா - என்றும் நுடங்கும் இடை

நளவெண்பா - என்றும் நுடங்கும் இடை 


தமயந்தியின் இடை மிக மிகச் சிறியது என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று யோசிக்கிறார் புகழேந்தியார்.

அவள் கூந்தலில் மலர் சூடி இருக்கிறாள். அப்போதுதான் பறித்த மலர்கள். அந்த மலர்களில் இருந்து தேனை உண்ண வண்டுகள் வருகின்றன.

அந்த வண்டுகள் தங்கள் சிறகுகளை அடிக்கின்றன. அந்த சிறகில் இருந்து காற்று வருகிறது. அந்த காற்று தமயந்தியின் தலை மேல்  உள்ள பூவின் மேல் மோதுகிறது. அதனால் அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது, வளைகிறது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து அவள் இடை நாளடைவில் தேய்ந்தே போயிற்றாம்.

பாடல்

என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசம்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.


பொருள்


என்றும் = எப்போதும்

நுடங்கும் = காற்றில் பட படத்தல்

இடைஎன்ப = எடை என்று சொல்லப் படுவது

ஏழுலகும் = ஏழு உலகிலும்

நின்ற = நிலைத்து நிற்கும்

கவிகை = குடையின்  (வெண்கொற்றக் குடை )

நிழல்வேந்தே = நிழலில் கொண்ட அரசனே

ஒன்றி = ஒன்றுபட்டு

அறுகால் = ஆறு கால்களைக் கொண்ட

சிறுபறவை = சிறு பறவை (வண்டு)

அஞ்சிறகால் = அசையும் சிறகால்

வீசம் = வீச

சிறுகாற்றுக் = வரும் சிறிய காற்றுக்கு

காற்றாது = ஆற்றாது , தாங்க முடியாமல்

தேய்ந்து = தேய்ந்து (விடும்)


1 comment:

  1. ஆஹா, மிகைப் படுத்திக் கூறல் இன்றால் இதுதான்!

    ReplyDelete