Saturday, October 18, 2014

திருவிளையாடற் புராணம் - இணை கடந்த திருத் தோள் மேல்

திருவிளையாடற் புராணம் - இணை கடந்த திருத் தோள் மேல் 


எளியோரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இடுப்பில் ஒரு அழுக்கான துணி, தலையில் ஒரு சும்மாடு, தோளில் முனை மழுங்கிய ஒரு மண் வெட்டி.

இப்படி ஒரு ஆளைக் கண்டால் நமக்கு என்ன தோன்றும். ஏதோ ஒரு கூலி ஆள் என்று நினைப்போம். அதற்கு மேல் நினைக்க என்ன இருக்கிறது.

இறைவன் அப்படித் தான் வந்தான்.  

முன்பு ஒரு நாள் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது.

கரையை உயர்த்த வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப  வேண்டும் என்று பாண்டிய மன்னன் அறிவித்து விட்டான்.

மதுரையம்பதியில், பிட்டு விற்று வாழும் ஒரு வயதான கிழவி இருந்தாள் . அவளுக்கு யாரும் இல்லை. என்ன செய்வதென்று தவித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது....

அழுக்கான பழந்துணி உடுத்து, தலையில் ஒரு சும்மாடை சுமந்து கொண்டு, தோளில் ஒரு மண் வெட்டியோடு இறைவன் வந்தான்...


பாடல்

அழுக்கடைந்த பழந்துணியொன் றரைக்கசைத்து 
                                விழுத்தொண்டர்
குழுக்கடந்த விண்டைநிகர் சுமையடைமேற் கூடைகவிழ்த்
தெழுக்கடந்து திசைகடந்திட் டிணைகடந்த 
                                திருத்தோண்மேன்
மழுக்கடைந்து விளங்கியவாய் மண்டொடுதிண் படையேந்தி.

பொருள்

அழுக்கடைந்த = அழுக்கு ஏறிய

பழந்துணி = பழைய துணி

யொன் = ஒன்றை

றரைக்கசைத்து = அரைக்கு அசைத்து (இடுப்பில் கட்டி ) 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 

விழுத்தொண்டர் = சிறந்த தொண்டர்கள்

குழுக்கடந்த = குழுக்கள் தந்த

விண்டை நிகர் = இண்டை மாலை ஒத்த

சுமையடை = தலைச் சுமையின்

மேற் = மேல்


கூடை கவிழ்த் =  கூடை ஒன்றை கவிழ்த்து

தெழுக் கடந்து = எழு கடந்து (எழு என்றால் தூண் என்று சொல்கிறார்கள். சரியாகத் தெரியவில்லை)


திசைகடந்திட் டிணைகடந்த = திசை கடந்து + இணை கடந்து = திசைகளை கடந்து, அதற்கு இணை என்று சொல்ல முடியாமல், அனைத்தையும் கடந்து நின்று 


திருத்தோண்மேன் = புனிதமான தோள்கள் மேல்

மழுக்கடைந்து விளங்கிய = மழுக்கென்று, முனை மழுங்கி 

வாய் = முனை

மண்டொடுதிண் படையேந்தி = மண் வெட்டும் திண்மையான கருவியை ஏந்தி


யாருக்குத் தெரியும், எந்த கூலித் தொழிலாளி வடிவில் அவன் இருக்கிறானோ. 


2 comments:

  1. You're great !!!! continue this service

    ReplyDelete
  2. "கரையை உயர்த்த வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப வேண்டும் என்று பாண்டிய மன்னன் அறிவித்து விட்டான்" - யாரால் என்ன செய்ய முடியும் என்று வித்தியாசம் இல்லாமல் இப்படி ஒரு மன்னன் உத்தரவு போடலாமா?! அது சரியான முறையா?

    ReplyDelete