Monday, October 20, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலவியே கருதி ஓடினேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலவியே கருதி ஓடினேன் 


தவறு செய்யாதவர்கள் யார் இங்கே ?

செய்த தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கிறது ?

செய்த தவறுகளை ஞாயப்படுத்துகிறோமே தவிர அது தவறு என்று ஒப்புக் கொள்வதில்லை.

பெண்கள் பின்னால் அலைந்தேன் என்று தைரியமாக ஒப்புக் கொள்கிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு பக்கம் வாழ்க்கையில் வருத்தம். துன்பம். இதற்கிடையில் பெண்களோடு சவகாசம். அந்த இளம் பெண்கள் தரும் இன்பமே பெரிதென்று அவர்கள் பின்னால் அலைவது. அப்படி அலையும் நாளில் ஒரு நாள் உண்மை புரிகிறது. இந்த பெண்கள் தரும் இன்பம் நிலையானது அல்ல என்று அறிந்து கொள்கிறார். வாழ்வின் பெரிய நிலையைத் தரக் கூடியது நாராயாணா என்ற நாமமே என்று அறிந்து கொண்டேன் என்கிறார்.

பாடல்

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.


பொருள்

வாடினேன் = வாடினேன். செடி நீர் இல்லாமல் வாடும். நீர் தெளித்தால் மீண்டும் தளிர்க்கும். அது போல, இறைவனின் அருள் இன்றி வான்டினேன். அவன் அருள் கிடைத்தால் வாட்டம் நீங்கும் என்ற பொருள் பட வாடினேன் என்றார். 

வாடி வருந்தினேன் = வாடி வருந்தினேன்

மனத்தால் = மனத்தால். உடல் வருத்தம் மட்டும் இல்லை, மன வருத்தமும் உண்டு.

பெருந்துயரிடும்பையில்  பிறந்து = பெரிய துன்பமான துக்கத்தில் பிறந்து

கூடினேன் = கூடினேன்

கூடி = கூடிய பின்

யிளையவர்த்தம்மோடு = இளமையான பெண்களோடு

அவர்த்தரும் கலவியேகருதி = அவர்கள் தரும் இன்பமே வேண்டும் என்று நினைத்து


ஓடினேன் = அவர்கள் பின்னால் ஓடினேன்

ஓடியுய்வதோர்ப் = ஓடியபின், பிழைக்கும் ஒரு

பொருளால்= பொருளால்

உணர்வெனும் = உணர்வு என்ற

பெரும் பதம் திரிந்து = பெரிய பதத்தை , அலைந்து திரிந்த பின்
,
நாடினேன் = நாடினேன்


நாடி நான் கண்டுகொண்டேன் = நாடி நான் கண்டு கொண்டேன்


நாராயணா வென்னும் நாமம் = நாராயணா என்ற நாமத்தை

.
சிற்றின்பம் சலிக்கும். அதில் சலித்த மனம், பேரின்பத்தை நோக்கி  . தானே நகரும்.

நாடினேன் என்றார். அவரே தேடித் போனார்.

பெண்கள் பின்னால் அலைந்தவர், தானே நாடி கண்டு கொண்டேன் என்கிறார்.

செய்த தவறுகளை ஒப்புக் கொள்ளும் போது மன அழுத்தம் குறைகிறது.  வருத்தம்  விலகுகிறது.

மனம் இலேசாகிப் போகிறது.

எல்லோரும் அறிய சொல்லாவிட்டாலும்,  உங்கள் உயிர் நண்பர்களிடம் சொல்லலாம் தானே...

சிந்தித்துப் பாருங்கள்.


No comments:

Post a Comment