Thursday, October 9, 2014

வில்லி பாரதம் - மகா பாரத யுத்தம், யார் காரணம்

வில்லி பாரதம் - மகா பாரத யுத்தம், யார் காரணம் 


மகா பாரத யுத்தம் நடந்தது. பல்லாயிரக்கானவர்கள் மாண்டார்கள்.

இந்த உயிர் இழப்புக்கு யார் காரணம் ?

பொறாமை குணம் கொண்ட துரியோதனனா ?

அவனைக் கண்டு எள்ளி நகையாடிய பாஞ்சாலியா ?

கோப குணம் கொண்ட அர்ஜுனன் மற்றும் பீமனா ?

சூதாடிய தர்மனா ?

வஞ்சனை செய்த சகுனியா ?

வாய் மூடி நின்ற பீஷ்மனா ? துரோணனா ?

வஞ்சத்தை வஞ்சத்தால் முறியடித்த கண்ணனா ?

எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றாலும்...இவை அனைத்திற்கும் பின் நின்றது அறம். அறம் தப்பியவர்களை அறம் தண்டித்தது.

அதை அறம் என்று சொல்லுங்கள், இறை என்று சொல்லுங்கள், இயற்கை என்று சொல்லுங்கள்.

அந்த அறம் நின்று கொன்றது.

போருக்கு முன் கண்ணன் தூது போக நிற்கிறான்.

பாண்டவர்களிடம் அவர்கள் எண்ணத்தை கேட்கிறான்.

தர்மன் சமாதனம் வேண்டும் என்கிறான்.

அர்ஜுனனும், பீமனும், நகுலனும் சண்டை வேண்டும் என்கிறார்கள்.

சகாதேவன், "கண்ணா என்னிடம் என்ன கேட்கிறாய். நீ நினைத்தை செய்" என்கிறான்.

கடைசியில் பாஞ்சாலியிடம்வருகிறான் கண்ணன்.

பாஞ்சாலி கதறுகிறாள்....

"இரணியன் கோபம் கொண்டு தூணைப் பிளந்த போது அதில் இருந்து வந்து பிரகலாதனை காத்தாய். ஆதி மூலமே என்று அழைத்த ஒரு யானைக்குக் கூட அருள் புரிந்தாய் கண்ணா " எனக்கு அருள் புரிய மாட்டாயா என்று கதறுகிறாள்.

பாடல்

'சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்!
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

பொருள்

'சாலக் = அதிகமாக

கனகன் = பொன் நிறம் கொண்ட (கனகம் = பொன்) இரணியன்.

தனி மைந்தனை = சிறந்த மைந்தனை (பிரகலாதனை)

முனிந்த காலத்து = கோபித்த காலத்து

அவன் அறைந்த = அவன் பிளந்த

 கல்-தூணிடை வந்தாய்! = கல் தூணில் இருந்து வந்தாய் (வந்து அவனுக்கு அருள் புரிந்தாய் )


மூலப் பேர் = ஆதி மூலமே என்ற பெயரைக்  

இட்டு = கொண்டு

அழைத்த = கூப்பிட்ட

மும் மத மால் யானைக்கு = யானைக்கு

நீலக் = நீல நிறக்

கிரிபோல் = மலை போல்

முன் நின்ற நெடுமாலே! = முன்னால் வந்து நின்ற நெடிய திருமாலே

என்று ஆரம்பிக்கிறாள்...

அவள் என்ன கூறினாள் என்று மேலும் பார்ப்போம்.



1 comment:

  1. அறம் தப்பியவர்களை அறம் தண்டித்தது.

    புரியலை. மகாபாரதத்தில் ஏது அறம்?

    பாண்டவர்களுக்கு ராஜ்யத்தில் உரிமையே கிடையாது. சூர்யன், வாயு, இந்திரன் என்று தேவர்களுக்கு பிறந்தவர்கள் பாண்டவர்கள். அவர்களுக்கு குரு வம்ச ராஜ்யத்தில் எப்படி உரிமை இருக்கும்? முறையான வாரிசு துரியோதனன்.

    போனா போகுதுன்னு கொடுத்த நிலத்தையும், a legal adult, சுயநினைவோட, புத்தி சுவாதீனத்தோட, அத்தனை conditions க்கு ஒத்துக்கிட்டு விளையாடி ஞாயமா தோத்து தொலைத்தாச்சு. தாயக்கட்டை was tampered என்பது எல்லாம் bat pitch ball சரியில்லை என்று தோற்று போனவர்கள் பாடும் பல்லவி. it was a fair game and they lost. Thats all. பீஷ்மர் லிருந்து விதுரர் வரை யாருமே அதை தவறு என்று சொல்ல வில்லை.

    தப்பு எல்லாம் பாண்டவர்கள் மேல்.
    ஒரு மனிதனை கேலி பண்ணுவது அதுவும் ஒரு இளவரசனை, அதுவும் பலர் முன்னாள், அதுவும் அவர்களின் பெற்றோரின் உடற் குறையை வைத்து எள்ளி நகையாடியது தவறு. அப்பவே வெட்டி போடாமல் முறையாக சூதாட்டத்க்கு அழைத்து விளையாடி தோற்றதால் காட்டுக்கு அனுப்பினான். And he took such big risk also. He could have lost the game! இது எப்படி தவராகும்?

    AT least kauravaas were decent people. எல்லோரும் சமமாக பிரித்து கொள்ளுங்கள் என்று காந்தாரி சொல்லவில்லை. அதுதாண்டா சாக்குன்னு duryodhanan didnt interpret it to fancy his perversion.
    ஒருவேளை துச்சாதனன் வென்று வந்த ஒரு பெண்ணை கௌரவர்கள் பங்கு போட்டிருந்தால் எவ்வளவு குரல் எதிர்த்து கிளம்பி இருக்கும்? உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

    அதுவும் பாண்டவர்கள் த்ரோபதியை பங்கு போட்டதற்கு உள்ள justification பெண்களின் உணர்வுகளுக்கு உச்சகட்ட இழுக்கு.

    குருஷேத்ர போரில் பீஷ்மர், விதுரர், கிருபாச்சாரியார் etc., என்று எல்லோரும் துரியோதனன் பக்கம் என்றால் ஒருவேளை அவன் தான் சரியோ என்னவோ? அத்தனை நல்லவர்களுமா தவறுக்கு துணை போவார்கள்?

    ராவனனாவது தேவர்களை துன்புறுத்தினான், பிறன் மனைவியை அபகரித்தான் தண்டிக்கபட்டான்.அறம் வென்றது என்றால் ஞாயம்.
    ஒரு ஷத்ரிய தர்மபடி தனக்கு உரிமையான் ஒரு நாட்டுக்காக போராடுவது எப்படி தவறாகும்? தனக்கு கொஞ்சம் கூட உரிமையே இல்லாத ஒரு நாட்டுக்காக பீஷ்மரிலிருந்து கௌரவர்களின் கடைசி குழந்தை வரை கொன்று குவித்தது எப்படி அறமாகும்?

    ReplyDelete